Header Ads



அரபுலகில் மிக வயது குறைந்த தலைவராக ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல்தானி


கட்டார் மன்னார் ஷெய்க் ஹமாத் பின் கலிபா அல்தானி தனது மகனை புதிய மன்னராக முடிசூட்டுவதற்காக அரியாசனத்தை துறந்துள்ளார்.

இதன்படி ஷேக் ஹமாத்தின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த தனது இரண்டாவது மகனான 33 வயது ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி புதிய மன்னரானார்.  வளைகுடா நாடுகளில் இவ்வாறான அமைதியான அரியணை மாற்றம் நிகழ்வது அரிதான விடயமாகும். இந்த நாடுகளில் மன்னர் ஒருவர் உயிரிழக்கும்வரை ஆட்சியில் இருப்பார்.

புதிய மன்னருக்கு அடுத்த 48 மணிநேரமும் தீர்க்கமாக அமையவுள்ளது. அவர் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களுடன் எதிர்வரும் இரு தினங்களுக்குள் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். எனினும் ஷெய்க் தமீம் அவரது தந்தையின் கொள்கைகளிலிருந்து விலகமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 250,000 க்கும் குறைவான உள்நாட்டு சனத்தொகை கொண்ட கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்கு 150 ஆண்டுகளாக அல்தானி குடும்பத்தினரே ஆட்சியில் உள்ளனர். எனினும் 1995 ஆம் ஆண்டு ஷெய்க் ஹமாத் ஆயுதப் படைகள் மற்றும் அமைச்சரவையின் உதவியுடன் சதிப் புரட்சி மூலம் தனது தந்தையை வெளியேற்றி அதிகாரத்தை பிடித்தார்.

உள்நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய ஹமாத் கட்டாரை பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் தீர்க்கமான சக்தியாக மாற்றினார். தனது 18 ஆண்டு ஆட்சியில் 8 பில்லியன் டொலர்களாக இருந்த கட்டார் பொருளாதாரத்தை ஒன்றரை தசாப்தத்திற்குள் 174 பில்லியன் டொலர் பொருளாதார சக்தியாக மாற்றினார். எண்ணெய் வளம் மிக்க கட்டார் அல் ஜkரா தொலைக்காட்சியை நிறுவியமை, புகழ்பெற்ற லண்டன் ஹரோட்ஸ் ஆரம்ப சந்தையை வாங்கியமை போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டின் செல்வ வளத்தை காட்டுகிறது.

அரபுலகில் ஆரம்பமான வசந்தகால புரட்சிக்கு ஆதரவான போக்கை கொண்ட கட்டார், லிபியா மற்றும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டது. எனினும் பிராந்தியத்தின் பலம் வாய்ந்த இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் கட்டார் நெருங்கிய உறவு வைத்திருப்பது தனது அயல் நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் கல்வி கற்றுள்ள ஷெய்க் தமீம் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரருக்கு பதில் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு பிறந்த தமீம் தற்போது அரபு உலகில் மிக வயது குறைந்த தலைவராக பதிவாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.