Header Ads



இராணுவமயப்படுத்தலில் குளிர்காய நினைக்கிறது ராஜபக்ஷ குடும்பம்..!

 (இக்பால் அஜீட்)

 இலங்கையில் தொடர்வது சட்டத்தின் ஆட்சியா? அல்லது இராணுவ ஆட்சியா? என்று கேள்வி எழுப்பும் அளவில் நாட்டின் காணிப்பிரச்சனை முதல் வீதிகளில் காண் கிளரும் கருமம் வரை இராணுவத்தின் பிரசன்னத்தையும், இராணுவத்தினரின் தலையீட்டையும் காணக்கூடியதாக உள்ளது. நாட்டில் பாரிய யுத்தம் தொடர்ந்த காலப்பகுதியில் கூட சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொறுப்பை காவல்துறையினரே செய்து வந்தனர். ஆனால் இன்று நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்துவதற்கு அனைத்து இராணுத்துருப்புக்களுக்கும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கிறார் என்றால் இராணுவமயப்படுத்தல் தொடர்பான அவரது நிகழ்ச்சிநிரலின் வீரியத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவுபெற்று அரை தசாப்த காலம் கழிந்த நிலையில் வட கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதேசங்களில் நிலவும் இராணுவ பிரசன்னத்தை குறைத்து இயல்பு வாழ்வை பெற்றுத்தரும் படி அரசிடம் பல ஆண்டு காலமாக கோரிவருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள இராணுவ பிரசன்னத்தை குறைப்பதில் அக்கறை காட்டாத ராஜபக்ஷ நாட்டின் ஏனைய மாவட்டங்களில் காலங்காலமாகத் தொடர்ந்த சிவில் நிலையை சீர்குலைத்து அங்கும் இராணுவத்தை ஏவிவிடுகிறார். 

இன்றைய அரசு எந்தளவுக்கு இராணுவமயமாக்களில் களமிறங்கியிருக்கிறதென்றால் இந்த இராணுவத்தலையீடு பல்கலைக்கழகங்களையும் விட்டு வைக்கவில்லை. தலைமைத்துவத்திற்கான வேலைத்திட்டம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு பெற்ற மாணவர்களை இராணுவமுகாம்களுக்கு அழைத்தும், இராணுவத்தினரைக் கொண்டும் பயிற்சி வழங்கி இராணுவத்தினர் மீது பக்தியையும் அதேவேளை பீதியையும் நாளைய இளம் தலைமுறையினரிடம் வளர்க்கும் உபாயத்தை அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றோம் என்ற பேரில் இராணுவத்துக்கு சொந்தமான ரக்னா லங்கா என்ற பாதுகாப்பு கம்பனி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் செயற்பாட்டையும் முடுக்கிவிட்டுள்ளது. இது போதாதென்று தற்போது வடக்கிலும் தெற்கிலும் இராணுவம் சுயாதீனமாக பாரியளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தை ஏப்பமிடும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. 

புலிகளுக்கெதிரான யுத்தம் அதியுச்ச கட்டத்தில் இடம்பெற்ற 2009ம் ஆண்டில் கூட ஒதுக்கப்படாத பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி யுத்தம் முடிவுற்று 4 ஆண்டுகளான பின்பும் அதனை விட அதிகளவில் ஒதுக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இராணுவத்தினரின் எண்ணிக்கையும், அவர்களின் இராணுவ பலமும் தேவைக்கதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கான நிதியை குறைத்து வரும் அரசு கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழகத்துக்கு மாத்திரம் பாரிய நிதியை ஒதுக்கியிருக்கிறது. இவையெல்லாம் நாடு மிகவும் பயங்கரமான பாதையில் திசைமாறிப்போகிறது என்பதையே எமக்கு புலப்படுத்துகின்றன.    

