முஸ்லிம்கள் மீதான இனவாதம் - ரவூப் ஹக்கீமிடம் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவிப்பு
இலங்கைக்கும், மாலைத்தீவுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னார்ட் சவேஜ் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் 28 ஆம் திகதி இடம்பெற்றது.
யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் நன்றி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் இருப்பிட வசதியற்ற, பல்வேறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் அம்பாரை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணமும் உரிய கவனஈர்ப்பை பெற வேண்டும் என்பதை அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த தூதுவர் பேர்னார்ட் சவேஜ், பிரஸ்தாப வீடமைப்புத் திட்டங்களின் கீழ் தமக்குரிய வசிப்பிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பயனாளியொருவருக்கு இருக்க வேண்டிய தகைமை அல்லது விதிகள் பற்றி வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றின் அடிப்படையிலேயே ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
வீடுகள் அமையும் இடங்கள், அவற்றை பெருகின்ற இனத்தவர் என்ற விடயங்களில் ஓரிடத்தை விட வேறோர் இடத்தின் மீதோ அல்லது ஓரினத்தவரை விட இன்னோர் இனத்தவர் மீதோ விஷேட சலுகைகள் வழங்கப்படுவதோ, விஷேட கவனம் செலுத்தப்படுவதோ இல்லை என்றும் தூதுவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரின் நியாயமான வேண்டுகோள் நிச்சயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தைப் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் இனவாத குழுவொன்று முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்தும் அவர் தமது ஒன்றியத்தின் கவலையை வெளியிட்டார். இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், எம்.ரி. ஹஸன் அலி, அமைச்சரின் சட்ட ஆலோசகரும், இணைப்புச் செயலாளருமான எம்.எச்.எம். சல்மான், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கவலை தெரிவிக்கும் போதும் தலைவர் எப்படிச் சிரிக்கிறார் பார்த்தீர்களா?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-