Header Ads



ஹலால் என்று சொல்லி முஸ்லிம்களை துரத்தி துரத்தி அடிக்கின்றீர்களே..!

தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக ஐநா சபைக்கும், இந்தியாவுக்கும் அல்லது எந்த ஒரு உலக நாட்டுக்கும் இலங்கை அரசு எந்த வித உறுதிமொழியும் கொடுக்கவில்லை  என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுவது உண்மைக்கு மாறான வெட்கமற்ற பொய்யுரை ஆகும்.

யுத்தம் முடிந்த இரண்டு நாட்களில் இலங்கை வந்த ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன்பின்னர் 21/05/2009 என்று  திகதியிடப்பட்டு கொழும்பிலிருந்து  வெளியிடப்பட்ட எழுத்து மூலமான அதிகாரப்பூர்வமான  இலங்கை அரசு- ஐநா சபை  கூட்டறிக்கையில், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தத்தை அமுல் செய்வதுடன், தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை மேலும் அபிவிருத்தி செய்து அப்பால் செல்வதாக திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது.   

எனவே அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், என் நண்பருமான விமல் வீரவன்ச ஊடக சந்திப்புகளில் உண்மைக்கு புறம்பாக பொய் பேசி, தவறான தகவல்களை தந்து, சிங்கள மக்களை தவறாக வழி நடத்த கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டி பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கலையரங்கில் நடைபெற்ற வட-மாகாணசபை தேர்தல் தொடர்பான கூட்டத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பையேற்று, பிரதம அதிதியாக கலந்துகொண்டு தமிழ், சிங்கள மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

விமல் வீரவன்ச உண்மைக்கு புறம்பான கருத்துகளை பகிரங்கமாக கூறுவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.  இது அவரது தொன்று தொட்டு வரும் வழக்கம். இலங்கையின் தேசிய கீதம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட போது அவர் இவ்வாறு தவறான தகவல்களை திரும்ப, திரும்ப சொன்னார்.

இந்தியாவின் தேசிய கீதம் அந்த நாட்டில் அதிகம் பேர் பேசும் மொழியான ஹிந்தி மொழியில் பாடப்படுகின்றது என அவர் சொன்னார். அது அப்பட்டமான பொய். இந்தியாவின் தேசிய கீதம் அந்நாட்டில் சிறுபான்மை மக்கள் பேசும் ஒரு மொழியான வங்காளி மொழியில் பாடப்படுகின்றது என நான் அவரை திருத்தினேன். அதுபோல் உலகில் எந்த ஒரு நாட்டிலும்  ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் பாடப்படவில்லை என அவர் சொன்னார். அதுவும் பொய். கனடாவில் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றது. தென்னாபிரிக்காவில், ஒரே தேசிய கீதத்தில் ஐந்து மொழி வரிகள் இடம்பெறுகின்றன என நாம் அவரை  திருத்தினோம்.

நாட்டின் மிக முக்கியமான விடயங்கள் பற்றி தொடர்ந்து பொய் பேசி மக்களை தவறாக வழி நடத்தியமைக்காக விமல் வீரவன்ச பொது மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும். விமல் வீரவன்சவின் உரைகளை தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் அவரிடம் இதை எடுத்து கூறி அவரது மன்னிப்பு கோரலை கேட்டு வாங்கி வெளியிட வேண்டும்.

இந்த பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பை ஏற்று நான் இங்கே வந்தது, தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமா என்று விவாதம் செய்வதற்காக அல்ல. பிரிக்கப்படாத இலங்கை நாட்டுக்குள் அரசியல் அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும். அது முடிந்த முடிவு. அதுபற்றி விவாதம் செய்வதற்கு இனிமேலும் நான் தயார் இல்லை.