நாட்டில் வளர்ந்திருந்த பயங்கரவாதத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டோம். இனிமேலும் பயங்கரவாதமோ, பிரிவினைவாதமோ நாட்டில் தலைத்தோங்க நாம் வழிவிடமாட்டோம், எமது இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை உறுதிசெய்வோம் என்ற வாதங்களை முன்வைத்து நாட்டு மக்களை ஏமாற்றி மக்களின் எதிர்காலத்தை தமது குறுகிய இலாப நோக்கங்களுக்காக காவு கொடுக்கின்ற பணியையே ராஜபக்ஷ அரசு செய்து வருகின்றது. 
இன்று வீதியோரங்களில் மலர் நடுகை முதல் மரக்கறி வளர்த்தல் வரை, சிரமதான செயற்பாடுகள் முதல் பூந்தோட்டங்களை நிறுவுதல் வரை இராணுவத்துருப்புக்கள் அடிமைகள் போல் பணியாற்றி வருகிறார்கள். 

இத்தகைய இராணுவமயப்படுத்தப்பட்ட சுழலில் மக்கள் தமது கருத்துக்களை இயல்பாக வெளியிட முடியாத நிலையும், தமது கோரிக்கைகளை அச்சமற்று முன்வைக்க முடியாத நிலையும் தொடர்கிறது. 
நாட்டின் அரசியல் அமைப்பால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை கோரி யாராவது குரல் கொடுத்தால் அவர்கள் நாட்டின் துரோகிகளாகவும், தேசிய அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையானவர்களாகவும் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இராணுவத்தைக்கொண்டும் முடியாவிட்டால் சட்டவிரோத குண்டர்களைக்கொண்டும் இந்த உரிமைக்குரல்கள் நசுக்கப்படுகின்றன. 

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா நாட்டின் முடிசுடா மன்னன் மாதிரியும் தனிக்காட்டு சிங்கம் மாதிரியும் தன்னை நினைத்துக்கொண்டு இராணுவ கட்டமைப்பு முழுவதிலும் தனது ஊழல் நடவடிக்கைகளை செய்தவண்ணமுள்ளார். அவரை இந்த நாட்டில் தட்டிக்கேற்க யாருமில்லை. அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். நீதித்துறை தலையிட்டால் பிரதான நீதவானையே மாற்றிவிடுவேன் என்கிற பாணியைத்தான் இவர்களிடம் காண முடிகிறது. தேசிய பாதுகாப்பை நாங்கள்தான் உறுதிசெய்தோம், அந்த இலக்கிற்காக தமது உயிரையும் கொடுத்தவர்கள் இராணுவத்தினர் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதையும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதையும்  இரண்டாவது நிலைக்கு கொண்டு வரும் ஒரு பிழையான வாதம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. 

புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவுற்ற பின்னா,; அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு'வின் அறிக்கை நாட்டில் இராணுவமயப்படுத்தல் நிறுத்தப்பட்டு, முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்றும் பயம் மற்றும் ஐயச் சுழல் தொடர்ந்தால் அது நல்லிணக்கத்துக்கு ஒத்துழைக்காது என்றும் குறிப்பிட்டிருக்கையில் அரசு தனக்குத்தானே முரண்பட்டு தலைகீழான நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இராணுவம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சாணி என்பது மறுக்க முடியாத ஒன்றாக இருப்பினும் அது பொதுமக்களை அன்றாடம் மேற்பார்வை செய்யும் பணியில் மூக்கை நுழைக்கக்கூடாது. மாறாக தேசிய மட்டத்தில் நாட்டின் இறைமைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் வராது பாதுகாப்பதே இராணுவத்தின் நோக்காக இருக்க வேண்டும். இராணுவ வெற்றிக்கு பின்னால் இன்று மக்கள் ஆட்சி இராணுவ ஆட்சியின் நிழலுக்குள் அடைக்களம் புக வேண்டி வருமோ என்ற கட்டத்தை நாம் இப்போது கடந்து வருகிறோம். 

சட்டமும், ஒழுங்கும் எடுத்தார் கைப்பிள்ளை போல் மஹிந்த குடும்பத்தின் கரங்களில் தள்ளாடும் இத்தகைய ஆபத்தான சுழலில் மனித விழுமியங்களுக்கோ அவர்களின் உரிமைகளுக்கோ எத்தகைய உத்தரவாதமும் இல்;லாத நிலையே இனிமேல் தொடரப்போகிறது.  இராணுவமயப்படுத்தல் அதன் ஒரு முக்கிய மைல்கல் என்பதே வேதனையான உண்மை.

No comments

Powered by Blogger.