பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்பு
பாகிஸ்தானின், 66 ஆண்டு வரலாற்றில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுநேற்று பொறுப்பேற்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்நாட்டின் பார்லிமென்டின் கீழ் சபையான தேசிய அசெம்பிளியில் கால் வைத்த நவாஸ் ஷெரீப், 5ம் தேதி பிரதமராக பொறுப்பேற்கிறார்.
அண்டை நாடாக இருந்தாலும், தோன்றியது முதல், இந்தியாவின் சண்டை நாடாக விளங்கும் பாகிஸ்தானில், 1999ல் பிரதமராக இருந்தவர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், நவாஸ் ஷெரீப். அவர் ஆட்சியில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
அத்துடன், நவாஸ் ஷெரீபை நாடு கடத்தினார். சவுதி அரேபியாவில் நீண்ட காலம் தங்கியிருந்த அவர், 2007ம் ஆண்டு நாடு திரும்பினார். 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம், 11ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், தேசிய அசெம்பிளியின் மொத்தமுள்ள, 342 இடங்களில், 180 இடங்களை, நவாஸ் ஷெரீபின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெற்றது. இதையடுத்து, அந்நாட்டில், நியாயமான ஓட்டெடுப்பு மூலம், ஜனநாயக ரீதியில், மீண்டும் ஒரு புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்நாட்டு வழக்கப்படி, பிரதமராக பொறுப்பேற்கும் முன், எம்.பி.,க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர்; பிறகு, எம்.பி.,க்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பர். அதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்கள், நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு, சபாநாயகர் பெமிதா மிர்சா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் பங்கேற்க, லாகூரில் இருந்து விமானம் மூலம், ராவல்பிண்டி வந்த நவாஸ் ஷெரீப், பலத்த பாதுகாப்புடன், இஸ்லாமாபாத்திற்கு, காரில் அழைத்து வரப்பட்டார்; அவருடன் கடசியின் முக்கியத் தலைவர், சவுத்ரி நிசார் அலி கான் வந்தார். அவர் தலைமையில், எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வரும், 5ம் தேதி, பிரதமராக நவாஸை, எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்; அன்றே அவர், பதவியேற்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அவர், பத்திரிகையாளர்களிடம் பே”ம் போது, ""அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இதற்காக, மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்; அவர்களுக்கு சேவையாற்ற மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்ததற்காக இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,'' என்றார்.இந்நிலையில், நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த, நீதிபதி, அப்துல் காலிக்கை, லாகூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி, உமர் அடா பண்டியால், நேற்று அதிரடியாக இட மாற்றம் செய்தார்.
Post a Comment