Header Ads



கிழக்கு முதலமைச்சர் பதவியின் பாதி மற்றய கட்சிக்கு கிடைக்குமா..?

(சத்தார் எம்.ஜாவித்)    
      
கிழக்கு மாகாண சபைபோல் வடமாகாண சபைத் தேர்தல் ஆட்சிமுறைகளும் வந்துவிடக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் மக்களின் நிலை அதோ கதிதான் என புத்தி ஜீவிகள் எதிர்வு கூறுகின்றனர்.

சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றியானது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதைதான். வடமாகாண சபைத் தேர்தலும் தற்போது ஒரு தளம்பலற்ற நிலையினை எதிர் நோக்குவதாகவே புலப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் கிழக்குமாகாண சபைத்தேர்தல் கசப்பான சம்பவங்களுடனும். கரடுமுரடான பாதையாலும் பயனித்து மக்கள் மத்தியில் கேள்விக்குறியான வெற்றியாகவே கடந்த கிழக்குமாகாண சபைத் தேர்தல் காணப்பட்டது.

எனினும் அது தொண்ணூற்றி ஒன்பது வீதம் சிறுபான்மை மக்களுக்கு சார்பாக இருந்தபோதிலும் அது சிறுபான்மை மக்களிடத்தில் சரியான புரிந்துணர்வும், ஒற்றுமையும் இல்லாத காரணத்தால் அது கைநலுவிய விடயம் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவே சிறுபான்மை மக்களால் நோக்கப்படுகின்றது.

சாதகமான நிலைமைகள் அங்கு கடைப்பிடிக்கப் பட்டிருக்குமானால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு ஸ்திரமான ஆட்சி இடம்பெற்று மக்களின் தேவைகள் எதிர்பார்த்தளவு முன்னேற்றம் கண்டிருக்கும் என கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டிருந்தால் இன்று கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பினர்களுக்கு இடையிலான குழப்ப நிலையும். கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருக்காது மாறாக ஒரு திறமையான நிருவாக முறைமை நடைமுறைக்கு வந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி பாதியாக வெட்டப்பட்ட முதலமைச்சர் பதவியாகும் அதன் காலம் முடிந்து மற்றய பாதி இன்னொரு கட்சிக்கு செல்ல இருப்பதனால் இன்று அப்பதவியில் மாகாண சபை உறுப்பினர்கள் கூட நம்பிக்கை இழந்துள்ளதுடன் அதன் பாதி மற்றக் கட்சிக்கு வழங்கப்படுமா? என்ற ஐயமும் நிலவும் இத்தருவாயில் கிழக்கு மாகாண சபை ஆட்டங்கானும் நிலையில் இருப்பதையும்  காணக் கூடியதாகவுள்ளது.

இன்று கிழக்கு மாகாண சபையில் ஒரு கவலையான நிலைமைகள் தோன்றியுள்ளதாகவும் இந்த நிலைமை காரணமாக நாட்டில் தற்போது சிறபான்மை சமுகத்திற்கும் அவர்களின் சமயங்களுக்கும் எதிராக பூதாரகாரம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்குக் கூட முகம்கொடுக்க முடியாதளவிற்கு கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் உறுதித்தன்மை இல்லாமல் காணப்படுவதையிட்டு அதில் பங்காளிகளாக இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களே குமுறுகின்றனர்.

கிழக்கு மாகாண சபையை எடுத்துக் கொண்டால் இன்று ஆளும் தரப்பில் உள்ளவர்களில் பல கருத்து முறண்பாடுகள் காரணமாக அபிவிருத்திச் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதாகவும், விட்டுக் கொடுப்புக்கள் இல்லையெனவும் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் செயழிழந்து காணப்படுவதாகவும் இதன் காரணமாக மக்கள் கவலை கொண்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஏற்கெனவெ தமிழ் தந்திக்கு  தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

கிழக்கு மாகாண சபையின் பின்னடைவுக்கு சபை அங்கத்தவர்களின் உள் முரண்பாடுகள் தற்போது அதிகம் காணப்படுவதால் சபை நடவடிக்கைகள் திறம்பட செயற்படுத்த முடியாத நிலைமைகளும் அவ்வப்போது எற்படுவதனையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலைமைகளினால் மக்கள் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் மிகக் குறைவாகவேயுள்ளதாகவும் பிரதித் தவிசாளர் சுபைர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைப்பதற்கான எந்த நடவடிக்கைக்கும் கிழக்குமாகாணத்தில் இடமில்லையெனவும் சிறுபான்மை மக்களின் நலன்களுக்காகவே மாகாண சபை அதிகாரங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அதில் மாற்றங்களுக்கோ அல்லது குறைப்புக்களுக்கோ  தற்போது இடமில்லையென தீர்மாணிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த  நிலைமைகள் பரவலாக காணப்பட்டாலும் தற்போதைய அரசின் சில பிடிமானங்கள் கிழக்கு மாகாண சபையில் புதையுண்டு இருப்பதானால் அது திடீரென மாறுவதற்கோ அல்லது அரசுக்கு சாதகமான நிலைமைகளை தோற்றுவிக்கவோ வேண்டிய சந்தர்ப்பங்களும் வெகுதூரத்தில் இல்லை என்பதனையும் எதிர்பார்க்க வேண்டியுள்ளதாக அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் வட மாகாணத்தை விட பல வளங்களை தன்னகத்தே கொண்ட ஒரு பிரதேசமாக விளங்ககின்றது. குறிப்பாக விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், நெசவுத்தொழில் என்பனவற்றுடன் ஒரு சுற்றுலா மையமாகவும் கிழக்கு மிளிர்வதுடன் அங்கு மூவின மக்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு பல வளங்களை மையமாகக் கொண்ட ஒரு பிரதேசத்தில் அதன் அபிவிருத்திப் பணிகளை மேலும் விருத்தி செய்யும் நிலைமைகள் காணப்படுகின்ற போதிலும் உறுதியானதும், விட்டுக்கொடுப்பும் இல்லாத ஒரு மாகாண சபை நிருவாகம் இடம்பெறுவது வேதனை தரும் விடயம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஓவ்வொரு உறுப்பினர்களும் ஒவ்வொரு கொள்கையுடன் செயற்படும் தன்மை தற்போது வெளியுலகிற்கு வந்து விட்டது. அவர்களுக்குள் உட்பூசல்கள் அதிகம் காணப்படுவதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அவர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு கிழக்குமாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களை ஜனாதிபதி கூட்டம் ஒன்றிற்கு அழைத்திருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

