மர்ஹூம் அஷ்ரப்பின் கனவை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நனவாக்குகிறார்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்; நீண்ட காலமாக கண்ட கனவை நனவாக்கும் வண்ணம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசுடன் இணைந்து சவூதி அரேபிய முதலீட்டாளர்களின் நிதியுதவியுடன் மார்க்கக் கல்வி கற்ற உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கான முயற்சி எடுத்து அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளமையை அம்பாறை மாவட்ட உலமாக்கள் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்தில் தெவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா செயலாளர் எஸ்.எம்.ஏ.அன்சார் மௌலானா (நளீமி) கையெழுத்திட்டு அனுப்பியுள்ள வாழத்துக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பல கனவுகளை நனவாக்கி வருகிறீர்கள்.குறிப்பாக உலமாக்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதாகும்.தொழில் வாய்ப்பின்றி அவதிப்படும் உலமாக்களுக்கு இது மிகவும் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் வெற்'றிப்பாதையை நோக்கிச் செல்வதற்கு இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்வோம் எனவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் வைத்து சுழற்சிப் பிரதிநிதித்துவத்திற்கு வாக்குக் கொடுத்துவிட்டு அதற்கு மாற்றமாக நடந்து கொள்ளும்படி தலைவர் அஷ்ரப் கனவு கண்டாரா?
ReplyDeleteமுஸ்லிம் மக்களின் வாக்குகளால் கிடைத்த பிரதிநிதித்துவத்தில் சராயக்கடைகளுக்கு கோட்டாக்களை வழங்குமாறு தலைவர் அஷ்ரப் கனவு கண்டாரா?
செலிங்கோ இஸ்லாமிய வங்கியில் மனைவிக்குப் பிணையாளியாக நின்று கடன் எடுத்துக் கொண்டு அதைத் திருப்பிச் செலுத்தக் கூடாது என தலைவர் அஷ்ரப் கனவு கண்டாரா?
முதலாவது கிழக்கு மாகாண சபையில் மு.கா. வேட்பளராக கையொப்பம் வைக்க இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு அரசாங்கத்துடன் போய் போட்டி போடுமாறு தலைவர் அஷ்ரப் கனவு கண்டாரா?
விவஸ்தையில்லாத புகழாரமாக ஏதோ ஒரு தனிப்பபட்ட தேவைக்காக அன்ஸார் மௌலானா இந்தக் கடிதத்தை எழுதி ஊடகங்கள் மூலம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை 'காக்கா' பிடித்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
அவர் அமைக்கவுள்ள மலிக் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் ஏதாவது பதவிகளைப் பெற்றுக் கொள்வது இந்த மௌலானாவின் நோக்கமாக இருந்தால் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில், இந்த அறபுப் பல்கலைக்கழகத்தின் அதிபராக வரவுள்ள பிரதியமைச்சரின் அருந்தவப் புதல்வன் ஒருவர் ஓதிக் கொண்டிருக்கிறார் என்றும் தற்போது காத்தான்குடியில் கதை அடிபடுகின்றது என்பதை அன்ஸார் மௌலானா கவனத்திற் கொள்வாராக!
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நிறுவவுள்ள இந்த மலிக் அப்துல்லா பல்கலைக்கழகம் அவரது வாரிசுக்கான ஆயுட்காலத் தொழில் திட்டமே தவிர இலங்கை உலமாக்களுக்கு எந்த வகையில் பிரயோசனப்படும் என்பதை நீங்களும் நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-