Header Ads



'தேசிய ஷூரா பேரவை' சமூகத்தின் படிமுறை வளர்ச்சியினைக் கொண்டிருக்கும்..!

(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)

அல் ஹம்துலில்லாஹ்,  இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் வேறு நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம் சிறுபான்மையினரை விட தங்களுக்குள் சிறந்த அடிமட்ட மற்றும் தேசிய மட்ட சிவில் சன்மார்க்க மற்றும் அரசியல் தலைமைத்துவக் கட்டமைப்புக்களை கொண்டிருக்கின்றனர்.

ஊர் ஜமாஅத்துகளின் நிர்வாகங்கள், பள்ளி வாயால் சம்மேலனங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், தொண்டர் நிறுவனங்கள், இளைஞர் மாதர் அமைப்புக்கள், தேசிய மட்ட அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் என பல்வேறு பட்ட ஒழுங்கமைப்புக்கள் தங்கள் சக்தியிற்கும் வளங்களிற்கும் வசதி வாய்ப்புகளுக்குமேற்ப கடந்த காலங்களில் அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றனர்.

எனினும் இலங்கையின் இனமுறுகல் வன்முறையாக வெடித்த காலம் முதல் போருக்கு பின்னரான புதிய சூழ்நிலைகள் வரை நாளுக்கு நாள் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பரிமாணங்களிலான நெருக்கடிகள் சவால்கள் இலங்கை முஸ்லிம்கள் தங்களை அவசரமாகவும் அவசியமாகவும் தமது சமூக வாழ்விலும் தேசிய வாழ்விலும் ஒருங்கிணைத்து ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டிய தேவை வெகுவாக உணரப்பட்டுள்ளது.

பல்வேறு வரையறுக்கப் பட்ட இலக்குகளுடன் இஸ்லாமிய இயக்கங்களும், சன்மார்க்கத் தலைமைகளும், தங்களுக்கே உரிய நிகழ்ச்சி நிரல்களுடன் கூடிய அரசியல் கட்சிகளும், கொழும்பிலும் பிராந்தியங்களிலும் இயங்குகின்ற சிவில் தலைமைகளும் கடந்த மூன்று தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தை பல்வேறு  ஒன்றிணைக்க முடியாத கூறுகளாக, அணுகுமுறை வேறுபாடுகள் நிறைந்த அமைப்புக்களாக, கருத்து வேறுபாடுகளின் களங்களாக மாற்றியுள்ளமை கசப்பாயினும் சகலாராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற உண்மையாகும்.

குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள சவால்களுக்கு அகில இலங்கை ஜம்மியாய்துள் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்சில் போன்ற சன்மார்க்க மற்றும் சிவில் தலைமைத்துவங்கள் தமது வளங்களுக்கும் வரையறைகளுக்கும் உற்பட்ட விதத்தில் முகம் கொடுத்து வருகின்றமை சமூகத்திற்கு ஓரளவு  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என்றாலும் விடுக்கப் படுகின்ற சவால்களின் அரசியல் இராஜதந்திர  பின்புலங்கள், அவற்றின் பல்வேறு பட்ட பரிமாணங்கள் மேற்படி சிவில் சன்மார்க்கத் தலைமைகளோடு சமூகத்தின் சகல அங்கங்களையும் ஒருங்கிணைத்த பலமான சிவில் சமூக பொறிமுறை ஒன்றின் தேவையை வெகுவாக உணர்த்தியுள்ளன.

மேலே சொல்லப் பட்ட நிறுவனங்கள் எவற்றிலும் நம்பிக்கை கொள்ளாத அல்லது அவற்றினால் உள்வாங்கப் படாத  அறிஞர்கள், புத்திஜீவிகள், பல்கலைகழக சமூகத்தினர், வியாபார, விவசாய, தொழில் துறை சார்ந்தோர், இளைஞர் மாதர் மாதர் சமூகங்கள் என சமூகத்தின் கணிசமான ஒரு பகுதியினர்  தமது பங்கு பற்றுதலுக்கான சந்தர்ப்பங்களை களங்களை எதிர்பார்த்துக் கொண்டும் இருக்கின்றார்கள். எனவே யாரையும் சமூக தேசிய உணர்வு அற்றவர்களாக வேறு எவராலும் இலகுவாக இடைபோட்டு விட முடியாது என்பதே உண்மை.

மேலே சொல்லப் பட்ட சகல தரப்புக்களும் கிராம மட்டம் முதல் தேசிய மட்டம் வரையிலும் முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் பொதுவாக முகம் கொடுக்கின்ற விவகாரங்களில் இனம் காணப்படுகின்ற பொதுவான இலக்குகளில் ஒன்றிணைந்து செயற்படுகின்ற, சவால்களுக்கு முன்னால் ஒரே குரலாக ஒரேயணியாக தங்களை ஒழுங்கமைத்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியத்தை வெகுவாக உணர்ந்துள்ளனர். 

 கால,கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், சவால்கள், நெருக்கடிகள்  என்பவற்றிற்கு சிறந்த தலைமைத்துவ பண்புகளோடு முகம் கொடுக்கவும், சகலரும் ஒன்றிணைந்து செய்ய முடியுமான சமூக தேசிய பணிகள் என்பவற்றில் சமூகத்தின் சகல அங்கங்களினதும் ஆற்றல்களையும் வளங்களையும் அங்கீகரித்து ஒன்று திரட்டி சிறந்த கலந்தாலோசனைகள், குறுகிய இடைக்கால, நீண்டகால திட்டமிடல்களுடன் செயற்படவும் மேற்படி ஒருங்கிணைப்புப் பொறிமுறை மகத்தான வரலாற்று நகர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

தேசிய ஷூரா பேரவை என்று அடையாள படுத்தப் படும் இந்த முஸ்லிம் சமூக ஒருங்கிணைப்பு பொறிமுறை  தற்பொழுது சமூகத்தில் தொழிற்படுகின்ற சகல அங்கங்களையும் ஒரே தளத்தில் இணைக்கின்ற கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் அந்த அமைப்புக்களினதும், நிறுவனங்களினதும் தனித்துவத்தில், வேலைத்திட்டங்களில் தலையிடவோ, குறைகாணவோ சற்று தெளிவாகச் சொன்னால் அவற்றின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அவற்றை வலுவிழக்கச் செய்யவோ முனைய மாட்டது, நிச்சயமாக அவ்வாறான அணுகுமுறைகள் தேசிய ஷூரா பேரவையின் அடிப்படை இலக்குகளுடன் முரண்படுகின்ற விடயங்களாகும்.

அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமா  உத்தேச ஷூரா பேரவை அமைவிற்கான  இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினருடன் பூர்வாங்க ஒத்துழைப்பை வழங்கி வருவதோடு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடு பட்டு வருகிறது,  தேசிய முஸ்லிம் ஆலோசனை சபையொன்றின் அவசியத்தை வலியுறுத்தும்இலங்கை முஸ்லிம் கவுன்சிலுடன் மேற்படி இடைக்கால குழுவினர் இரண்டுமுறை கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர், இன்ஷா அல்லாஹ்  கூடிய விரைவில் அவர்களுடன் தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெறவுள்ளது.  வை எம் எம்  ஏ,  ஜமாத்தே இஸ்லாமி ,ஷரீஆ கவுன்சில், தவ்ஹீத் ஜாமாத் ,ஜமாஅதுஸ் ஸலாமா, பல்கலைக் கழக சமூகத்தினர், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் உற்பட பல்வேறு தொண்டர் நிறுவனங்கள்,வர்த்தக சமூகத்தினர் போன்றோரை சந்தித்து அவர்களது பூரண ஆதரவையும் பெற்றுள்ளனர், இன்னும் சந்திப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.   

உத்தேசதேசிய ஷூரா பேரவை தொடர்பான கலந்துரையாடல்கள், கருத்துக் கணிப்புக்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவருகின்றமை தெரிந்ததே, அந்தப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இடைக்கால குழுவினர்  உத்தேச தேசிய ஷூரா பேரவையில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற பலதரப்பு ஆலோசனைகளை உள்வாங்கியுள்ளதால், தீவிர நேரடி அரசியலில் உள்ளவர்களும், மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களும் தேசிய ஷூரா பேரவையின் நிறைவேற்றுக் குழுவில் அல்லது பொது சபையில் அல்லது பேரவையில் உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என கொள்கையளவில் பிரகடனம் செய்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்து கலந்துரையாடல்களை நடாத்தி வரும் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் இன்ஷா அல்லாஹ்  அடுத்த கட்டமாக குருநாகல்,மாத்தளை மாவட்டங்களுக்கும், கிழக்கிலங்கைக்கும் விஜயம்  செய்யவுள்ளதோடு, கிழக்கிலங்கையில் பள்ளிவாசல் சம்மேளனங்கள், சிவில் தலைமைகள், உலமாக்கள் தென்கிழக்கு பல்கலை  சமூகத்தினர்  என பல்வேறு தரப்புக்களையும் சந்திக்க உத்தேசித்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கும் வளப்  பற்றாக் குறைகளுக்கும் மத்தியில் தமது சொந்த தியாகங்களின் அரப்பணிப்பின் அடிப்படையிலேயே இந்த இடைக்கால ஏற்பாட்டுக் குழு செயற்பட்டு வருகின்றமையும் கவனத்திற் கொள்ளப் படல் வேண்டும்!

அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் மேலான்மைகளுக்குள் தேசிய ஷூரா பேரவை சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற உயரிய நோக்குடன் மேற்படி நிபந்தனைகள் முன்மொழியப் பட்டிருந்தாலும், முஸ்லிம் தேசிய அரசியல் விவகாரங்களுக்கான நிபுணர்குழுவில் அரசியல் ஆய்வாளர்கள், துறை சார் நிபுணர்கள் இராஜ தந்திரிகள் ஆகியோருடன் அரசியல் தலைமைகள்  பொதுவான இலக்குகளில் ஒன்றிணைத்து செயற்படுவதற்கான, தேசிய ஷூரா பேரவையின் விஷேட அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உத்தேச யாப்பு வரைவில் இடம்பெறும், எனவே கலந்துரையாடல்களில் முன்வைக்கப் படுகின்ற காரசாரமான வாதப் பிரதிவாதங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகள் சரியான பரிமாணத்தில் உள்வாங்கி எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி அமானிதமான இந்த வரலாற்று நகர்வுக்கு பூரண ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

எந்த ஒரு சமூகத்திலும் அரசியல் தலைமைகளை சமூக தேசிய வாழ்விலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது, எனினும் இன்றைய அரசியல் கலாச்சாரம் குறித்து சமூகம் மிகவும் அவதானமாக இருக்கின்றமை புரிந்து கொள்ள முடியாத இரகசியமல்ல.

 தேசிய அரசியலில் அல்லது பிராந்திய அரசியலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் களத்தினதும் காலத்தினதும் தேவைகளுக்கேற்ப முஸ்லிம் சமூகத்தின் துறை சார் நிபுணர்களின் சிவில் சன்மார்க்கத் தலைமைகளின் ஆலோசனை வேண்டப் படுமிடத்து தேசிய ஷூரா பேரவையை அல்லது பிராந்தியக் கட்டமைப்பை தேவைக் கேற்ப கூட்டுமாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேண்டிக் கொள்கின்ற ஆரோக்கியமான சூழ்நிலைகளும் எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் உருவாகும் என்ற நம்பிக்கை சமூக ஆர்வலர்களிடம் இருக்கிறது.

உத்தேச ஷூரா பேரவை துறை சார்  நிபுணத்துவ ஆய்வுப் பணிகளுக்காகவும் கலந்துரையாடல்களுக்காகவும் பல்வேறு உப குழுக்களை கொண்டிருக்கும், உதாரணமாக சட்டம் நீதித் துறை சார்ந்த விடயங்களுக்கு சட்ட வல்லுனர்களைக்  கொண்ட குழு தேசிய ஷூரா பேரவையின் செயலகத்துடன் இயங்கும், கல்வி உயர்கல்வி,  அரசியல், ஊடகம், சமூகக் காப்பீடு, தொழில் சுய தொழில், இளைஞர் மாதர் பணிகள், கடல் கடந்து வாழ்வோர்  செயற்பாடுகள், என இன்னோரன்ன விவகாரங்களுக்கான விஷேட நிபுணர் குழுக்கள் தேவைக்கு ஏற்ப ஷூரா பேரவையினால் ஏற்படுத்திக் கொள்ளப் படும். தேசிய மட்டத்தில் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தப் படும் உப குழுக்கள் பிராந்திய மட்டத்திலும் கிராம மட்டத்திலும் தேவைகளுக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டு விடய தானங்களுக்குரிய பொறிமுறைகளும் ஒழுங்கமைக்கப் படும். 

