அம்பாறையில் பிரான்ஸ் தூதுவர் - முஸ்லிம்களின் துன்பங்கள் குறித்து எடுத்துக்கூறல்
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரினா ரோபின்சன் இன்று 04 ஆம் திகதி செவ்வாய் கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இவரின் இவ் விஜயத்தின் போது சமாதானத்திற்கான சமயங்களின் அம்பாறை மாவட்டப் பேரவையினரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
சாய்ந்தமருதிலுள்ள பேரவையின் தலைமயகத்தில் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலமையிலான சர்வ சமயப் பிரமுகர்களுடன் கலந்துரையாடிய தூதுவர் இம் மாவட்டத்தின் சமகால நிலைமைகளையும் கேட்டறிந்தார்.
யுத்தத்தின் பின்னரான அம்பாறை மாவட்டம் என்ற மகுடத்தின் கீழ் சமூக பொருளாதார அரசியல் நிலைவரம் குறித்து தலைவர் டாக்டர் ஜெமீலினால் தூதுவரிடம் அறிக்கை ஒன்றும் சமர்பிக்கப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு என சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நுரைச்சோலையில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் 500 வீடுகள் மூன்று வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இது வரையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை .
பொத்துவில் பிரதேசத்தில் உடும்புக்குளம் செங்காமம் போன்ற இடங்களில் சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு இப்பிரதேச மக்களால் செல்ல முடியவில்லை.
பாணம உல்லை போன்ற கடல் பிரதேசங்கள் மீன் பிடிப்பதற்கு உகந்த கடற் பிரதேசமாகும். ஆனால் உல்லாச இடமாக இப்பிரதேசம் மாற்றப்பட்டு மீனவர்கள் இங்கிருந்து மீன் பிடிக்க விடாமல் விரட்டப்படுகிறார்கள்.என்ற குறைபாடுகளும் தூதுவரிடம் எடுத்துக்காட்டப்பட்டன.
தூதுவருடனான இக் கலந்துரையாடலில் கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அல்-ஹாஜ் ஐ.எம்.இப்றாஹிம் போதகர் எஸ்.கிறிஸ்தோபர் பாஸ்டர் ஏ.கிருபைராஜா உதவிக் கல்விப் பணிப்பாளர் தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா டாக்டர் ஏ.எல்.பாறூக் மௌலவி எப்.எம்.ஏ.மௌலானா சர்வ சமய சம்மேளன செயலாளர் எம்.எஸ்.ஜலீல் உட்பட பல பிரமுகர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment