'காத்தான்குடியில் அரசியல்வாதிகளின் முகவர்களாக செயற்படும் பொலிஸார்'
(ஊடக அறிக்கை)
முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் சமகால நிலைமைகள் தொடர்பாகவும் காத்தான்குடிப் பிரதேச அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு தெளிவுகளை வழங்கும் பொருட்டு 31-05-2013 நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பொதுக்கூட்டம், காத்தான்குடிப் பொலிசாரின் இறுதிநேர அனுமதி மறுப்பு காரணமாக இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
காத்தான்குடிப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரமிக்க அரசியல்வாதி ஒருவரின் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபனிந்தே பொலிசார் இக்கூட்டத்திற்கான அனுமதியினை இறுதி நேரத்தில் மறுத்திருக்கிறார்கள் என நாம் நம்புகின்றோம்.
சட்டத்தையும் ஒழுங்கையும் பாரபட்சமின்றி சமமாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ள பொலிசார் இவ்வாறு சமூக விரோத அரசியல் வாதிகளின் முகவர்களாக அவர்களின் நிகழ்சி நிரலுக்கேற்ப செயற்படுவது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும். பொலிசாரின் நடுநிலைத் தன்மை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அருகிப் போயிருக்கும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப பொலிசார் தொழிற்படுவது பொலிஸ் துறை மீதான எச்சசொச்ச நம்பிக்கைகளையும் இல்லாதொழிக்கும் நிலைமையினையே ஏற்படுத்தும்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளின் அரசியல் பின்னனி பற்றியும் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வினால் முன்னெடுக்கப்படும் பொய்ப்பிரச்சாரங்கள் பற்றியும் மற்றும் காத்தான்குடி நகர சபையின் போக்குகள் பற்றியும் மக்களுக்கு பகிரங்கக் கூட்டமொன்றின் மூலம் தெளிவுபடுத்த வேண்டுமென எமது இயக்கம் தீர்மானித்திருந்தது.
அதற்கினங்க காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் கலாசார மண்டபத்தில் இக்கூட்டத்தினை நடாத்துவதற்கான அனுமதி கோரப்பட்ட போதிலும் அதனை நகர சபையின் தவிசாளர் மறுத்திருந்தார். 31.05.2013 அன்றைய தினம் பிரிதொரு கூட்டத்திற்காக கலாசார மண்டபம் முற்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காரணம் கூறியே தவிசாளர் எமது விண்ணப்பத்தினை நிராகரித்திருந்தார், ஆனாலும் அவ்வாறு எவ்வித முற்பதிவுகளும் உண்மையில் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம். நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பொதுக் கூட்டத்தினை தடுப்பதற்காக நகர சபை தவிசாளரினால் மேற்கூறப்பட்ட பொய்யான காரணமே இதுவாகும். அதன்பின்னர் கடற்கரை முன்றலில் இக்கூட்டத்தினை நடாத்துவதற்கான அனுமதியினை நாம் நகர சபையிடம் கோரியிருந்தோம். இதற்கான எவ்வித பதிலினையம் அளிக்காமல் தவிசாளர் இழுத்தடிப்பு செய்ததன் காரணமாகவே கடற்கரை வீதியில் எமது அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் இப்பொதுக் கூட்டத்தினை நடாத்தலாம் என எமது இயக்கம் தீர்மானித்தது.
இதற்காக நகர சபை அனுமதி எதனையும் பெறவேண்டிய அவசியம் இல்லை என்ற காரணத்தினால் ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதியினை மாத்திரமே பொலிசாரிடம் இருந்து பெற வேண்டிய தேவை இருந்தது. இதற்கான எழுத்து மூல விண்ணப்பத்தினை கடந்த 29.05.2013ம் திகதியன்று காத்தான்குடி பொலிசாரிடம் நேரில் சென்று நாம் சமர்ப்பித்திருந்தோம். இதனைப் பரிசீலித்து 31.05.2013 வெள்ளிக் கிழமை காலை இவ்வனுமதியினை வழங்குவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எமக்கு உறுதியளித்திருந்தார். அதன்படி காலை 7.30 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற எமது பிரதிநிதிகளிடம் குறித்த பொலிஸ் அதிகாரி வழங்கிய பதில் இதில் ஏதொவொரு இழுத்தடிப்பு இருப்பதனை எமக்கு உணர்த்தியது. பின்னர் 10.30 மணியளவில் நாம் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் சென்று இவ்வனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு பொலிசாரால் எமக்கு சொல்லப்பட்டது. அதற்கினங்க அங்கு எமது பிரதிநிதிகள் சென்ற போது காத்தான்குடிப் பொலிசார் சிபாரிசு செய்யாததன் காரணமாக தம்மால் இந்த அனுமதியினை வழங்க முடியாதென எமக்கு இறுதியாக சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே சகல ஏற்பாடுளும் பூர்த்தியாகியிருந்த நிலையில் கூட இப்பொதுக் கூட்டத்தினை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யவேண்டிய நிலைக்;கு நாம் தள்ளப்பட்டோம்.
