கிழக்கு மாகாண ஆசிரிய பற்றாக்குறையும், முஸ்லிம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்..!
(இப்னு செய்யத்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கல்முனை வலயத்தில் உள்ள மேலதிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தடையாக இருப்பதாக அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று (27.06.2013) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிபர்த்தி செய்ய வேண்டியது கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பொறுப்பாகும். அதற்காக கல்முனை வலயத்தில் உள்ள ஆசிரியர்களை பழியாக்க எண்ணுவது வேண்டுமென்று மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும்.
கல்முனை வலயத்திலும், சம்மாந்துறை வலயத்திலும் தலா 300 ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றார்கள். அதே வேளை, அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள அட்டாளைச்சேனை, பொத்துவில் கோட்டங்களில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றார்கள். ஆயினும், அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் மேலதிகமாக ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் உள்ள ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பற்றாக்குறையாக உள்ள கோட்டங்களுக்கு இடமாற்றம் செய்யும் போது ஆசிரியர் பற்றாக் குறையை பெருமளவிற்கு அட்டாளைச்சேனை, பொத்துவில் கோட்டங்களில் குறைக்க முடியும். ஆனால், இதனைச் செய்வதற்கு அமைச்சர் அதாவுல்லாவும், கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவர்கள் கல்முனை வலயத்தில் உள்ள மேலதிக ஆசிரியர்களைக் கொண்டே அட்டாளைச்சேனை, பொத்துவில் கோட்டங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிபர்த்தி செய்வதற்கு அதாவுல்லாவும், உதுமாலெப்பையும் விரும்புகின்றார்கள்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கல்முனை வலயத்தில் உள்ள மேலதிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தடையாக இருப்பதாக அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதாவுல்லா தெரிவித்த போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் நாம் ஒரு பக்கமாக சிந்திக்கக் கூடாது. கல்முனை வலயத்தில் உள்ள ஆசிரியர்களின் நலன்களையும், பிரச்சினைகளையும் சிந்திக்க வேண்டும். அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சிபர்த்தி செய்வதற்கு அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு வெளியே கடமையாற்றுகின்ற அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இங்கு இடமாற்றம் செய்யும் போது எமது ஆசிரியர் பற்றாக்குறை முழுமையாக தீர்ந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கூட செய்வதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தடையாக இருக்கின்றாரே என்று அமைச்சர் அதாவுல்லா கூறியுள்ளார்.
இதே வேளை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கான கூட்டத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி பேசப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தமது வலயத்தில் உள்ள பொத்துவில் கோட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிபர்த்தி செயவதற்கு கல்முனை வலயத்தில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார். இவ்வேளை, அங்கிருந்த உயர் கல்வி அதிகாரிகள் அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலுக்கு போவது தூரமா அல்லது கல்முனையில் இருந்து பொத்துவிலுக்கு போவது தூரமாவென்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்ட போது, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் கல்முனை வலயத்தில் உள்ள ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடமையாற்றுவதற்கு என்னிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆசிரியர்களுடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் நடத்திய கூட்டத்தில் நாங்கள் வெளி மாவட்டத்தில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலதிகமாக பல கஸ்டங்களுக்கு மத்தியில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். எங்களையே பொத்துவிலுக்கு இடமாற்றம் செய்து தருவதாக கூறுகின்றீர்கள். நன்மை செய்வது போல் காட்டி தீமை செய்ய முற்படுகின்றீர்கள். தலையை தடாவி கண்ணைப் பிடுங்கும் செயல் என்று ஆசிரியர்கள் காட்டமாக தெரிவித்துள்ளார்கள்.
அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளரும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரும் அக்கரைப்பற்று கோட்டத்தில் உள்ள மேலதிக ஆசிரியர்களை காப்பாற்றுவதற்காக கல்முனை வலய ஆசிரியர்களை பழியாக்க எண்ணுவது அரசியல் சார்ந்ததாகும். இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று வலயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற்குரியது. இந்த அநீதியை கல்முனை வலயத்தில் உள்ள பைசால் காசிம், ஹஸன்அலி, ஹரீஸ் ஆகிய எம்.பிக்களும் ஜெமீல், மன்சூர், இராஜேந்திரன், கலையரசன் ஆகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் தட்டிக் கேட்பதற்கு வக்கில்லாது இருப்பதாக கல்முனை வலய ஆசிரியர்கள் தமது ஆத்திரத்தை தெரிவிக்கின்றார்கள்.
இதே வேளை, கல்முனை வலயத்தில் இருந்து 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தற்போது கல்முனை வலயத்தில் தற்காலிகமாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கான தற்காலிக கடமைக்கான அனுமதி ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இவர்களின் கஸ்டங்களை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எதிர் வரும் செப்டம்பர் வரை தற்காலிக அனுமதியை நீடித்துக் கொடுப்பதற்கு ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருப்பதாகவும், அதற்கிடையில் இந்த ஆசிரியர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் செயவதற்கு ஆளுநர் மற்றும் கல்விச் செயலாளர் ஆகியோர் கொள்கை அளவில் ஏற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த முடிவினை குழப்புவதற்கு அதாவுல்லாவும், உதுமாலெப்பையும் திட்டமிட்டுள்ளார்கள் என்றே கல்முனை வலய ஆசிரியர்கள் எண்ணுகின்றார்கள். இவர்கள் அக்கரைப்பற்று கோட்டத்தை மட்டும் சிந்திப்பதனால்தான் கல்முனை வலய ஆசிரியர்களை பழியாக்குகின்றார்கள்.
வெளி மாவட்டங்களிலும், வெளி வலயங்களிலும் கடமையாற்றும் அக்கரைப்பற்று வலய ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யும் போது இவ்வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவிற்கு தீருமென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தெரிவித்துள்ள ஆலோசனையை முதன்முதலில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள்ஈ உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது தெரிவித்ததாக முதலமைச்சரின் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் ஏற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அத்தகைய ஆசிரியர்களின் பட்டியலை மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரை மீண்டும் அப்பதவியில் இருந்து மாற்றுவதற்கான முஸ்திபுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. முன்னர் கல்முனை வலய ஆசிரியர்களை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் இடமாற்றம் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இப்போது கல்முனை வலய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு தடையாக இருக்கின்றார் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த முரண்பட்ட நிலையை அவதானிக்கும் போது மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமை மீண்டும் அப்பதவியில் இருந்து இறக்கிவிட வேண்டுமென்பதற்காகவே முரண்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
Post a Comment