Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள் விடுக்கும் கண்டன அறிக்கை

அண்மையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்திருந்த இடிபாடுகளுடன் கூடிய பழைய வீடொன்றின் பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்த வேளையில் கிணற்றில் பாரமான பொருட்கள் அடங்கிய பொதியொன்று காணப்பட்டதாகவும் அது குறித்து இராணுவத்தினர்க்கு தகவல் வழங்கியபோது ஸ்தலத்துக்கு வருகை தந்த இராணுவத்தினர் குறித்த பொதியை சோதனைக்கு உட்படுத்தி அதில் பாவனைக்குதவாத கைவிடப்பட்ட வெடிகுண்டுகளின் சிதைவுகள், மற்றும் ஷெல் குழாய்கள் காணப்பட்டதை உறுதி செய்து அவற்றை கைவிட்டு சென்றதாக “யாழ் முஸ்லிம் இணையம்” என்னும் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்காத, யாழ் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத  ஒரு வெளிநாட்டு இணையச் செய்திச்சேவை செய்தி வெளியிட்டிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு இன்னும் சில தமிழ் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் வழமையாகவே ஊடக விபசாரத்தில் ஈடுபடும் ஒரு சில அச்சு ஊடகங்களும், புலம் பெயர் சமூகத்துக்கு உசுப்பேற்றும் இணையத் தளங்களும் “யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் ஆயுதங்கள் மீட்பு, கிழக்கிலங்கையில் இயங்கும் முஸ்லிம் ஜிஹாத் அமைப்புகளின் தொடர்பு இருக்கின்றதா என பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்” என்பதாக செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. குறித்த ஊடகங்கள் பொதுவாக இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு எதிரானவை என்பது மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் நல்வாழ்வுக்கும் எதிரானவை என்பது யாவரும் அறிந்த விடயமே. இறுதி யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றபோது “இராணுவம் அகலக் கால் விரிக்கின்றது, தலைவர் உள்ளுக்கு இழுத்துத் தாக்குவார்” என்றும், “முல்லைப்பெருநிலத்தில் காத்திருக்கின்றது கண்ணி” என்றும் செய்தி வெளியிட்டு புலம் பெயர் சமூகத்தை மட்டுமல்ல களத்தில் அவலப்பட்ட மக்களையும்  ஈடு செய்ய முடியாத மனித அழிவிற்குள் தள்ளிவிட்டதில் குறித்த ஊடகங்களுக்கு அளப்பரிய பங்கிருக்கின்றது.

அத்தகைய ஊடகங்கள் தொடர்ந்தும் தமது அழிவுப்பணியினை மேற்கொள்கின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக தற்போது முஸ்லிம் வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து வெளியிடப்பட்டிருக்கின்ற செய்தியும் அமைந்திருக்கின்றது. பொதுவாக யுத்தத்திற்கு பின்னரான சூழலில், யுத்தம் நிகழ்ந்த பிரதேசங்களில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதும், ஆயுதக் கழிவுகள் காணப்படுவதும் சாதாரண நிகழ்வுகளே. அதுவும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசத்தில் யுத்தகாலத்தில் பாவித்த தளபாடங்கள் தற்போது கழிவுப்பொருட்களாக, பாவனைக்கு உதவாத பொருட்களாக மாறியிருக்கின்றன அவற்றை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரே பழைய பொருட்கள் கொள்வனவு செய்வோர்க்கு விற்றுவிடுகின்றனர். பின்னர் எங்காவது பொலிஸார் இதனைக் கண்டுபிடித்தால் அதனை பறிமுதல் செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துகின்றனர், நீதிமன்றமும் இவை பாவனைக்குதவாதவை எனத் தீர்பளிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகள் சர்வசாதரணமாக நிகழ்கின்ற ஒரு சூழலில் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் நிகழ்ந்த அதே நிகழ்வு குறித்த ஊடகங்களின் கண்களுக்கு யுத்தத் தயாரிப்புக்கான ஒரு அம்சமாகப் புலப்பட்டிருக்கின்றமை அதிர்சியளிக்கின்றது.

1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள், பின்னர் அது தாம் இழைத்த ஒரு வரலாற்றுத் தவறு என்பதை புலிகளே ஏற்றுக்கொண்டர்கள். வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையினை ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அது நிவர்த்திக்கப்படவேண்டும் என்பதற்காக தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்திற்கான காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. 2009களின் பின்னர் வடக்கில் முஸ்லிம்களும் படிப்படியாக மீளக்குடியேறிவருகின்றார்கள். இவ்வாறான ஒரு நல்ல சூழலில் தமிழ் முஸ்லிம் உறவை குலைத்து, மீண்டும் முஸ்லிம்களை தமிழர்களின் எதிரிகளாக காட்டுவது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இருக்கின்ற நம்பிக்கையுடன் கூடிய நல்லுறவையும் தகர்த்து, ஒரு முக்கோணச் சமரை நிலை நிறுத்த விளையும்,  குறித்த அச்சு மட்டும் இணைய ஊடகங்களின் நடவடிக்கையினை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு. இவ்வாறான கீழ்த்தரமான ஊடகக் கலாசாரத்தை கைவிட்டு, மனிதர்களுக்கு நலன்புரிகின்ற இன நல்லுறவை ஏற்படுத்துகின்ற ஊடகங்களாக தங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என  குறித்த ஊடகங்களுக்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

இவ்வண்ணம்
யாழ் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்கள்

·         எம்.யூ.எம் தாஹிர் (தலைவர்- முஹம்மதியா தக்கியா- கே.கே.எஸ் வீதி)
·         அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (செயலாளர்- தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம்)
·         எம்.எம்.அஜ்மல் (செயலாளர்- சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பு)
·         டாக்டர் ஹிஜாஸ் (செயலாளர்- யாழ் முஸ்லிம் நிபுனர்கள் அமைப்பு)
·         எம்.எல்.லாபிர் (தலைவர்- முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் – மானிப்பாய் வீதி)
·         கே.எம்.நிலாம் (தலைவர்- அல் அஸ்ஹார் பாலர் கல்வி நிதியம்)
·         எம்.ஐ.றிஷ்வின் (சமூக ஆர்வலர்)
·         செல்வி ஜான்ஸியா கபூர் (ஊடகவியலாளர்)
·         எஸ்.எம்.ஸாலி (தலைவர் யாழ் முஸ்லிம் இரும்பு வியாபாரிகள் சங்கம்)
·         எம்.எச்.ஷர்மிளா ( தலைவி- யாழ்,முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு)

No comments

Powered by Blogger.