Header Ads



கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு கொம்பியூட்டர்கள் - அமைச்சர் ஜோன் செனவிரட்ன

(சுலைமான் றாபி)

அரச நிர்வாக சேவைக்கு என்றும் முதுகெலும்பாக இருக்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் வேலைகளை இன்னும் இலகு படுத்துவதற்ற்காக மிக விரைவில் மடிக்கணணிகள் (Laptop) இலவசமாக வழங்கப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்  ஜோன் செனவிரட்ன நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச செயலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"அரச இயந்திரத்தை சரியான முறையில் வழி நடாத்துகின்ற பெரும் பணியை நிறைவேற்றுகின்ற ஓர் இடமே பிரதேச செயலகமாகும். மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கக் கூடியவகையில் நல்ல சுவாத்தியமான புதிய பிரதேச செயலகக் கட்டடங்களை அமைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் 44.2 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டடம் நிந்தவூர் பிரதேசத்தில் நல்ல சூழலில் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல இடங்களிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் மாத்திரம் அமைக்கப்படுவதனால் சிறந்த நிர்வாக செயற்பாடுகள் நடைமுறைகள் நடைபெற்றுவிட முடியாது. அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் அவ்வப்போது போதியளவாக அறிவைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கிராம மட்டத்திலும் மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பலதரப்பட்ட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கு நாம் சிறந்த சேவையினை வழங்க வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் எம்மிடமிருந்து களையப்பட்டு எமது பணிகளை இதய சுத்தியுடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்ல அபிவிருத்தித் திட்டங்களிலும் நாம் பக்க பலமானவர்களாக இருந்து பணியாற்ற வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எமது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வடக்கில் சிறந்த நிர்வாகத்தை செய்ய முடியாதிருந்ததை நாம் சகலரும் அறிவோம். தற்போது அந்த நிலை இல்லாமல் செய்யப்பட்டு சகல பிரதேசங்களிலும் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

எமது நாட்டின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கூடுதலாக கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இதனை நிவர்த்திசெய்ய போட்டிப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் இவ்வாண்டின் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் 4000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.  அத்துடன், மக்களுக்கு சிறந்த பணியினை ஆற்றும் வகையில் முதல்கட்டமாக 10 மாவட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு மடி கணணிகளை வழங்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார். 

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு.அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அல் ஹாஜ் பைசால் காசிம், சிரியாணி பண்டார நாயக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் எல்.டி.அல்விஸ், அமைச்சின் மேலதிகச்செயலாளர் டலல்லகே, அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான  எம்.எஸ்.உதுமாலவ்வை, விமலவீர திசாநாயக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அமைச்சர் அதாஉல்லா அவர்களின் இணைப்புச்செயலாளர் ஏ.பி. தாவுத், நிந்தவூர் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் எம்.எம்.எம்.அன்சார், எதிர்கட்சித்தலைவர் வை.எல்.சுலைமாலவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, எஸ்.ஏ.எஸ்.எம். றியாஸ், இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் எஸ்.எம்.ஷாபி, மற்றும்  நிந்தவூர்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 

இத்திறப்பு விழாவில் வலது குறைந்தோருக்கு சக்கரை நாற்காலிகளும்  அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை இந்நிகழ்வின் இறுதியில் அமைச்சர் அவர்களுக்கு பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு.அப்துல் ஜலீல் அவர்களினால் விஷேட ஞாபகச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.