Header Ads



மாகாண சபைகளை இணைத்தல் முஸ்லீம்களுக்கு சாதகமற்றது

(அஸ்மி ஏ. கபூர் மாநகர சபை உறுப்பினர்
அக்கரைப்பற்று)

இன்று வெகுவாகப் பேசப்பட்டு பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற வடகிழக்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான சரத்து 13 தொடர்பாகவும் முஸ்லீம்களின் நிலையியல் சார்பாகவும் பேச விளைகின்றோம். சிறுபான்மைச் சமூகம் பல்சமூகக் கட்டமைப்பைக்கொண்ட ஒரு நாட்டில் ஒரே சொல் கொண்டு அழைக்கப்பட்டாலும் தமிழர்கள், முஸ்லிம்கள் என இருவகை இனம்சார் சிறுபான்மையினர் எமது நாட்டில் வாழ்கின்றனர். 

இங்கு மாகாணசபை முறைமையிலே காணப்படுகின்றன காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன வடக்கு கிழக்கு மாகாணங்களை பொருத்தவரையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரித்தானதும் அவசியமானதும் என்றும் பிரித்தறிவிக்க முடியாததுமாகும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணசபைகளை இணைத்தல் என்கின்ற விடயம் எவ்வளவு தூரம் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பகிரப்போகிறது? அதனூடான விளைபொருள் என்ன? கடந்தகால அனுபவங்கள் கற்றுத்தருகின்ற பாடம் என்ன? என்பது தொடர்பாக நாம் இன்னும் அதிகமாக வினாக்கள் எழுப்பி விடைகாண வேண்டும். இவ்வாறு அக்கரைப்பற்று மாநகர உறுப்பினர் அஸ்மி ஏ. கபூர் தென்கிழக்கு சட்டத்துறை மாணவர்களது முதலாவது ஒன்றுகூடல் அக்கரைபற்று சமாதான இல்லத்தில் இடம்பெற்றபோது உரையாற்றினர். 

மேலும் இணைந்த வடகிழக்கு முஸ்லிம்களின் நிலப்பரப்பை ஒன்றிணைத்ததாக கோரப்பட்ட நிலத்தொடர்பற்ற முஸ்லீம்களின் தனிஅலகு கோரிக்கை எவ்விடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகின்றது என்றால் தமிழ் மொழி பேசும் மக்களுக்கான போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் போராட்டம் பின்னர் தமிழ் இனத்திற்காக என்ற வடிவம் பெற்றதில் இருந்துதான் என்கின்ற உண்மையை இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும். 

வெற்று வார்த்தை ஜாலங்களினால் இவ்வாறான விடயங்களை சாதித்துவிட முடியாது. வடக்கில் இருந்து இரவோடு இரவாக முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்தமை போன்ற கசப்பான சம்பவங்களுக்கும் அப்பால் நின்று நாம் சிறுபான்மையினர் என்கின்ற எண்ணக்கருவை யாராவது ஒரு தமிழ் தலைவர் இதுவரையும் முன்மொழிந்து இருக்கின்றார்களா? முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக முஸ்லீம் தரப்புகளோடோ அல்லது வேறு சர்வதேச அமைப்புகளோடோ கதையாடல்கள் தமிழ் தலைவர்களினால் இதுவரையும் மொழியப்பட்டிருக்கின்றதா? என்பது மிகவும் வியப்பாகவே இருக்கின்றது. வடக்கு கிழக்கு பிரிந்திருப்பது ஊடாக கிழக்கு முஸ்லீம்களின் பெருநிலப்பரப்பு ஆகுவதை தவிர முஸ்லீம்களால் வேறெதனையும் செய்யமுடியாது. இதுவே இன்று எம்முன்னுள்ள ஒரேஒரு தெரிவாகும். 

உத்தவாதம் அளிக்கப்படாத ஏற்கனவே வஞ்சிக்கப்பட்ட நாம் இன்னுமொரு முடிவுக்கு செல்வதாயின் காத்தரமான களநிலைகள் எட்டப்படவேண்டும். இருமாகாணங்களை இணைத்தல் என்பது எவ்வாறான சாத்தியப்பாடுகளுக்குட்பட்டாலும் முஸ்லீம்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாத நிலத்தொடர்பற்ற தனிஅலகின் பின்னால் செல்வதை விட வடக்கு கிழக்கு என்கின்ற இரு மாகாணங்களில் கிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்வது சிறந்த வழிமுறையும் தீர்வுமாகுமென்றார்.   

No comments

Powered by Blogger.