Header Ads



மு.கா. தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது நொண்டிச்சாக்கு...!

(ரவூப் ஹஸீர்)

(மு.கா. தலைவரின் சகோதரனாகிய நான் இந்த கட்டுரையை எழுதுவது சரியா? பிழையா? என நீண்ட நேரம் யோசித்தேன். பாரதூரமான இந்த குற்றச்சாட்டுக்கு பொருத்தமான பதிலை சொல்வதற்கான நபர் நானே என உள்மனது உறுதிப்படுத்தியதால் எழுதுகிறேன். அதன் பொருத்தபாட்டை இதனை வாசிப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். நன்றி)

'13வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்' என்பது நேற்று பல வலைத்தளங்கள், வானொலிகள், தொலைக்காட்சி செய்தி என்பவற்றிலும் இன்றைய பத்திரிகைகளில் முன்பக்க செய்தியாகவும் உள்ளது. 

முதலைமைச்சர் வற்புறுத்திய போது, தலைவர் ரவூப் ஹக்கீமுடன்  தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது இருந்ததனாலேயே தாம் இந்த முடிவை எடுத்ததாக மு.கா. உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் எஹியா ஆகியோர் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளனர். 

நேற்று (27.06.2013) பிற்பகல் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள செய்தியை வாசித்தவுடன் நான் அதிர்ந்து போனேன். இவர்கள் ஏன் இவ்வாறு ஆதரித்து வாக்களித்தார்கள் என்பது மற்றவர்களுக்கு போலவே எனக்கும் பேரதிர்ச்சியை தந்தது. உடனடியாக சகோதரர் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவ் உரையாடல் இவ்வாறு அமைந்தது. 

நான் : ஏன் இவ்வாறு ஆதரித்து வாக்களித்தீர்கள்? 

ரிஸ்வி : தலைவரை நேரில் சந்திப்பதற்காக இப்போது நீதி அமைச்சில்தான் இருக்கிறேன். அவரிடம் காரணங்களை சொல்லுவேன். எங்களிடம் ஏன் என்று கூட கேட்காமல் கட்சியில் இருந்து எம்மை இடைநிறுத்தியிருப்பது பிழையானது!

நான் : நீங்கள் தலைவரிடம் கேட்காமல் கைதூக்கியிருக்கும்போது, தலைவர் உங்களிடம் கேட்க வேண்டும் என்பது நியாயமா?' 

ரிஸ்வி : தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியின்றி ஆதரவாக வாக்களித்தோம். 

நான் : நீங்கள் செயலாளர் நாயகம் ஹஸன் அலியை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கலாமே! 

ரிஸ்வி : நாங்கள் அதற்கு முயற்சிக்கவில்லை. தலைவரை சந்தித்து நிலைப்பாட்டை விளக்குவேன். 

எங்கள் உரையாடல் நிறைவு பெற்றது. அதன் பிறகு நேற்று இரவு ஜப்னா முஸ்லிமில் 'ஹக்கீமுடன் தொடர்பு கொள்ள முயன்று பலனளிக்கவில்லை. எனவே எதிர்த்து வாக்களிப்பு – ஆப்தீன் எஹியா' என்ற செய்தியையும் இன்று காலை பத்திரிகைகளை கையில் எடுத்த போது, ரிஸ்வி ஜவஹர்ஷாவும் அவ்வாரே காரணம் கூறியிருப்பதையும் கண்ணுற்றேன். 

'தலைவருடன் தொடர்பு கொள்ள முடியாது போனதனால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம்' என்று இவர்கள் சொல்லுவது நொண்டிச்சாக்கு. நான் ஏன் இவ்வாறு துணிந்து சொல்கிறேன் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. 

முழு நாட்டிலும் எரியும் பிரச்சினையாக 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் மாற்றங்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பொறுப்பு வாய்ந்த மாகாண சபை உறுப்பினர்களான இவர்கள் இவ்வாறு உப்புச்சப்பில்லாத விதமாக காரணம் கூறுவது சிறுபிள்ளைதனமானது. 

தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத பல சந்தர்ப்பங்களில் சகோதரர் ரிஸ்வி ஜவஹர்ஷா என்னுடன் தொடர்பு கொண்டு தலைவருக்கு எத்தி வைக்குமாறு அல்லது தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக்கொண்டதுண்டு. அப்போதெல்லாம் உடனடியாக நான் ஏதாவது செய்து அதனை ரிஷ்வி ஜவஹர்ஷாவுக்கு தெரிவித்துமுள்ளேன். என்னிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றையும் நான் உதாசீனம் செய்தது கிடையாது. இது பல தடவைகள் நடந்திருக்கிறது. மிக மிக முக்கியமான நேற்றைய வாக்களிப்பின் பொழுதும் சகோதரர் ரிஸ்வி இதனை செய்திருக்கலாம். நேற்று காலை 10 மணியிலிருந்து நன்பகல் கடக்கும் வரை ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் அவரின் காரியாலயத்தில்தான் இருந்தார். நானும் உடன் இருந்தேன். செயலாளர் நாயகம் ஹஸன் அலியும் இருந்தார். எங்கள் இருவருள் எவரையேனும் எஹியா, ரிஸ்வி ஆகியோர் தொடர்பு கொண்டிருந்தால் இலகுவாக தலைவருடன் கதைத்திருக்க முடியும்.

