'முதல் ரக நீரிழிவுக்கு நோய்த்தடுப்பு மருந்து'
நீரிழிவு நோயின் ஒரு வகையான முதல்ரக நீரழிவு நோயை மாற்றுவதற்கான நோய்த் தடுப்பு மருந்தின் மாதிரி பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
80 நோயாளிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை குறித்து நாடுகடந்த மருத்துவ விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான தகவல்கள், புதிய நோய்த்தடுப்பு மருந்து இதற்கேற்றவாறு உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு பயிற்சி கொடுக்கும் என்று கூறுகின்றன.
இந்தச் சோதனையின் முடிவுகள் மிகவும் முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உடலைத் தாக்குகின்ற பக்ரீரியாக்கள் மற்றும் வைரசுக்களை தாக்குவதற்கான பயிற்சியை உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு(முறைமைக்கு) பயிற்றுவிப்பதே நோய்த்தடுப்பு மருந்துகளின் செயற்பாடாகும்.
அந்தப் பயிற்சியின் மூலம் உடலைத் தாக்கவரும் கிருமிகளை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தாக்கி அழித்துவிடும்.
ஆனால், நீரிழி நோயைப் பொறுத்தவரை, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலின் பாகங்களை தாக்குவதன் மூலம் அது உருவாகிறது. அதாவது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் கணயத்தில் உள்ள பீட்டா கலங்களை தாக்குவதால் அது ஏற்படுகிறது.
இந்த பீட்டா கலங்கள்தான் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கின்றன. ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தி அந்த பீட்டாக் கலங்களை தாக்கி அழித்துவிட்டால், இன்சுலின் சுரக்கமுடியாமல் போய் விடுகிறது. இதன் மூலமே முதல் வகை நீரிழிவு நோய் உருவாகிறது.
ஆகவே இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய நோய்த்தடை மருந்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு, கிருமிகளை தாக்குவதற்கான பயிற்சியை கொடுப்பதற்குப் பதிலாக, அந்த நோய் எதிர்ப்புச் சக்தி செயற்படாமல் இருக்க அது பழக்குகிறது. ஆகவே குறித்த நோய் எதிர்ப்புச் சக்தி கணயத்தின் பீட்டாக் கலங்களை தாக்காது. அதனால் இன்சுலின் தொடர்ச்சியாகச் சுரக்கப்பட, முதல் வகை நீரிழிவு நோயும் வராது.
இந்த புதிய நோய்த்தடுப்பு மருந்து இன்சுலினைச் சுரக்கும் குறித்த பீட்டா கலங்களைத் தாக்கும் வெண்குருதிச் சிருதுணிக்கைகளை செயற்படாமல் இருக்கச் செய்துவிடும்.
இந்தப் பரிசோதனை நல்ல பலனைத் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், இரண்டாவது வகை நீரிழிவு நோய் ''கூடாத உணவுப் பழக்க வழக்கங்களால்'' ஏற்படுவதால், அதனை இந்த நோய்த்தடுப்பு மருந்தால் தடுக்க முடியாது.
டைப் ஒன் டயபடீஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முதல்ரக நீரிழிவுநோய் வரமால் தடுக்கவல்ல தடுப்புமருந்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றிபெற்றிருப்பது முக்கிய மைல்கல் என்கிறார் சென்னையிலுள்ள நீரிழிவுநோய் நிபுணர் ஏ ராமச்சந்திரன். bbc
Post a Comment