இங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற விடயத்தில் காத்தான்குடிப் பொலிசார் மிகவும் பாரபட்சமான முறையில் நடந்திருப்பது தெளிவாகின்றது. கடந்த 17.05.2013ம் திகதியன்று பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் வினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தினை ஒலிபரப்பு செய்வதற்கு அவர் சட்ட விரோத வானொலி சேவையொன்றினை நடாத்தியமை தொடர்பில் நாம் உத்தியோகபூர்வமான முறைப்பாட்டை காத்தான்குடி பொலிசில் செய்திருந்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை தடுப்பதற்கான எந்த முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. அந்த சட்டவிரோத வானொலி சேவை அன்றிரவு மிகச் சுதந்திரமாக நடாத்தப்பட்டதை பொதுமக்கள் நன்கறிவார்கள். அதேபோல பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அன்றைய கூட்டத்தில் இரவு 12 மணிவரை ஒலிபெருக்கிகளை தாராளமாக பயன்படுத்தியதையும் பொலிசார் இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருந்ததினையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
இவ்வாறு பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் பொதுக் கூட்டத்தின் போது நிகழ்ந்த சட்டவிரோத செயற்பாடுகளை அனுமதித்த காத்தான்குடி பொலிசார் எமக்கு வழங்க வேண்டிய சட்ட பூர்வமான அனுமதியினை மறுத்ததினை எமது இயக்கம் வண்மையாகக் கண்டிக்கின்றது. ஜனநாயக அரசியலில் எமது இயக்கத்தின் கருத்துக்களை பொதுமக்களோடு பகிர்ந்து கொள்ளும் எமது அரசியல் உரிமையில் காத்தான்குடிப் பொலிசார் அத்துமீறி தலையீடு செய்யும் நடவடிக்கையாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் நடாத்திய பொதுக் கூட்டத்தில் கூறப்பட்ட பொய்யான கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் பகிரங்கக் கலந்துரையாடல் ஒன்றுக்காக எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பினை அவர் நிராகரித்திருக்கும் நிலையில் இன்றைய எமது பொதுக் கூட்டத்தில் உண்மை விளக்கங்களை நாம் கூறிவிடக் கூடாது என்பதில் பிரதியமைச்சர் தரப்பு மிகவும் குறியாக இருந்ததினை எவராலும் புரிந்து கொள்ள முடியும். எமது மக்கள் சந்திப்பை தடுத்து நிறுத்தி தமது இந்த அரசியல் நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக காத்தான்குடி பொலிசாரை இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.
இவ்வாறு பொலிஸ் அதிகாரத்தைப் பிழையாகப் பயன்படுத்தி எமது மக்கள் சந்திப்பை தடுத்தமையானது உண்மைகளை எதிர்கொள்ள முடியாத பிரதியமைச்சர் தரப்பின் பலவீனத்தை நிரூபிக்கும் செயற்பாடேயாகும்.
எனவே, அதிகார்த்தில் இருக்கும் அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக் கேற்ப அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து ஜனநாயக அரசியல் செயற்பாடுகளுக்கு முட்டுக் கட்டை போடுகின்ற நடவடிக்கைகளை நிறுத்தி பாரபட்சமற்ற முறையில் சட்டவொழங்கை நிலைநாட்டுகின்ற பனியினை மேற்கொண்டு பொதுமக்களின் நம்பிக்கையினை வெல்லும் வகையில் காத்தான்குடி பொலிசார் நடந்து கொள்ள வேண்டுமென எமது இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.
மேலும் பொய்களையும் சட்டவிரோத செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட சமூகவிரோத அரசியலில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முகமாக தொடர்ச்சியான மக்கள் விழிப்பூட்டல்களை சகல வழிகளிலும் எமது இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் மிக விரைவில் மக்கள் சந்திப்பு பொதுக் கூட்டமொன்றினை நடாத்தி விடயங்களை தெளிவு படுத்தும் எனவும் எமது இயக்கம் மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.
Post a Comment