அமெரிக்காவின் எச்சரிக்கையும், இலங்கையின் கவலையும்
இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட பயண அறிவுறுத்தல்களின் படி, இலங்கையில் அதிக குற்றச் செயல்களும், வெளிநாட்டவர்களுக்கு எதிரான நேரடி பாலியல் துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இலங்கை வருகின்ற வெளிநாட்டு பயணிகளின் கடவுச் சீட்டு விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை அவர்கள் தங்கியுள்ள இடங்களின் உரிமையாளர் அல்லது முகாமையாளர்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் தங்களின் விபரங்களை உரிய இடங்களுக்கு வழங்கி, தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அமெரிக்கா தமது பிரஜைகளை கோரியுள்ளது. அத்துடன் பொது பேருந்துகளில் பயணிக்கும் போது, அனைத்து சாரதிகளும் பாதை ஒழுங்குகளை பின்பற்றுவதில்லை என்றும், அநேகமான குற்றச் செயல்கள் பேருந்துகளில் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் தனித்து பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் நீதி நடவடிக்கைகள் அமெரிக்காவை விட மந்தமானது என்றும் அந்த அறிவுறுத்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன் விளைவாகவே வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய பல்வேறு வழக்கு விசாரணைகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா இவ்வாறு புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களை வைத்து தற்போது புதிய அறிவுறுத்தல்களை விடுப்பது முறை இல்லை என்று அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக தங்களின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment