முஸ்லீம் காங்கிரஸ் பாவ விமோசனம் பெற சிறந்த சந்தர்ப்பம்
(Mohamed Ismail Umar Ali)
பல்வேறு விடயங்களிலும் தங்களது அபிலாசைகளை எடுத்தெறிந்து தான் விரும்பிய போக்கிலே மூக்கணாம் கயிறு அறுந்த காளையாக அரசியல் தாண்டவமாடுகின்றது என்று கட்சி ஆதரவாளர்களால் அப்பட்டமாக குற்றம் சாட்டப்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் மிகவும் ஒரு இக்கட்டான ஒரு சூழ் நிலையில் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகான சபையில் போட்டியிட்டது, பின்னர் அரசுடன் இணைந்து கொண்டு ஆட்சியமைக்க வழி வகுத்தது, சிறுபான்மையினரை எதிர்காலத்தில் பாதிக்கும் என்று அறிந்திருந்தும் திவிநேகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் வாக்களித்து வரலாற்றை மாற்றியமைத்தது,பொது பலசென முஸ்லீம்களது சமயஸ்தலங்களைத்தாக்கி,முஸ்லீம்களது உணவு விடயத்தில் பாதிக்கக்கூடிய விடயங்களை தீர்மானிக்கும் போது உருப்படியான விடயங்கள் எதையும் சாதிக்காமலிருந்தது,மாடறுப்பதர்க்கு எதிராக பல்வேறுபட்ட அரச,அரசசார்பற்ற நிறுவனங்கள் போர்க்கொடி ஏந்தி இருக்கும் நிலையில் முஸ்லீம்களைப் பொறுத்தவரை பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் நிறுவனமாக கருதப்படும் முஸ்லீம் காங்கிரஸ் இதுவரை எந்த உருப்படியான எதிர்ப்பையும் காட்டமலிருப்பது (அறிக்கையிடலைத்தவிர) போன்ற பல விடயங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் மீது தம்மை வெறுப்படைய செய்த காரணங்களாக மக்களால் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறு மக்கள் மனங்கள் ஆலையிலிட்ட கரும்புபோல உருக்குலைந்து கொண்டிருக்கின்ற வேளையில்,ஆப்புகளிற்கெல்லாம் பெரியதோர் ஆப்பாக 13ஆவது சட்டத்தில் திருத்தத்த ஏற்படுத்தி அரசு சிறுபான்மையினரை அதல பாதாளத்தில் தள்ளிவிட நினைக்கின்றது.படித்தவர் முதல் படியாத பாமரனுக்கும் இந்தச்சட்டத் திருத்தத்தின் பலாபலன்கள் நன்கு தெளிவாகப்புரிகின்ற நேரம் இது,ஏனனில் இதுவரை செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள் சற்று மயக்கமானதாகவும் இலகுவில் தெளிவாக விளங்க முடியாத வகையிலும் சூட்சியாகவே நிறைவேற்றப்பட்டன,ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கின்ற சட்டத்திருத்தம் நமது விரல்களை நம் கண்ணுக்கு முன்னே வைத்து நம் கண்களை குத்தச்சொல்லுகிறது.
இது சிறுபான்மையினரை மீண்டும் நெருக்கடிக்கு தள்ளிவிடும் என்று அறிந்தாலும் அரசுடன் பங்காளியாக இருக்கும்,அமைச்சர் அதாவுல்லாஹ் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் இன்னும் இவ்விடயம் பற்றி எது வித கருத்துக்களையும் கூறாது மௌனமாக இருப்பது மக்களிடத்தில் அவர்கள் மேல் வெறுப்பைஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் ஐயமில்லை. அதே நேரம் மக்கள் இவர்களை இறுதித்தறுவாயாகக் கருதும் இந்த நேரத்தில் சந்தேகக் கண்கொண்டு நோக்கவும் முனைகின்றனர்..ஏனெனில் இதுவரை அரசு கொண்டுவந்த , முஸ்லீம்களையோ ஏனைய சிருபான்மயினரையோ பாதிக்கின்ற எந்த சட்டமூலத்தின் போதும் இவர்கள் வாய்மூடி மௌனிகளாகவே இருந்துள்ளனர்.
அந்தச் சூழ் நிலை மாறி இன்று இந்தச்சட்ட மூலம் பற்றிய செய்திகள் அரசால் புரசலாக வெளியே கசியத்துவங்கிய நாளிலிருந்து முஸ்லீம் காங்கிரஸ் தமது கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடாத்தியதும் உயர்மட்டக் குழுவைக்கூட்டி விவாதித்ததும்,இறுதியாக தலைவர் தனது இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு இரண்டு மணி நேர கலந்தாலோசனை செய்ததும் இதுவரைகாலம் நடந்தவைகளுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமானதாகவும் ஆரோக்யமானதொரு விடயம் என்றும் கூறலாம்.
இருந்தாலும் இதுபோலத்தான் முன்னரும் கூடினார்கள் ,முடிவெடுத்தார்கள் ஆனால் இறுதியில் முடிவெல்லாம் தலைகீழாய்த்தான் போனது,என்றும் மக்கள் கடந்தகால கட்சியின் துரோகச் செயல்களை மீட்டுப்பார்க்கவும் தவறவில்லை.
இந்த நிலையில் இந்தக்கட்சியின் தலைவர் ,செயலாளர் உட்பட ஏனய பிரமுகர்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற சட்டத்திருத்தம் பற்றி தமது எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருப்பது மக்கள் மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பற்றிய சற்று நேரான எண்ணக்கருவை (Positive thought ) ஏற்படுத்தியிருக்கின்றது. நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் கூட அதிகரித்திருக்கின்றது எனக்கூறலாம்.
என்னைப்பொறுத்தவரை இதுவரைகாலமும் மக்களது எதிர்பார்ப்புக்களிற்கு இனியவை செய்யாது இன்னா செய்து வந்த இக்கட்சி ,இனிமேல் வருங்காலங்களில் மக்களது நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று சிதைவுகளை செப்பனிட (Rehabilitaion ,Repai and Rebuilding) சிறந்த ஒரு வாய்ப்பை பெற்றிருக்கின்றது என்று கூறவேண்டும் எனத்தோன்றுகின்றது.
எனவேதான் முன்பெல்லாம் குட்டிக்கரணம் அடித்து மக்களது எதிர்பார்ப்புகளை அந்தரத்தில் பறக்கவிட்டதைப்போல் இம்முறையும் நடந்து சந்தர்ப்பத்தை கோட்டைவிடுவார்களாயின் மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் தனது வாக்களர் வங்கியை தக்கவைத்துக்கொள்வது கடலில் கரைத்த உப்பு போல கண்டுபிடிக்க முடியாததாக போய்விடும்.
இதைத்தான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். கட்சி முடிவெடுத்து விட்டது. கட்சியிலுள்ள தரகர்களில் கட்சித் தலைமை விழிப்பாக இருக்க வேண்டும் என்று.
ReplyDeleteதரகர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை நிலையாகத் தக்க வைத்துக் கொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பமாக உள்ளது. எனவே அதுபற்றி அவர்கள் மறைமுகமாக அரசுடன் பேசுவார்கள். அரசியன் வாக்குறுதிகளையும் பெற்றுக் கொள்வார்கள்.
கடைசியில் அவர்கள் மேலும் இரண்டொரு எம்.பிக்களுடன் அரசின் பக்கம் ஆதரவளிக்க முற்படும்போது, தலைவரும் செயலாளரும் 'கட்சியைப் பாதுகாக்கும்' தமது வழமையான கொள்கைப்படி அரசுக்கே ஆதரவளித்து தமது அமைச்சுப் பதவியையும், ஆடம்பர வாழ்க்கை வசதிகளையும் தக்க வைத்துக் கொள்வார்கள் என்பதுதான் இந்த நிமிடம் வரையான எல்லோரது எதிர்பார்ப்புமாக உள்ளது.
இதற்கு மாற்றமாக எல்லா மு.கா. எம்பிக்களும் ஒட்டு மொத்தமாக சமூக நலன் கருதி இறுதி வரைக்கும் உறுதியாக இருந்து அரசின் முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தால் நீங்கள் செர்லவதைப்போன்று இதுவொரு பிராயச்சித்த நடவடிக்கையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-