Header Ads



கல்முனை சிவில் பாதுகாப்பு குழுக்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்


(ஏ.பி.எம்.அஸ்ஹர் எஸ்.அஷ்ரப்கான்)

பிரதேசங்களில் நாளாந்தம் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களைக்
கட்டுப்படுத்தி அதனுாடாக பரஸ்பரம் மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை
கட்டியெழுப்பும் உன்னத பணியை செய்வதற்கு பிரதேச சிவில் பாதுகாப்பு
குழுக்கள் முயல வேண்டும் என  அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில
ஜெயசேகர தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு
உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் இன்று
(14)  கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ.கபார் தலைமையில்
இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே
அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,

பொலிசாருடன் இணைந்து நமது சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள்
செயலாற்றும்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் தமது கடமைகளை
மேலோங்கச் செய்து சட்டத்தை கையிலெடுக்கும் நிலை ஏற்படலாம். இதற்கு
ஒருபோதும் சட்டம் அனுமதிக்காது. பொலிசாருடன் இணைந்துதான் நீங்கள்
உங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, நீங்கள் தன்னிச்சையாக
செயற்படும்போது அதனால் வேறு பல சிக்கல்கள், பிரச்சினைகள் சமூகத்தில்
ஏற்படும். இதனைத் தவிர்ந்து கொள்வதற்காக பொலிசாருடன் இணைந்து நீங்கள்
செயற்பட வேண்டும்.

இது ஒரு புறமிருக்க கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில்தான்
அதிகமான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருதாக பொலிஸ் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அப்படியென்றால் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பிரதேசத்தில் இயங்கும் சிவில் பாதுகாப்புக்குழுக்களின் செயற்பாடுகள்
குறைந்திருப்பதையே அவை எடுத்துக்காட்டுகின்றது.

சமாதானக்காற்றை சுவாசிக்கின்ற எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான
வேறுபாடுகள் களையப்பட்டு சுபீட்சமான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். சகல
கிராம சேவகர் பிரிவுகளிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும்
நோக்கிலேயே சிவில் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான குழுக்கள் பல்வேறு பிரதேசங்களிலும் சிறப்பாக செயற்பட்டு வருவது
தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. அதுபோல் இந்த பணியை செய்வதற்கு
முன்வந்திருப்பவர்கள் சமூகத்தில் நன்னடத்த உள்ளவர்களாக, சமூக
அந்தஸ்தைப்பெற்றவர்களாக நற்பிரஜைகளாக இருக்க வேண்டும்.

விசேடமாக எமது சமூகங்களின் இளைஞர்களை சிறப்பான நன்னடைத்தை உள்ளவர்களாக
மாற்றவேண்டிய பொறுப்பினை கையிலெடுத்து செயற்பட முன்வாருங்கள். உங்களது
செயற்பாடுகளின்போது ஏற்படும் தடைகள் செயற்பாடுகளுக்கு பொலிசாரின்
உதவியுடன் தீர்வுகளை காணமுடியும்.

சிறுவர்களின் கல்வி செயற்பாடுகளில் கூடிய கவனமெடுக்வேண்டிய தேவை தற்போது
இருக்கிறது. முன்னொரு காலத்தில்  சிறார்கள் கல்வி கற்பதில்  பாரிய
இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை.
சுதந்திரமாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர வேண்டும். அதற்காக பொலிசார்,
சிவில்பாதுகாப்பு குழுக்கள் ஆகிய இரு சாராரும் இணைந்து செயற்படுங்கள்
என்ற வேண்டுகோளையும் விடுத்து உரையாற்றினார்.


No comments

Powered by Blogger.