Header Ads



கத்திகளைத் தேர்வு செய்யும் பலியாடுகள்..!

(தம்பி)

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, அரசு - இப்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வாய் வைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இது ஆச்சரியமோ, அதிர்ச்சியோ நிறைந்ததொரு செய்தியல்ல. இந்த அரசு இப்படியொன்றைச் செய்யாமல் விடுவதுதான் ஆச்சரியமான விடயமாகும். 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது மாகாணசபை முறைமையினை தோற்றுவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதொன்றாகும். 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதிகாரங்களைப் பரவலாக்கி - இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு உருவாக்கப்பட்டதே இங்குள்ள மாகாணசபை முறைமையாகும் என்பதெல்லாம் நாம் அறிந்த விடயங்களாகும்.

13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தற்போது அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. 

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் - அரசியல் ரீதியாக பலம் பெற்று விடக்கூடாது என்பதை மனதில் வைத்துத்தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஆட்சியாளர்கள் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளனர் என்று பரவலாகப் பேசப்படுவதும் இங்கு கவனிப்புக்குரியது.   

13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள - என்னென்ன விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும், எவ்வாறான மாற்றங்களைச் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனவும் முதலில் பார்ப்போமா.

· மாகாண சபைகளுக்கென்று சில கருமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்கும் வகையில் அல்லது அவை தொடர்பில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளும் வகையிலான சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க முடியும். ஆனால் அவ்வாறு சட்ட மூலமொன்றினைக் கொண்டு வருவதற்கு முன்னர் - நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளின் அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொள்தல் வேண்டும் என 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 154 (எ) பிரிவு கூறுகின்றது. 

· இதேபோன்று, இலங்கையிலுள்ள இரண்டு மாகாணங்கள் - ஒன்றாக இணைந்து, ஒரே மாகாணமாக செயற்படுவதற்கு பரஸ்பரம் விரும்புமாயின், அவ்வாறு இணைவதற்குரிய வழிவகைகளும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி இரண்டு விடயங்களிலும்தான் தற்போது மாற்றங்களை மேற்கொள்ள ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதாவது, மாகாணசபையின் கருமங்கள் தொடர்பிலான சட்ட மூலங்களை நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்வதாயின் அனைத்து மாகாண சபைகளின் அங்கீகாரங்களையும் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. நாட்டிலுள்ள மாகாண சபைகளின் பெரும்பான்மை அங்கீகாரத்தினைப் பெற்;றுக் கொண்டாலே போதுமெனும் வகையில் - குறித்த சரத்து திருத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது. 

அதாவது, அண்மையில் திவிநெகும சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதல்லவா? அது மாகாணசபைகளோடு தொடர்புபட்ட சட்ட மூலமாகும். அதனால், அனைத்து மாகாண சபைகளிலும் திவிநெகும சட்ட மூலத்துக்கு அங்கீகாரத்தினைப் பெற வேண்டியிருந்தது. எல்லா மாகாண சபைகளும் சட்ட மூலத்தை அங்கீகரித்திருந்தன. ஆனால் கிழக்கு மாகாணசபையில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியிலேயே திவிநெகும சட்ட மூலத்துக்கான அங்கீகாரத்தினை மத்திய அரசு பெற்றுக் கொண்டது. 

ஆக, தற்போது அரசு விரும்புவது போல் மேற்படி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின், தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் ஆளுகைக்குட்பட்ட மாகாண சபைகளின் கால்களில் மத்திய அரசு விழுந்து கொண்டிருக்கத் தேவையில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் எதிர்த்தாலும் சிங்கள சமூகத்தின் ஆளுகைக்குட்பட்ட மாகாணசபைகளின் அங்கீகாரத்துடன் சட்ட மூலங்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மற்றையது, இரு மாகாணங்கள் ஒன்றாக இணைவது பற்றிய விடயமாகும். உண்மையில், இரண்டு மாகாணங்கள் ஒன்றாக இணைவதற்கு விருப்பம் கொண்டாலும் - அதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் அவசியமாகும். ஜனாதிபதியின் சம்மதமின்றி – அவ்வாறாதொரு இணைவு சாத்தியமேயில்லை என 13 ஆவது திருத்தச் சட்டம் சொல்கிறது. 

ஆனால், தற்போது மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மாற்றத்தின் மூலமாக, இரண்டு மாகாணங்கள் விரும்பினாலும் ஒன்றாக இணையும் சாத்தியம் தடுக்கப்படுகிறது. அதாவது, மாகாணங்கள் ஒன்றாக இணைவதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்க வேண்டுமல்லவா? அவ்வாறு அங்கீகாரம் வழங்கும் அதிகாரத்தினை ஜனாதிபதியிடமிருந்து பிடுங்கிக் கொள்வதுதான் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அரசு மேற்கொள்ளவுள்ள மற்றைய மாற்றமாகும். 

