கனவுகளை தொலைத்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாத அவர்..!
கைப்பந்து (வாலிபால்) போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு ரெயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார்.
அதே ரெயிலில் பயணித்த நகை பறிக்கும் கொள்ளையர்கள் அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை பறிக்க முயன்றனர். அவர்களை எதிர்த்து போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட அவர் மீது எதிர் தண்டவாளத்தில் வந்த ரெயில் ஏறியது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.
முழங்காலுக்கு கீழே இரு கால்களையும் துண்டித்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஆபரேஷன் மூலம் கால்களை அகற்ற அவர் சம்மதித்தார்.
கைப்பந்து போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று, சர்வதேச அரங்கிலும் சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணிய அந்த இளம்பெண்ணின் ஆசைக் கனவுகளும் துண்டிக்கப்பட்ட காலுடன் குப்பைக் கூடைக்கு போனது.
கனவுகளை தொலைத்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாத அவர், தவறவிட்ட சாதனையை வேறு ஏதாவது ஒரு துறையில் நிகழ்த்தியே தீர வேண்டும் என்று சபதமேற்றுக் கொண்டார்.
தன்னை ஒரு மாற்றுத் திறனாளியாக இந்த சமூகமும், உலகமும் கழிவிரக்கத்துடன் பார்ப்பதை அவர் வெறுத்தார்.
தன்னைப் பார்த்து இந்த உலகமே வியக்க வேண்டும், புகழ வேண்டும், அதற்கு என்ன வழி? என்று அந்த வீராங்கனையின் மனமும், மூளையும் 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டே இருந்தது.
மலையேறும் பயிற்சியில் ஈடபட்டுக்கொண்டிருந்த தனது அண்ணனிடம், 'நானும் மலையேறும் பயிற்சியில் ஈடுபட விரும்புகிறேன்' என்று தனது ஆசையை அந்த மாற்றுத்திறனாளிப் பெண் கூறிய போது அவரும் சற்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் தான் பார்த்தார்.
ஆனால், அந்த பார்வையில் புறக்கணிப்பு இல்லை. ஏளனம் இல்லை.
மாறாக, கின்னஸ் சாதனையை நிகழ்த்திய ஓர் இந்திய இளம்பெண்ணை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய ஓர் கனிவு இருந்தது. கருணை இருந்தது.
நேரு மலையேறும் பயிற்சி மையத்தின் நிர்வாகிகளுக்கு அந்த பெண்ணின் ஆசையை தெரிவித்து, செயற்கை கால்களுடன் மலையேற்றத்திற்கான அடிப்படை பயிற்சிகளை பெற அவர் உதவினார்.
பின்னர், டாட்டா இரும்பு நிறுவனத்தின் ஆதரவு, அரவணைப்பு மற்றும் நிதியுதவியுடன் வெறும் 18 மாத பயிற்சியில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மாற்றுத் திறனாளிப் பெண் என்ற உலக சாதனையை படைத்த அந்த பெண்ணின் பெயர் அருணிமா சின்ஹா (25).
இந்த சாதனைக்கு பின்னர் ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்த அருணிமா சின்ஹா கூறியதாவது:-
எனது பலவீனத்தையே நான் பலமாக மாற்றிக் கொண்டேன். என்னை விமர்சித்தவர்கள் எல்லாம் எனக்கு உதவத் தொடங்கினார்கள். அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விடக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்தேன்.
எனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கி விடாமல் போராடினேன். இன்று இலக்கை எட்டிவிட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறேன். இன்னும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். என்னைப் போல் சமூகத்தில் உள்ள பின்தங்கியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஓர் கலைக்கழகத்தை உருவாக்க விரும்புகிறேன். என்னைப் போன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு நான் சில அறிவுரைகளை கூற விரும்புகிறேன்.
எடுத்த முயற்சியில் பின்வாங்காதீர்கள். கடுமையாக உழையுங்கள். கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அநத் கனவுகள் உங்களை உறங்க விடாது. சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும்.
Post a Comment