Header Ads



வெளிநாடுகளில் இலங்கையர்கள் புரியும் குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்காது

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் அந்நாடுகளில் புரியும் குற்றச் செயல்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பேற்கமாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அபு தாபியில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியச் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்ட தண்டனை அனுபவித்து வரும் பல தொழிலாளர்களின் குடும்பங்களிடமிருந்து எமது அமைச்சுக்கு தினமும் பல கடிதங்கள் வந்தவண்ணமுள்ளன.

இருப்பினும் அவர்கள் தொழில்புரியும் நாடுகளில் உள்ள சட்டவிதிமுறைகளை மீறும்பட்சத்தில் அதுவிடயத்தில் எம்மால் தலையிட முடியாது.

கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்களை மரண தண்டனையிலிருந்து பாதுகாக்கவும் எம்மால் முடியாது. ரிஸானா நபீக் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இரத்த இழப்பீட்டை செலுத்த முன்வந்ததன் காரணம் அவரது இள வயது மற்றும் தற்செயலாக சம்பவித்த மரணம் என்பதுமேயாகும்.

இருப்பினும் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் எவரும் அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.