கிழக்கு வாழ் மக்களுக்கு இன்று எத்தனையோ பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணம் போல் கிழக்கு மாகாணத்திலும் இன்று நில அபகரிப்பு பிரச்சினை அதிகமாகவுள்ளமை பற்றி ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது  மட்டுமல்லாது அரசியல் வாதிகளும் கூட பாராளுமன்றம் வரை  கூச்சல்போடுகின்றனர்.
இவ்வாறு கூச்சலிட்டும் எந்தப்பயனும் இல்லை மாறாக செவிடன் காதில் ஊதிய சங்கொலி மாதிரி தமது செயற்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு வரும் போக்குகளை மக்கள் காணுகின்றனர்.

இன்று அதிகமான தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகம் கிழக்கு மாகாண சபையில் பங்காளிகலாக இருந்தும் அங்குள்ள காணிப்பிரச்சினைகள் சரியான  முறையில் தீர்க்கப்பட்டுள்ளதா? இல்லை, இதற்குக் காரணம் என்ன? கிழக்கு மாகாண சபையானது ஒரு அதிகாரமற்ற எதனையும் செய்ய முடியாத திரனற்ற ஒரு சபையாக முற்று முழுதாக மத்திய அரசின் அச்சாணியில் சுழழும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

மத்திய அரசு மாகாண அரசின் அதிகாரங்களை கையாழ்வதால் மாகாண சபைகளின் அபிவிருத்திகளோ அல்லது அவற்றின் எதிர்கால முன்னேற்றங்களோ முடக்கப்படும் அல்லது மட்டுப்படுத்தப்படும் நிலைமைகளையே காட்டுகின்றதாக மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் ஏனைய மாவட்டங்களை விட விரைவில் முன்னேற்றம் காணப்பட வேண்டியதொரு மாகாணத்திற்கான பல அம்சங்கள் காணப்பட்ட போதிலும் அரசியல் சூழ்ச்சிமைகள் அதன் முன்னேற்றத்தை தடைபோட்ட வன்னமேயுள்ளன.

கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் அதன் தலைமைகள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்குமானால் அங்கு வெற்றி கிடைக்கும் ஆனால் யார் கிழக்கை முன்னேற்றுவது அல்லது அபிவிருத்தியடையச் செய்வதென்பதில் அரசியல் போட்டா போட்டிகள் மேலோங்கி நிற்பதால் அதன் செயற்பாடுகள் குறுகிச் செல்வதனை அல்லது மந்த கதியில் செல்வதனை காணக் கூடியதாகவுள்ளது.

கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று இரண்டு வருடங்களை தாண்டியும் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஏழு வருடங்களாக சுனாமியினால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் அந்த சுனாமி வடுக்களுடன் இருப்பதற்கு நிரந்தர இடமின்றி அல்லலுறுவதை நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்தவன்னமே உள்ளனர்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என அமைக்கப்பட்ட வீடுகள் கூடு இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாதிருப்பது எல்லாம் மாகாண சபையின் திறனற்ற செயற்பாடுகளின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.

இவ்வாறாக ஏற்பட்டுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகளை நோக்கும்போது கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமுகங்கள் அந்த நேரத்தில் ஒரு தீர்க்கமான முடிவுகளை கலந்தாலோசித்து தூர நோக்கில் செயற்பட்டிருந்தால் தற்போதைய தளம்பல் அற்ற நிலையிலிருந்து ஓரு சிறுபான்மைச் சமுகம் இன்று தலைநிமிர்ந்து நின்றிருக்கும் என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தொகுத்து நோக்கும்போது கிழக்கு மாகாண சபையின் ஆட்சிமுறையில் சிறுபான்மை மக்களின் நலன்களில் அல்லது அவர்களின் தேவைகள் எந்தளவிற்கு நிறைவு செய்யப்பட்டன அல்லது அதற்கான முயற்சிகள் எத்தனை வீதம் முன்னேற்றம் கண்டுள்ளன? மக்களின் குறைபாடுகள் தொடர் கதையாகவே உள்ளதென்பதில்  மக்கள் நல்ல படிப்பினைகளை கண்டுள்ளனர். எனவே கிழக்கு மாகாணம் போன்றதொரு ஒற்றுமையற்ற கூட்டு ஆட்சிக்கு அம்மக்கள் வித்திட்டதுபோல்  வடமாகாணத்தையும் வடமாகாண வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் வழிசமைத்து விடாது ஒரு திறமையான வெற்றியின் வாசலுக்கு செல்லவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

No comments

Powered by Blogger.