கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (13) சபா மண்டபத்தில் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அமர்வின்போது விசேடமாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாவின் வீட்டின் மீது அண்மையில் இனம்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து முதல்வர் பிரதி முதல்வர் உட்பட சபைக்கு சமூகமளித்திருந்த சகல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களும் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு சமூகமளித்திருந்ததுடன், இந்த தாக்குதல் விடயம் சம்மந்தமாக பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் தனிநபர் பிரேரணை ஒன்றையும் சபையில் சமர்ப்பித்து உரையாற்றி கண்டனத்தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் முதல்வர், பிரதிமுதல்வர் உட்பட சகல உறுப்பினர்களும் இணைந்து கல்முனை பொலிஸ் நிலையம் சென்று இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபளியு.எம். கபார் மிகவும் துரிதமாக இதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர்களின் வீடுகளையும் விசேட பொலிஸ் குழுக்களின் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்த உள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து மேலும் சபை அமர்வு நடைபெற்றபோது, அண்மையில் சர்ச்சைக்குள்ளான சாய்ந்தமருது மீராசாஹிபு ஞாபகார்த்த வாசிகசாலை பெயர் விடயமாக ஏகமானதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்பெயர் அங்கீகரிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சபையில் உறுப்பினர்களான முஸ்தபா, சாலிதீன், உமர் அலி, பஸீர், பறக்கத்துள்ளாஹ், பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை. ஆனால் இறுதிவேளையில் பிரதி முதல்வர் சபைக்கு சமூகமளித்து முடிவுவரை பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment