அல்குர்ஆனை அவமதித்த பாகிஸ்தான் பெண் கனடாவில் தஞ்சம்
பாகிஸ்தான் நாட்டில் ரிம்ஷா மசி என்ற 14 வயதுப் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கிறிஸ்துவப் பெண்ணான இவர், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு மிகுந்த பாகிஸ்தான் சிறை ஒன்றில் அவர் சில வாரங்கள் பாதுகாவலிலும் வைக்கப்பட்டார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிறிஸ்துவர்கள் வாழும் பகுதி ஒன்றில் கைது செய்யப்பட்ட ரிம்ஷா மசி, கற்பதில் குறைபாடுகள் உடையவர் என்று குறிப்பிடப்படுகின்றது. இவருடைய செய்கையினால் வெகுண்ட பெரும்பான்மை மக்கள் இவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியதால் இவர் கைது செய்யப்பட்டார். உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவரே இவரை இவ்வாறு செய்யத் தூண்டியதாகவும் கருதப்படுகின்றது.
இவரது கைது சர்வதேச கவனத்தையும் இவர் மீது திருப்பியது. இதன் விளைவாக விடுதலை செய்யப்பட்ட இவர், தனது குடும்பத்தினருடன் கனடா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
கொலை மிரட்டல் காரணமாக இவரது இருப்பிடம் குறித்து அறிவிக்கப்படவில்லை. ரிம்ஷா ஆங்கிலம் கற்று வருவதாகவும், பள்ளிக்கு சந்தோஷத்துடன் செல்வதாகவும் கிறிஸ்துவ ஆர்வலர் ஒருவர் பிபிசி செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment