Header Ads



டுபாயில் கடும் வெய்யிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகை

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் வெயிலின் தாக்கம் உச்சகட்ட ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பாலைவனப் பிரதேசமான துபாயில் கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 120 டிகிரி வரை கொளுத்திய வெயில், கட்டுமானப் பணிகள், எண்ணெய் கிணறுகளில் பணி புரிதல் போன்ற வெட்ட வெளிகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கியது.

இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, துபாய் நாட்டின் வெளிநாட்டினர் மற்றும் குடியேற்ற துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் ஒபைட் முஹைர் பின் சரவுர் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.

கடுமையான வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தலைவலி, காய்ச்சல், வாந்தி, திரவ சத்து குறைபாடு போன்றவற்றால் மயக்கமடைய நேரிடும்.

இதனைத் தவிர்க்க, வெட்டவெளிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெயிலின் நேரடி தாக்கத்திற்கு உள்ளாவதை தடுக்கும் வகையில், உச்சி வெயில் நேரமான பிற்பகல் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமின்றி, மனித ஆற்றலின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்தவும் வேலை அளிப்போர் முயற்சிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தளர்வான ஆடையணிந்து பணி புரிகிறார்களா? என்பதை கண்காணித்து அவர்களுக்கு போதுமான குடிநீர் வசதியும் செய்து தரப்பட வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை அமலில் இருக்கும். வேலை அளிக்கும் நிறுவனங்கள் மேற்படி உத்தரவை சரியானபடி கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.