Header Ads



சலுகைகளுக்காக மக்கள் என்னை மறந்தாலும், எனது சேவை தொடரும் - அலிஸாஹிர் மௌலானா


(நஷ்ஹத் அனா)

தேர்தல் காலங்களில் அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் என்னை மறந்தாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும் என்று ஏறாவூர் நகர சபை முதல்வர் அலிஸாஹிர் மௌலானா கூறினார். 

ஏறாவூர் நேயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் அப்துல் மஜீட் மாவத்தையில் அமைக்கப்பட்ட 50 கிணறுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவம் நடைபெற்ற போது இவ் வைபவத்திவ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இவ் அமைப்பின் நிருவாக உறுப்பினர் எச்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் ஏறாவூர் நகர சபை முதல்வர் அலிஸாஹிர் மௌலானா இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

மட்டக்களபப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழ்நிலையை அடுத்து மக்கள் நிம்மதி சந்தோஷமாக ஒரே இனம் மற்றைய இனத்தினை புரிந்து கொண்டு சகோதர வாஞ்ஞையுடன் வாழ்வதை பார்க்கும் போது மிக்க சந்தோஷம் அடைகிறேன்.  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அமைதிச் சூழலையடுத்து அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 

இவ்வாறான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போது நாங்கள் எந்த விதி பேதமும் காட்டவில்லை. மக்கள் கஷ்டப்படுகின்ற போது அவர்களின் காலடிக்குச் சென்று உதவிகளை செய்து வருகின்றோம். ஆனால் தேர்தல் வந்தவுடன் தேர்தல் காலங்களில் கிடைக்கும் சில அற்ப சொற்ப உதவிகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வாக்களித்து விடுகின்றனர். காலாகாலமாக மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது நாங்கள் அதற்கு முகம் கொடுத்து பணியாற்றி வருகின்ற போதிலும் தேர்தல் வந்தவுடன் மக்கள் எம்மை மறந்து விடுவது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். 

இருந்தாலும் மக்களுக்கான எமது சேவை தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதை நான் உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.  ஏறாவூர் பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் நன்மை கருதி பல மில்லியன் ரூபா செலவில் புன்னக்குடா வீதி உட்பட பல வீதிகளை நாங்கள் செப்பனிட்டு வருகின்ற அதேவேளை மக்கள் ஓய்வெடுக்கத் தக்க வகையில் பூங்காக்கள் அமைக்கப்படுவதோடு விளையாட்டு மைதானங்களையும் புனர் நிர்மானம் செய்து வருகின்றோம். 

இப்போது எமது பகுதியில் காணப்படுகின்ற அமைதிச் சூழலினால் மனித சஞ்ஞாரங்கள் அச்சமின்றி பீதிஇன்றி பயணிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அந்த சூழலை பயன்படுத்தி மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களிடையிலான உறவினை பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.  

இம் மக்களிடத்தில் நல்லுணவு மேம்படவேண்டும் என்பதால் நாங்கள் இந்த இரு சமுகங்களையும் ஒன்றினைத்து பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான திட்டங்களுக்கு நேயம் போன்ற பல்வேறு அமைப்பினர் மக்களுக்காக ஆற்றி வரும் சேவையை நான் மனதார பாராட்டுகிறேன் என்றார். 

ஏறாவூர் நகர சபை பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், ஓய்வு பெற்ற அதிபர் ஏ.சீ.எம்.சயிட், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக நிதி உதவியாளர் எம்.ஏ.எம்.ஹூஸைன், நேயம் நிறுவனத்தின் தலைவர் ஐ.இஸ்ஹாக் உட்பட பலர் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.