மிக மிக முக்கியமான இவ்வறான தருணங்களில் கட்சி தலைவருடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் செயலாளர் நாயகத்துடன் அல்லது தவிசாளருடன் தொடர்பு கொள்வது அத்தியாவசியமானது என்கிற அடிப்படை செயற்பாட்டைக் கூட இவர்கள் செய்யாதது ஏன்?

எனக்கு தெரிந்த வகையில் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பு கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அவரின் பாதுகாவல் கடமையில் இருக்கும் போலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவருடன் பலரும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம். இப்போலிஸ் அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் இவர்களிடம் உள்ளதும் எனக்கு தெரியும். 

(தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது கஸ்டமானது என்பது எல்லோரும் சுமத்தும் குற்றச்சாட்டு. இதற்கு மிக விரைவாக மாற்று வழி ஒன்றை தலைவர் செய்தாக வேண்டும் என்பதை தலைவர் ரவூப் ஹக்கீம் கவனத்தில் கொள்வது அவசியம்.)

இவர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொள்ள முயற்சித்த அதே நேரம் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு சந்திப்பு, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கலந்துரையாடல் என அடுத்தடுத்த பல முக்கியமான சந்திப்புகளில் தாருஸ்ஸலாமில் பலத்த வேலலைப்பளுவுக்குள் சிக்கி இருந்தார். அதனால் இவர்களின் அழைப்பு தவறவிடப்பட்டிருக்கலாம். 

இவர்கள் வேண்டும் என்றே இவ்வாறான தொடர்பாடலை தவிர்த்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. இந்த மாகாணசபை உறுப்பினர்களை கண்டிக்கவோ, குற்றஞ்சாட்டவோ எனக்கு அருகதை இல்லாமல் இருக்கலாம்.  ஆனாலும் நானும் கட்சித் தொண்டன் என்கிற அடிப்படையில் எனது மன வேதனைகளை வெளிப்படுத்துவது தவறில்லை என நினைக்கிறேன். 

இம்மாகாண சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட சில நியமனங்களை நிறுத்தி விடுவதாக முதலமைச்சர் அத்துல ஜயசிங்க வற்புறுத்தியதனாலும், தமக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதனாலும் தாம் இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க நேர்ந்ததாக இவர்கள் சொல்லுவது மிகவும் தலைக்குனிவைத் தருகிறது. 

சலுகைகளுக்காக முஸ்லிம் காங்கிரஸ் விலை போய்விட்டது என்கின்ற வெட்கங்கெட்ட செய்தியை சொல்வதற்காகவா மக்கள் இவர்களை வெற்றிபெறச் செய்தார்கள்?

அடுத்த வாரமே மாகாணசபை கலைக்கப்பட இருப்பதால் அதற்கு ஆயத்தமாக இப்போதே ஒட்ட வேண்டும் என்று கூறி 'உரிமைகளுக்காக விலைபோனாலும் சலுகைகளுக்காக விலைபோகாத முஸ்லிம் காங்கிரஸ்' என்கிற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை சென்றவாரம்தான் ஒரு உறுப்பினர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு சென்றார் என்கின்ற மனவேதனை காரணமாகத்தான் நான் இக்கட்டுரையை எழுதுகிறேன். இதற்காக அவர் என்னை மன்னிப்பாராக. 

வடமேல் மாகாணசபையில் மிகப்  பெரும்பான்மை பலத்தைக்கொண்ட முதலமைச்சர் சாதாரண இரண்டே இரண்டு (மூன்றாவது பிரதிநிதி வெளிநாட்டில் இருந்தார்) வாக்குகளுக்காக வேண்டி இவ்வளவு பெரிய பயமுறுத்தலை விடுத்திருப்பார் என்று என்னால் நினைக்க முடியாமல் உள்ளது. இவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் கூட 27 மேலதிக வாக்குகளால்  பிரேரணை நிறைவேறிதான் இருக்கும். (ஆதரவு 38, எதிர் 9, மேலதிக வாக்குகள் 29 என செய்திகள் தெரிவிக்கின்றன) நிலமை அவ்வாறு இருக்கும் பொழுது, முதலமைச்சரின் இவ்வற்புறுத்தலுக்கு வேறு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது என்கிற உண்மை இவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமளிக்கிறது. 

