உடல்நலத்தை பாதுகாக்க புதிய டயட் முறை
தங்களது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். உடல் மெலிந்து காணப்படவேண்டும் என்பதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றுவார்கள். அத்தகைய ஆர்வலர்களுக்கு மத்தியில் இப்போது ஒரு வித்தியாசமான உணவுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாரத்தின் ஏழு நாட்களில் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளையும் உண்ணலாம், ஆனால், கடைசி இரண்டு நாட்களும் 600 கலோரிக்கு மேற்பட்டு உண்ணக்கூடாது என்பதே அந்தப் புதிய முறையாகும். இங்கிலாந்து மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த உணவுமுறை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
ஃபாஸ்ட் டயட் அல்லது 5:2 என்று அறியப்படும் இந்த உணவுமுறையை மிமி ஸ்பென்சர் மற்றும் மைக்கேல் மோஸ்லி என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்து நாட்டில், விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவில், இதுவரை பனிரெண்டு முறைக்கு மேல் மறு பதிப்புகள் போடப்பட்டுள்ளன. இருவரும் நடத்திய ஆய்வு, உணவிற்கு இடையிலான இடைவெளிகள் அதாவது உண்ணாவிரதம் இருப்பது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவைக் குறைகின்றது என்று தெரிவித்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் எடை குறைவதால், உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது. இதனால், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வராமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று மோஸ்லி தெரிவித்தார்.
தன்னுடைய கொலஸ்டிரால் அளவும், சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தபின், சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த உணவு முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததாக மோஸ்லி கூறினார்.
மூன்று மாதங்களில் 8 கிலோ எடை குறைந்ததாகக் கூறிய அவர், இப்போது தனது கொலஸ்டிரால் அளவும், சர்க்கரை அளவும் குறைந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினார்.
Post a Comment