 முஸ்லிம் சமூகத்தினை மாத்திரம்  மையப் படுத்திய ஒருங்கிணைப்புப் பொறிமுறையாக உத்தேச தேசிய ஷூரா பேரவை  இருப்பினும் பல்லின சமூகமொன்றில் சமாதான சகவாழ்வு மற்றும் தேசிய வாழ்வில் காத்திரமான பங்கெடுப்பு என பல்வேறு பரிமாணங்களில் நீண்ட இடைக்கால மற்றும் குறுகிய கால செயற்திட்டங்களை ஆய்வு செய்து அமுல் படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தேசிய வாழ்வில் முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை மத கலாச்சார உரிமைகளை காத்துக்  கொண்டு சகோதர சமூகங்களோடு இணைக்கப் பாட்டுடன் புரிந்துணர்வுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு ஜனநாயக வழிமுறைகளூடாக தமது இருப்பு பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை வென்று கொள்வதற்கான பிரதான வழிகாட்டல்களை தேசிய ஷூரா காலத்துக்கு காலம் முன்வைக்கும் இன்ஷா அல்லாஹ்.

உத்தேச ஷூரா பேரவையின் கட்டமைப்பு எவ்வாறு  அமைய வேண்டும் என பல குழுக்கள் பல்வேறு வடிவங்களை தயார் செய்திருந்தனர், அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமது மாதிரிகளை எல்லாம் விரிவாக ஆராய்ந்து சமூகத்தின் பல்வேறு பட்ட தரப்புக்களுடனும் கலந்துரையாடி இறுதியாக கடந்த மே மாதம் ஓராம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் சமூக முக்கியஸ்தர்களின் முன் சமர்ப்பிக்கப் பட்டு அவர்களது ஆலோசனைகளும் பின்நூட்டலகளும் உள்வங்கப்பட்டமை பலரும் அறிந்த விடயமாகும்.  

தயாரிக்கப் பட்ட இறுதி வரைவின் படி உத்தேச தேசிய ஷூரா பேரவை கட்டமைப்பு இலங்கையில் உள்ள சகல தேசிய அளவிலான இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்,  சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைத்துவங்கள் சகலரும் ஏற்றுக் கொள்கின்ற இஸ்லாமிய வரையறைகளுக்கு உற்பட்ட சமூக அங்கீகாரம் கொண்டுள்ள துறை சார் நிபுணர்கள் உள்வாங்கப் பட்டு ஒரு இடைக்கால ஷூரா சபை தோற்றுவிக்கப் படும்.

 அவ்வாறு உயர் மட்டத்தில் அமையப் பெறும் இடைக்கால ஷூரா சபை தமக்கு கீழ் இயங்குகின்ற செயலகம் மற்றும் துறை சார்  நிபுணர்களைக் கொண்ட உபகுழுக்கள் என்பவற்றை உருவாக்குவார்கள், அத்தோடு தற்பொழுது  நகல் வரைவாக உள்ள  தேசிய ஷூரா பேரவைக்கான சட்ட யாப்பினையும் ஒழுக்கக் கோவையினையும்  மீள்பரிசீலனை செய்வார்கள்.  ஏக காலத்தில் முஸ்லிம் சமூக குடிசன பரவலுக்கு ஏற்ப பிராந்தியங்களின் பிரதிநிதிகளை படிப்படியாக உள்வாங்குவார்கள் .

