எட்வர்ட் ஸ்னோடெனை பிடிக்க அமெரிக்கா திட்டம்
இணையம் மூலம் பிற நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்த தகவலை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடெனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வின் முன்னாள் பணியாளரான ஸ்னோடென், ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா இணையம் வழியாக உளவு பார்க்கும் தகவலை தெரிவித்தார். அது தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.
ஹாங்காங்கில் தலைமறைவாக இருந்த ஸ்னோடென், ஈக்குவடாரில் தங்க அனுமதி கோரியிருந்தார். அந்நாட்டுக்குச் செல்லும் வழியில் ரஷியாவில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அவர் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவின் முக்கிய ஆவணங்களை திருடியதாக ஸ்னோடென் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:÷""ஸ்னோடென் தற்போது தங்கியிருக்கும் ரஷிய நாட்டுடன் தூதரக ரீதியாகவும், அந்நாட்டு சட்ட அமலாக்கத் துறையினரிடமும் பேச்சு நடத்தி வருகிறோம். அவர் மீது வழக்கு உள்ளதையும், அவர் வேறு நாட்டுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். ஸ்னோடெனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அவர் தஞ்சமடையவுள்ள ஈக்குவடார் நாட்டு அரசிடமும் பேச்சு நடத்தி வருகிறோம்'' என்றார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. எரிக் கான்டார் கூறுகையில், ""ஸ்னோடெனை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை அதிபர் ஒபாமா மேற்கொள்ளவில்லை. இது மிகவும் முக்கியமான பிரச்னை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இச்சம்பவம் உள்ளது'' என்றார்.
அமெரிக்காவை பாதிக்காது: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சூசன் ரைஸ் கூறுகையில், ""ஸ்னோடென் வெளியிட்டுள்ள தகவல்கள், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த விவகாரம் அதிபர் ஒபாமா அரசை பலவீனப்படுத்திவிட்டதாகக் கூறுவது தவறு.
உலக அளவில் மிகப் பெரிய ராணுவமும், பொருளாதாரத்தையும் கொண்டுள்ள அமெரிக்கா தொடர்ந்து அதிகாரமிக்க, முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழும்'' என்றார்.
அதே சமயம், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் கூறுகையில், ""ஸ்னோடென் வெளியிட்டுள்ள தகவல்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன'' என்றார்.
Post a Comment