உண்மையில், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ரத்துச் செய்யும் முயற்சிகளையே ஆட்சியாளர்கள் முன்னெடுப்பர் என பலரும் எதிர்பார்த்திருந்திருந்தனர்.  இந்த வேளையில்தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இவ்வாறானதொரு மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார். 

ஜனாதிபதியின் இந்தத் திட்டமானது – மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பின் கதவு வழியாகப் பறித்தெடுக்கும் செயற்பாடு எனவும் விமர்சிக்கப்படுகிறது. மாகாண சபை முறைமை என்பது சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதாகும். அப்படிப் பார்த்தால், சிறுபான்மை சமூகங்களின் கைகளில் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கின்ற அரசியல் அதிகாரங்களையும் சூழ்சிகரமாகப் பறித்தெடுக்கும் முயற்சியே இதுவாகும்.

எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு சிறுபான்மை சமூகங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை இப்போதே தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மு.காங்கிரஸ் என்பன தமது கண்டனங்களை மிக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. ஆயினும், இ.தொ.காங்கிரஸின் ஆறுமுகம் தொண்டமான், குதிரைக் கட்சியின் தலைவர் அமைச்சர் அதாஉல்லா, அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன் போன்றோர் இவ் விவகாரம் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. 

இதில் பகிடி என்னவென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இப்போது கோசம் போடுகின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகளில் ஏராளமானவை – அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்து நின்றவையாகும். மாகாணசபை முறைமையினை கடைசிவரை புலிகள் ஏற்றுக் கொள்ளவேயில்லை. 13ஆவது திருத்தச் சட்டம் என்பது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம் என்று மு.காங்கிரஸ் அப்போது அறிக்கையிட்டது. 

ஆனால் தற்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்சொன்னவாறு மாற்றங்களைச் செய்வதற்கு மு.காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.கா.வின் இந்த முடிவு சிறுபான்மையினருக்குச் சந்தோசமானதொரு செய்தியாகும். தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு அரசியல் ரீதியாக இருந்த அற்ப நம்பிக்கை - மாகாண சபை முறைமையாகும். அதையும் சூழ்சிகரமாகக் கொள்ளையிடும் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.  

ஆனால், கிழக்கு மாகாணசபையின் ஆதரவைக் கோரி - திவிநெகும சட்ட மூலம் வந்த போதும், முதலில் மு.காங்கிரஸ் இப்படித்தான் கூறியது. திவிநெகும சட்ட மூலத்தை தாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்று – மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஆனாலும், கடைசியில், ஆள்மேல் ஆள் - பழியைப் போட்டு விட்டு, திவிநெகும சட்ட மூலத்தினை மு.காங்கிரஸ் ஆதரித்த கதையை நாம் எல்லோரும் அறிவோம். 

13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேற்சொன்ன மாற்றங்களைப் புரிவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவையாகும். அதாவது 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாற்றத்துக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்த வேண்டும். ஆளும் தரப்பில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, குறித்த மாற்றத்தை ஆளும் தரப்பு மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும். 

சிலவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மு.காங்கிரஸ் ஆதரவு வழங்காது விட்டாலும், ஆட்சியாளர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆளுந்தரப்பிலுள்ள 160 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மு.காங்கிரசின் 08 உறுப்பினர்களைக் கழித்தாலும் 152 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது. ஆக, மு.கா. ஆதரித்தாலும் எதிர்த்தாலும் - அரசுக்குப் பாதிப்பில்லை. 

ஆனால், மு.கா.வோடு இணைந்து மேலும் 03 க்குக் குறையாத ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி 13 ஆவது திருத்தச் சட்டம் மீதான மாற்றத்தை எதிர்ப்பார்களாயின் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகும் நிலையொன்று உருவாகும். அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுமாயின், அதனைச் சமாளிக்கும் பொருட்டு ஆட்சியாளர்கள் மாற்றுத் திட்டங்களைக் கையாளத் தொடங்குவர். 

அதாவது, மு.காங்கிரசிலும் எதிரணியிலுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை 'விலை' கொடுத்து வாங்குவதற்கு ஆட்சியாளர்கள் முற்படக் கூடும். அவ்வாறனதொரு நிலை ஏற்படுமாயின், கட்சியைக் காப்பாற்றுகிறேன் எனச் சொல்லிக் கொண்டு – மு.கா. தலைவரும் சேர்ந்து அரசுக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், 'கட்சியைக் காப்பாற்றுதல்' என்பதை - தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் 'காப்பாற்றி' வைத்துக் கொண்டிருத்தல் என்று மு.கா. தலைவர் ஹக்கீம் தவறாக விளங்கி வைத்துக் கொண்டுள்ளார். அல்லது அப்படி விளங்கி வைத்துக் கொண்டுள்ளதாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அதனால், மேற்சொன்னது போன்றதோர் சூழ்நிலையில் - அரசுக்கு ஆதரவாக ஹக்கீமுடைய கையும் சேர்ந்து உயர்வதென்பது - அத்துணை பெரிய அரசியல் அதிசயமாக இருக்கப் போவதில்லை. 

இன்னொரு புறம், மு.காங்கிரஸ் - ஆதரவு வழங்காது விட்டாலும், அரச தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கத்தான் போகிறது. எனவே, 'ஆட்சியாளர்களைப் பகைக்காமல் நாமும் அரசுக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்தி விடுவோம்' என்று மு.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இறுதி நேரத்தில் தீர்மானிக்கவும் கூடும். ஏனென்றால், அரசாங்கத்துக்குள் மு.காங்கிரசுக்கு மரியாதையில்லை என்று இப்போதே அந்தக் கட்சி அழுது புலம்பிக் கொண்டு திரிகிறது. இந்த நிலையில், அரசு கொண்டு வரும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான மாற்றங்களை மு.கா. எதிர்க்குமானால் - அந்தக் கட்சிக்கான மரியாதையில் இன்னும் மண் விழும். 

ஆக, தமக்குப் பாதகமானதொரு சூழ்நிலையைத் தெரிவு செய்வதற்கு - மு.கா. தலைவரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணிவார்களா என்பது சந்தேகம்தான்.

இதேவேளை, அமைச்சர்களான அதாஉல்லா மற்றும் ரிசாத் பதியுத்தீன் போன்றோர் இது விடயத்தில் எப்படிச் சுற்றி வளைத்தாலும், கடைசியில் அரசுக்கு ஆதவாகவே கைகளை உயர்துவார்கள். காரணம், மஹிந்த ராஜபக்ஷவின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டு இவர்களால் ஒரு துரும்பளவு கூட அரசியல் செய்ய முடியாது. இன்னும் தெளிவாகச் சொன்னால், அதாஉல்லா, றிசாத் பதியுத்தீன் போன்றோர் இந்த ஆட்சியாளர்களைப் பகைப்பதென்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதொரு செயற்பாடாகும். எனவே, மேற்படியார்கள் - சமூக உணர்வு மேலீட்டால், இந்த விடயத்தில் அரசுக்கு எதிராக நடந்து கொள்வார்களென உங்களில் யாரேனும் நினைப்பீர்களாயின் - நீங்கள் அனுதாபத்துக்குரியவர்கள்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம், திவிநெகும சட்டம் போன்றவற்றின் மூலம் - நம்மிடமிருந்த சின்னச் சின்ன அரசியல் அதிகாரங்களில் கணிசமானவற்றை – நாம் இழந்து விட்டோம். இப்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் அரசின் தீர்மானம் - நம்முன் வந்து நிற்கிறது. 

மிக வெளிப்படையாகச் சொன்னால், இந்த அரசில் சிறுபான்மை இனங்கள் - பலியாடுகளுக்கு ஒப்பானவையாகவே பார்க்கப்படுகின்றன. இதில் கொடூரம் என்னவென்றால், ஆடுகளை வெட்டுவதற்கான கத்திகள், ஆடுகளைக் கொண்டே தேர்வு செய்யப்படுகின்றன!

8 comments:

  1. Very good article! This means, these parties are invalid coins, aren't they? I don't understand this, at all. Scapegoats are not the politicians but innocent muslim voters. Perhaps, Rauf Hakeem pulling the leg, may be, for larger and better perk?

    ReplyDelete
  2. Very good article! This means, these parties are invalid coins, aren't they? I don't understand this, at all. Scapegoats are not the politicians but innocent muslim voters. Perhaps, Rauf Hakeem pulling the leg, may be, for larger and better perk?

    ReplyDelete
  3. Really nice letter everyone should read can realize. the real fact.

    ReplyDelete
  4. This is true but.......who can change this? no one but Allah Subahanahu Wa Thaala. Don't believe these people. They are Muna..... Until we read and understand the Quran and Sunnah, and change our behaviours we cant over come these kind of problems.Give us understanding every one. Ameem!!

    ReplyDelete
  5. நன்றாஹா சொன்நீர்ஹல், இப்போதவது தமிழ் பெசுபவன் என்ற ஒரு புள்ளியல் நாம் ஒன்று சேர்வோமா??????

    ReplyDelete
  6. இந்தக் கட்டுரையில் இடம்பெற்ற முடிவுகளை நாம் ஆராய்ச்சியாகக் கொண்டு இவற்றிலுள்ள உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு நாம் செயற்படலாம்.
    இருந்தும் அனைத்திற்கும் காரணம் நாம்தான் எல்லாமே நமது ஜனநாயக உரிமையைக் கொண்டுதானே இந்த ஏமாற்று அரசியல்வாதிகளை தெரிவுசெய்தோம்.
    இனிவரும்கால நமது சந்ததியினரின் எதிர்கால படுகுழி நமது கைகளிலே என்பதை சிந்தித்தாலே வழிபிறக்கும்.

    ReplyDelete
  7. Why you not say mr. hisbulla, mr. fousi, mr. faizal muthafa, her is not muslims

    ReplyDelete

Powered by Blogger.