காலக்கிரமத்தில் இடைக்கால தேசிய ஷூரா சபையின் கீழ் அமையும் தேசிய அமைப்புக் குழுவினர்  சகல  தரப்புக்களையும் உள்வாங்கிய ஊர்மட்ட ஷூராக்களை அமைப்பதற்கான முயற்சிகளை  அவ்வப் பிரதேசத்தில் உள்ள சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகளுடனும், புத்திஜீவிகள், தொழில் துறை சார்ந்தோர் போன்றோருடனும்  இணைந்து மேற்கொள்வர். பின்னர்  அடிமட்ட ஷூரா சபைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் பிராந்திய கட்டமைப்புக்களும் இன்ஷா அல்லாஹ் அமைக்கப் படும், காலக்கிரமத்தில்  நாடு தழுவிய அடிமட்ட மற்றும் பிராந்திய மட்ட ஷூராக்   கட்டமைப்புக்களும் உப குழுக்களும் முழுமை பெறுகின்ற  பொழுது முழுமை பெற்ற தேசிய ஷூராப் பேரவை உதயமாகும். இன்ஷா அல்லாஹ்.

ஒருசிலர்  தற்பொழுது பணியிலுள்ள உத்தேச ஷூரா பேரவை முன்னெடுப்புக்கான இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினரிடம் "தேசிய ஷூரா பேரவை"  அமைந்துவிட்டதாக எண்ணி பல்வேறு சந்தேகங்களை வினாக்களை தொடுக்கின்றனர், உண்மையில் கடைத்தொகுதியை கட்டும் மேசன்மார் கையாட்களிடம் தொகுதியில்  நடைபெறப்போகும்  வர்த்தக நடவடிக்கைகள்  குறித்தும், கொடுக்கல் வாங்கல் சந்தை  நிலவரங்களை     கேட்பதுபோல் சில குழுவினர் பேரம் பேசல்களை தொடங்கிவிடுகின்றனர். 

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அமையவுள்ள இடைக்கால ஷூரா பேரவை முழுமையான தேசிய ஷூரா பேரவையின் படிமுறை தோற்றத்திற்கான சகல நடவடிககைகளையும் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளும் என்பதனை இப்போதைக்கு கூறலாம்.  

இறுதியாக, மேற்படி வரலாற்றுப் பணியில் சகலரும் தங்களை பங்காளர்களாக இணைத்துக் கொள்ளவேண்டும், அதனடிப்படையில் அமானிதமான இந்த சமூகப் பணியினை குறுகிய இலக்குகளுடன் பார்க்காது  ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஆலோசனைகளையும் முன்வைக்க வேண்டும், தற்பொழுது வாழுகின்ற நமது தலைமைகளை, ஆயுட்கால அடைவுகளை மறந்து எதிர்கால சந்ததியினருக்கு மிகச் சிறந்த அறிவு பூர்வமாக ஆராயப்பட்ட தலைமைத்துவக் கட்டமைப்பு ஒன்றினை விட்டுச் செல்லும் உயரிய நோக்கில் இந்த வரலாற்று நகர்வின் முன்னோடிகளாக தங்களை இணைத்துக் கொள்ளுமாறு மேற்படி இடைக்கால ஏற்பாட்டுக் குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

2 comments:

  1. தேசிய ஷ{ரா சபை என்பது முஸ்லிம்களின் நடவடிக்கைகளில் தலையிடப்படவேண்டிய ஓரு அமைப்பாக போகின்றது. முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எனும் பொமுது அது குர்ஆன் ஹதீஸ்களுடன் சம்பந்தப்படுகின்றது. எனவே இதற்கு பொறுப்பாக வருபவர்களிடம் கண்டிப்பாக வேண்டிக் கொள்வது தங்களது அனைத்து நடவடிக்கைளையும் நபியவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைத்துக் கொள்ளுமாறு. குறிப்பாக நபியவர்களின் முக்கிய சுன்னத்தான தாடி வைத்தல் போன்றவை. மற்றமாக மேற்கத்திய நாய்களின் வாழ்க்கை அமைப்பை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பின் தயவு செய்து இதில் கலந்து கொள்வதை தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான். இல்லையெனில் இந்த தேசிய ஷ{ரா சபை நாளை ஒரு அமைப்பாக இயங்குமாயின் அரபு நாடுகளில் வெடித்த கிளர்ச்சிகள் காலப்போக்கில் இந்த சபைக்கும் பொதுமக்களுக்கும் மத்தியில் கிளாச்சிகள் எழும் என்பதில் சந்தேகம் கிடையாது

    ReplyDelete
  2. enna nama anuppiyaza poda matteengala neengalum appadiya allahwa bayandu kollunga

    ReplyDelete

Powered by Blogger.