பாரதீய ஜனதா கட்சியின் குழுவொன்று இலங்கை வருகிறது - ரவூப் ஹக்கீமையும் சந்திக்கும்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச்சு நடத்தவே, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் குழுவொன்று கொழும்பு வரவுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின தகவல் வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ள இந்தக் குழுவில் ஆறு பேர் இடம்பெறவுள்ளனர். இந்தக் குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்கவுள்ளார்.
இவர்கள் 13வது திருத்தச்சட்டத்துக்கு அமைய, மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது குறித்தும் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
வரும் 7ம் நாள் மாலை பாரதீய ஜனதா குழுவுக்கும் அரசின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான பேச்சுக்களை நடக்கவுள்ளன.
அரசதரப்புக் குழுவில் 15 பேர் இடம்பெறவுள்ளதாகவும், இவர்களில், 5 மூத்த அமைச்சர்கள், ஒரு மூத்த புலனாய்வு அதிகாரி, நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர், வெளிவிகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் நால்வரும் இடம்பெறவுள்ளனர்.
அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பாஜக குழுவுடனான சந்திப்புகளில் பங்கேற்கவுள்ள அதேவேளை, காணி காவல்துறை அதிகாரங்கள் பகிரப்படுவதை எதிர்க்கும் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் இந்தச் சந்திப்புகளில் பங்கேற்கமாட்டார்கள்.
பாஜக குழுவில், ரவிசங்கர் பிரசாத், சிவ சேனா தலைவர் சுரேஸ் பிரபு, மூத்த இந்திய ஊடகவியலாளர் ஸ்வப்பன் தாஸ் குப்தா, ஓய்வுபெற்ற வெளிவிவகாரச் சேவை அதிகாரி விவேக் கட்ஜு, ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதி ராம் மாதவ், மனிதஉரிமை செயற்பாட்டாளர் மோனிகா அரோரா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
Post a Comment