Header Ads



மட்டக்களப்பில் குடும்பமொன்றை கடத்த முயன்றவர்கள் மடக்கிப்பிடிப்பு

(Nf) மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரை கடத்த முயற்சித்த குழுவினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெல்லாவெளியைச் சேர்ந்த குறித்த நால்வரும் பஸ் ஒன்றில் சென்றபோது காத்தான்குடியில் வைத்து கடத்தப்பட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக தகவல் இராணுவத்தினருக்கு கிடைத்திருந்தது.

இதற்கமைய இந்த சம்பவம் தொடர்பான தகவல் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடத்தப்பட்டவர்களுடன் பயணித்த வேன் மண்முனை வீதி சோதனை சாவடியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தேகநபர்கள் குறித்த  நால்வரையும் கடத்தியிருந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இராணுவத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த கடத்தலுக்கு காரணமாக அமைந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.