அதிகாரம் பிரிக்கபடக்கூடாது என சொல்பவர்கள்தான், மறைமுகமாக நாட்டை பிரிக்க வழி சொல்கிறார்கள். ஏதாவது ஒன்றை பிரிக்க வேண்டும். ஒன்று நாட்டை பிரிக்க வேண்டும் அல்லது அதிகாரத்தை பிரிக்க வேண்டும்.  நாம் அதிகாரத்தை பிரிக்க சொல்கின்றோம். அதிகாரமும் பிரிக்க முடியாது, நாட்டையும் பிரிக்க முடியாது என்றால், தமிழர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்கின்றீர்கள்? எதுவும் இல்லை என்றால் நாங்கள் கொழும்பில் கடலிலும், இங்கே கண்டியில் மகாவலிகங்கையிலும் குதிக்க வேண்டும் என எதிர்பார்கிறீர்களா?

இங்கே என்னிடம் ஒரு சிங்கள சகோதர மாணவர் ஒரு கேள்வி கேட்கிறார். இந்நாட்டில் மின்சார பிரச்சினை உட்பட எல்லா பிரச்சினைகளும் எல்லா இனத்தவர்களுக்கும் பொதுவாக தானே இருக்கின்றது? தமிழர்களுக்கு என்று பிரத்தியேகமான பிரச்சினைகள் உண்டா என அவர் கேட்கிறார்.

இந்த நாட்டில் தமிழர், சிங்களவர் முஸ்லிம்கள் என வாழும்  அனைத்து மக்களுக்கும் பொதுவான பிரச்ச்சினைகளும் உண்டு. அதேவேளை தமிழருக்கு முஸ்லிம்களுக்கு என பிரத்தியேக பிரச்சினைகளும் உண்டு. ஹலால் என்று சொல்லி முஸ்லிம்களை துரத்தி, துரத்தி அடிக்கின்றீர்களே, அது முஸ்லிம்களின் பிரத்தியேக பிரச்சினை அல்லவா? 

தமிழர்களுக்கு என்று   ஆயிரம் பிரத்தியேக பிரச்சினைகள் உண்டு. இன்றைய இந்த கூட்டத்தின் தலைப்பை  எடுத்துப் பாருங்கள். இந்த நாட்டில் உள்ள எட்டு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் மாகாணசபைகளை அமைத்துக்கொண்டு, அந்த மாகாணசபைகளுக்கு தங்கள் வாக்குகளால் தமது சொந்த பிரதிநிதிகளை அனுப்பி வைக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. தெற்கு, மேற்கு, வட மத்திய, வட மேற்கு, ஊவா மாகாண மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமை ஏன் வடக்கின் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்றது என ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். இது எங்கள் மக்களுக்கு நாம் தமிழர் என்ற காரணத்தினாலேயே இருக்கின்ற பிரச்சினை அல்லவா?

இன்று இந்த நாட்டில் வட மாகாணசபைக்கு எதிராக கூக்குரல் இடும் விமல் வீரவன்ச, ஹெல உறுமய ஆகியோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்தல்கள் மூலம் தமது மக்கள் வாழும் மாகாணசபைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் எமக்கு அறிவுரை கூறுகின்றார்கள். இது என்ன நியாயம் ?

இக்கூட்டத்தில் பேராதனை பல்கலைக்கழக  மாணவர் ஒன்றிய நிர்வாகிகள், ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு உறுப்பினர்களான  கண்டி மாவட்ட செயலாளர் வேலு குமார், ஊடக செயலாளர் சி. பாஸ்க்கரா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.  

2 comments:

  1. மனோ கணேசன் அவர்களே ! நீங்கள் உயர்ந்து நிற்கின்றீர்கள் சிறுபான்மையர் உள்ளங்களில்

    ReplyDelete
  2. இந்த நாட்டில் ஒரு ஆரோக்கியமான யதார்த்தமான எல்லா இனங்களும் ஒற்றுமையாக வாழவும் அதிலும் சிறுபான்மை மக்களின் உருமைகளுக்காக துணிந்து குரல் கொடுக்கும் ஒரு சிறந்த அரசியல் வாதி.... உங்கள் பனி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.