கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்
( எஸ்.அஷ்ரப்கான் )
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. எம். பறகத்துள்ளாவின் வீட்டின் மீதான குண்டுத்தாக்குதலை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துள்ளா மீதான தாக்குதல் பாரிய கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல்; முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழான கல்முனையில் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கே அச்சுறுத்தல் எனும் போது ஏனைய கட்சிக்காரார்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பது பயங்கரமானது.
தொண்ணூறு வீதம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களைக்கொண்ட கல்முனையில் அக்கட்சியின் உறுப்பினரின் வீடு தாக்கப்பட்டுள்ளதன் மூலம் சுய நல அரசியலுக்காக எத்தகைய அநியாயத்தையும் செய்ய இவர்கள் தயார் என்பதையே காட்டுகிறது. கல்முனை மாநகர சபை பற்றி எமது கட்சி தலையிடக்கூடாது என அண்மையில் கல்முனை மேயர் ஊடகங்கள் வாயிலாக எமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தமது பக்க நியாயங்களை தெளிவு படுத்துவதன் மூலம் பதில் வளங்கத்தெரியாதவர்கள் இவ்வாறு கோழைத்தனமாக ஆயுதத்தை பிரயோகிப்பது கல்முனையின் ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இத்தாக்குதல் முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு மோதலின் அறிகுறி என சொல்லப்பட்டாலும் ஆயுத தாக்குதலை நாம் அனுமதிக்க முடியாது. ஒரு காலத்தில் படித்தவர்களும், பண்பாளர்களும் அரசியல் செய்த கல்முனை இன்று பண்பற்றவர்களாலும், ஜனநாயக அரசியல் தெரியாத சுயநலவாதிகளாலும், பணத்தையும், பொய்யான வார்த்தைகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி வாக்குப்பெறுபவர்களாலும் கல்முனை சீர் குலைந்துள்ளது கவலைக்குரியதாகும். இந்நிலை கல்முனையில் தொடருமாயின் கல்முனை மாநகர சபையை கலைத்துவிட்டு அதனை ஆணையாளரின் கீழ்கொண்டு வரும்படி நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விட வேண்டிய நிலை வரலாம்.
ஆகவே பறக்கத்துள்ளா மீதான தாக்குதலை கட்சி பேதமின்றி நாம் கண்டிப்பதுடன் இது விடயத்தை நீதியான முறையில் பொலிசார் விசாரித்து குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறொம்.
Post a Comment