அபூ தாலிப்களை பாராட்டலாமா..??
(அய்மன் அம்மார்)
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகக் அண்மைக் காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள், நியாயமில்லாத பேரணிகள், கருத்தரங்குகள், பத்திரிகையாளர் மாநாடுகள், தீக்குளிப்புக்கள் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளும் தொடராக நடந்தேறிவருகின்றன.
இவற்றைக் கண்டும் காணாதவர்களாக எமது அரசியல் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது சின்னஞ் சிறார் முதல் அனைவருக்கும் தெட்டத் தெளிவான விடயமாகும்.
எனினும் எமது ஆன்மீகத் தலைவர்கள் இவ்விடயத்தில் தம்மால் இயன்ற உச்சகட்ட நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் செய்தே வருகின்றனர். அதனையும் ஏற்றுக் கொள்ளாத சில நாசகார உள்வீட்டுச் சக்திகள் அவர்களது நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் தவிடுபொடியாக்க முணைகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களது அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கான தனியான பல கட்சிகள் இயக்கத்தில் இருந்தும், இலங்கை முஸ்லிம்கள் ஓர் அனாதைச் சமூகமாகவே தேசிய ரீதியில் வசித்து வருகின்றனர். அவர்களது பிரச்சினைகள், உரிமைகள் பற்றிப் பாராளுமன்றத்திலோ மேன்மை தங்கிய ஜனாதிபதியிடமோ எடுத்துரைப்பதற்கு வக்கில்லாத தலைமைத்துவத்தை நம்பி ஏமாற்றத்தில் உள்ளனர்.
ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களாகிய நாம் எதிர் பார்த்ததை விட ஒரு படி மேல் நின்று எமக்காகவும் எமது உரிமைகளுக்காகவும் இருப்புக்காகவும் பேசும் பல நல்லவர்கள் - அபூ தாலிப்கள் எமது தேசத்தில் குறல் கொடுத்து வருகின்றனர்.
அவர்களுல் தம்புள்ள அல் கைரியாத் ஜும்ஆ மஸ்ஜிதுக்காக அன்று முதல் இன்று வரை குறல் கொடுக்கும் அமைச்சர் ஜனக்க தென்னக்கோன் அவர்கள்,
'இலங்கையில் மாடுகள் அறுப்பதை ஒரு போதும் தடுக்க முடியாது, அது நடைமுறைச் சாத்தியமற்றது' என்று எமக்காகக் குறல் கொடுத்த பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்கள்,
'நான் ஒரு போதும் இனவாதத்திற்கு அடிபணியப் போவதில்லை. அரசியல் வாழ்வில் அந்த சேனாந்த சேனா எனப் பலர் வருவர். பௌத்த பகவான் இனவாதத்தைத் தூண்டவோ போதிக்கவோ இல்லை. மாற்றாக மனித இனம் என்றே அவர் நோக்கினார்' என்று பேருவளையில் பகிரங்கமாகப் பேசிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்கள்,
நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிப்பால அவர்கள்,
'அரசியலுக்காக மத அடிப்படை வாதத்தைப் பரப்பி மனிதர்கள் அழிவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தத்தமது மத கிரிகைகளை கடைப்பிடிக்க சுதந்திரமும் இந்நாட்டில் உள்ளது. ஆனால் அரசியலுக்காக மதவாதத்தை ஊக்குவிக்கின்றனா' என்று மதவாத்தை எதிர்த்த ஜே. வி. பி. இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள்,
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக தொடர்ந்து குறல் கொடுத்து வருபவர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா (எம்.பி), மதிப்புக்குரிய மனோ கணேசன் (எம்.பி) அவர்கள் போன்ற அரசியல் தலைவர் இந்த சமூகத்தால் உளமாறப் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
அத்துடன், 'எல்லாத் தேரர்களும் தீக்குளித்தாலும் விலங்குகள் அறுப்பதை நிறுத்த முடியாது. மாடுகளைக் கொல்வதையோ ஏனை விலங்குகளைக் கொல்வதையோ நிறுத்த முடியாது. அது போல் அதனைச் சட்டத்தினாலும் இல்லாமற் செய்யவும் முடியாது' என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சங்கைக்குரிய மேதானந்த தேரர் கருத்து வெளியிட்டிருந்தார்.
'கால் நடைகள் அறுக்கப்படுவதற்கு எதிரான சக்திகளுக்குத் துணை போவது ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளாகும், இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது' என்று தேசபற்றுள்ள தேசிய அமைப்பின் இயக்குணர் சங்கைக்குரிய குணவர்த்தன தேரர் எச்சரித்திருந்தார்.
'இனவாதத்தைத் தூண்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களது முயற்சிகளைத் தோற்கடிப்டிப்போம். பொது பல சேனாவை விரட்டியடிக்க வேண்டும். இவர்களின் நடவடிக்கை அல்கய்தாவினை ஒத்ததாக இருக்கிறது. இது பௌத்த சம்பிரதாயம் அல்ல. ஆகவே சம்பிரதாயத்திற்கு முரணாக வன்செயலைத் தூண்டி தீவிரமாகச் செயற்படக் கூடியவர்களை விரட்டியடிக்க வேண்டும். இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக அந்தஸ்துள்ள மல்வத்து மகா நாயக தேரர்கள், களணி விகாரையின் விகாரபதி மகா நாயக தேரர், இத்தே பான நாயக்க தேரர் போன்றவர்கள் இவர்களைப் புரக்கணித்தே வருகின்றனர்' என்று தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர் எச்சரித்திருந்தார். (நன்றி : ஜனரல)
அது போன்று இனவாதிகளையும் அவர்களது செயற்பாடுகளையும் கண்டித்து, சகவாழ்வினை வரவேற்கும் கருத்தினைத் துணிந்து கூறி நிற்கும் கல்முனை சுபத்ராராமய விகாரபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ண தேரர்,
'முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை யாராலும் தடுக்க முடியாது. இது பௌத்த நாடாக இருந்தாலும், அனைத்து சமயங்களுக்கும் சமூகங்களுக்கும் தமது மதங்களைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் உண்டு. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஹிஜாப் உடையை அணிகிறார்கள் இதனை யாரும் தடுக்க முடியாது' என்று மட்டக்களப்பு மங்களராமய விகாரபதி சங்கைக்குரிய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, இத்தகைய அபூ தாலிப்களை இனங்கண்டு அவர்களைப் பாராட்டவும் நினைவுச் சின்னங்களை வழங்கி அவர்களது கருத்தினை வரவேற்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
எமது ஆன்மீக இலௌகீக வழிகாட்டலை எண்பது ஆண்டுகளாகச் சுமந்து நிற்கும் ஏக தலைமைத்துவமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை பீடமோ அதன் மாவட்டக் கிளைகளோ, மஸ்ஜித்களின் இக்கைங்கரியத்தை முன்னின்று நிறைவேற்றல் வேண்டும்.
நீர்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களது 30 வருட அரசியல் வாழ்வை நினைவு கூறுமுகமாக பதுளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை ஏற்பாடு செய்திருந்த பாராட்டு வைபவம் ஏனைய பிரதேசத்தவர்களுக்கு ஒரு முன்மாதியாகும்.
The best opinion which is suitable to this period
ReplyDeleteஇக் காலத்துக்கு பொறுத்தமான ஒரு கருத்து