கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடாத்த அனுமதிக்கமாட்டேன் - பிரிகேடியர் ஹரின் பெரேரா
(ஏ. எல். ஜுனைதீன்)
கல்முனையில் அமைதி சூழ் நிலைக்குப் பாதிப்பு ஏற்படும் எனில் பொது பல செனாவின் பொதுக்கூட்டத்தை நடத்த நான் அனுமதிக்கமாட்டேன் என்று அம்பாறை மவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஹரின் பெரேரா தன்னிடம் உறுதிபடத் தெரிவித்திருப்பதாக திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்குத் தெரிவித்தார்.
சிங்கள கடும் போக்குவாத அமைப்பான பொது பல சேனா கல்முனையில் எதிவரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த முயற்சிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பிரிகேடியர் ஹரின் பெரேராவைத் தொடர்பு கொண்டபோதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கியிருக்கிறார்.
அம்பாறை மாவட்ட அணைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் அவர்களிடம் பிரிகேடியர் ஹரின் பெரேரா தொடர்பு கொண்டு கொழும்பிலிருந்து பெளத்த மதகுருமார்கள் விஜயம் செய்வது பற்றியும் அவர்களுடனான சந்திப்பு பற்றியும் கலந்துரையாடிய விடயத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் டாக்டர் தெரிவித்ததையடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பிரிகேடியர் ஹரின் பெரேராவைத் தொடர்பு கொண்டு பேசினார்.
கொழும்பிலிருந்து மத நல்லிணக்கத்திற்காக பெளத்த மத குருமார்கள் சிலர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் அவர்கள் இங்குள்ள உலமாக்கள் மெளவிகள் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர்கள் என்போருடன் கலந்துரையாட விருப்பதாகவும் இராணுவ பிரிகேடியர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அதற்கு தான் கொழும்பிலிருந்து அம்பாறைக்கு வருகை தரும் மத குருக்கள் உண்மயில் மத நல்லிணக்க குழுக்களா? இல்லை பொது பல சேனாவைச் சேர்ந்தவர்களா? என பிரிகேடியரிடம் வினவியபோது அது எனக்கு தெரியவில்லை. அப்படி பொது பல சேனாவைச் சேர்ந்தவர்கள் எனில் கல்முனையில் அமைதிக்குப் பங்கமாகப் பொதுக் கூட்டம் நடத்த தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரீஸ் கல்முனை பொலிஸ் நிலயப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ எம் ஹப்பார் அவர்களிடம் தொடர்பு கொண்டு கல்முனையில் பொது பல சேனா பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி எதையும் வழங்க வேண்டாம் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இதுவரை கல்முனையில் பொது பல சேனா பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி பெறவேண்டிய இடங்களில் எந்த அனுமதியையும் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகின்றது.
Post a Comment