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை பிரேரணைக்கு ஆதரித்து வாக்களிக்க செய்வதன் மூலம் முதல் அமைச்சர் நிறைய தனிப்பட்ட நன்மைகளை எய்திக் கொள்ளுவார். அதுபோக முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு பிரச்சினைக்கு வித்திட்டு அதன் வாயிலாக பல அரசியல் இலாபங்களை எட்ட முடியும் என்கிற தந்திரோபாயம் அரசுக்கு வெற்றியை அளித்திருக்கிறது. இம்மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்பட்டு ஒரு தேர்தலுக்கு செப்டம்பருக்குள் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸை பிளவு படுத்தி பலன் பெற முதல் அமைச்சர் விரித்த வலைக்குள் இவர்கள் வீழ்ந்திருக்கிறார்கள் என்பதே எனது கணிப்பு. 

தலைவர், தவிசாளர்,செயலாளர் நாயகம் ஆகிய எவருடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றாலும் பெறாவிட்டாலும், கட்சியின் பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு எதிராக எக்காரணம் கொண்டும் செயல்பட் முடியாது என்கிற அடிப்படை நீதியை இவர்கள் புறந்தள்ளி செயல்பட்டிருப்பதற்கு எந்த காரணத்தையும் முன்வைக்க முடியாது. 

திவிநெகும வாக்களிப்பின் போது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தையும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததையும் காரணம் காட்டி இவர்கள் நியாயம் கற்பிக்க முயல்வது புத்திசாலிதனமானது அல்ல. ஏனெனில் மாகாணசபையின் அடிப்படை உரிமைகள் எல்லாமே அற்றுபோகும் மிக பயங்கரமான ஒரு சூழ்நிலையில், வெறும் பொம்மை மாகாணசபைகளின் உறுப்பினர்களாக இருந்து சமூகத்துக்கு எதையுமே பெற்றுக் கொடுக்க முடியாத கையாளாகாதவர்களாக மாகாணசபை உறுப்பினர்கள் ஆவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்கு கையுயர்த்தி இருக்கிறார்கள் இவர்கள்.

சில அரச நியமனங்களும், சில இலட்சம் ரூபாக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களும் கைநழுவிப் போகின்றதே என்று முதலைக் கண்ணீர் வடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஏனெனில் சிங்கள் கடும்போக்குவாதிகள் 13வது அரசியல் அமைப்புக்கு எதிராக கிளப்பி இருக்கும் பிரச்சினையின் பூதாகரம் தெரியாதவர்கள் அல்ல இவர்கள். 

சிங்கள கடும்போக்கு வாதிகளின் கனவு நனவானால் சில அரச நியமனங்களும் சிறு சிறு அபிவிருத்தி திட்டங்கள் மாத்திரமல்ல மொத்தமாகவே எல்லா நன்மைகளும் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும். 

இவர்கள் ஒரு ஆட்டை காப்பாற்றுவதற்காக ஆதரித்திருக்கிறார்கள், ஆட்டுப்பண்ணை மாத்திரமல்ல, மாட்டுப்பண்ணையும் மற்றவை யாவுமே பறிபோகப் போகிறது. அல்லாஹ் காப்பாற்றுவானாக.

5 comments:

  1. Mr.Hazeer ungalathu arikkai naan aatralum safaile ivvarana oru pireranai varuvathai munnitu kurippitta uruppinarkaluku katsinal aathavathu aalosanaikal valanginaarhala?

    ReplyDelete
  2. thambiththalaivar avarhale! kavithai pola surukkamaha elutha try pannum. athu sary...oopparum mikkarum illatha thalaivar kilakku m safail thivinekumaikku aatharavaliththu kai uyarthiya poralithilahangalukku ethiraha nadavadikkai eduththu vittara.? illai athkullum valamayana business puhanthuvittatha... thalaivarai kettuchchollungal.

    ReplyDelete
  3. இல்லை.. இல்லை.. உங்கள் சகோதரர்அமைச்சர் ஹக்கீமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது உண்மையான குற்றச்சாட்டு. அதற்கான ஆதாரங்களை இலகுவில் பெறலாம் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

    ReplyDelete
  4. கட்டுப்பாடு தெரியாத பன்னாடைகளை எல்லாம் சேர்த்துக்கொண்டால் இப்படித்தான் நடக்கும்

    சமூக துரோகிகள்

    இவர்களுக்கு சரியான நவடிக்கை எடுக்காவிட்டால் மு. கா. தலைமையும் சமூக துரோகியே

    ReplyDelete
  5. mafas! 'THUROHIHALL' endru yaarai solhireerhal? thalaivar ashraff'n kalathi irunthuvarum thurohihala? allathu 'APPAN EPPOTHU SAAWAAN THINNAI EPPOTHU KAALIYAHUM' endru kaththirunthu puhunthu konda thurohihala yaarai solhireerhall?

    ReplyDelete

Powered by Blogger.