லயோனல் மெஸ்சி மீது வரிமோசடி புகார்
அர்ஜென்டினாவில் பிறந்த லயோனல் மெஸ்சி கால்பந்தாட்டத்தில் புகழ் பெற்ற வீரராவார். இவர் அர்ஜென்டினா நாட்ட அணியின் கேப்டனாகவும் விளங்குகின்றார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எப்சி பார்சிலோனா லா லிகா சங்கத்திற்கான அணியில் முன்கள வீரராகவும் விளையாடுகின்றார். 25 வயதான இந்த மெஸ்சிக்கு ஸ்பெயினின் பார்சிலோனாவில் அளிக்கப்படும் ஆண்டு சம்பளம் 16 மில்லியன் யூரோக்கள் (ரூ.122 கோடி) ஆகும்.
இந்நிலையில், கடந்த 2007-09ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மெஸ்சி மீதும், அவரது தந்தை ஜோர்ஜ் ஹோரைசியோ மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் புகழைப் பயன்படுத்தும் உரிமையை விற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற்கு மேல் வரி கட்டாமல் தவிர்த்து வந்தனர் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இது குறித்து அரசாங்க வக்கீல் ரக்கெல் அமடோ, பார்சிலோனா மாவட்டத்தில் உள்ள கவா நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
பார்சிலோனா மாவட்டத்தில்தான் மெஸ்சி வாழ்ந்து வருகின்றார். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள புகாரை முதலில் நீதிபதி ஏற்றுக்கொண்டால்தான் குற்றவாளி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெஸ்சி அதிகமான அபராதத் தொகையுடன், ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment