Header Ads



அஸ்கிரிய பீடத்தின் மெதகம தம்மானந்த தேரருக்கு ஒரு திறந்த மடல்..!


கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நீங்கள் ஆற்றிய உரையிலிருந்து சில சந்தேகங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். மனித நேயத்தோடு அவற்றுக்கு பதில் தர வேண்டுகின்றேன்.

கண்டியில் வாழும் எந்த இனத்தவராக இருந்தாலும் புத்த பகவானின் அருள் கிடைப்பதாலே அங்கு வாழ முடிகிறது என்று கூறுகிறீர்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு கூறுவதற்கான காரணத்தை, சான்றை முன்வைப்பீர்களா? இன்னொரு ஊரில் வாழும் மக்களைக் குறித்து வேறொரு மதத்தவர் நீங்கள் கூறுவதைப் போன்று ''எமது கடவுளின் அருள் கிடைப்பதாலே இங்கு மக்கள் வாழ முடிகிறது'' என்று கூறினால், உங்கள் நிலைப்பாடு என்ன?

''புத்த பகவான் இரு கை, இருகால், நான்கு கால் உயிரினங்களைக் கொலை செய்யக்கூடாது'' என்று கூறியுள்ளதாகக் கூறுகிறீர்களே. அவ்வாறென்றால்,  மீன்களைக் கொலை செய்வது குற்றமில்லையா? அது வும் ஓர் உயிரினம் தானே.

மாடறுப்பது கண்டியை பாழ்படுத்த எடுத்த முயற்சி என வர்ணிக்கின்றீர்களே. உலகில் அல்லது இலங்கையில் எத்தனை ஊர்கள் மாடறுப்பால் பாழ்பட்டுள்ளன என்று கூறமுடியுமா? வேண்டாம் ஒரே ஒரு ஊரை மாத்திரம் உங்கள் கூற்றுக்கு உதாரணமாகக் கூறுங்களேன்.

யுத்த காலங்களில் இந்நாட்டில் கண், மண் தெரியாமல் பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என்ற வகுப்பு வித்தியாசமின்றி கொன்றொழிக்கப்பட்டார்களே. நீங்கள் அதற்கு எதிராக எப்போதாவது குரல் கொடுத்துள்ளீரா?

மாடறுப்பதைப் போன்று பன்றி, ஆடு, கோழிகள் அறுப்பதற்கு நீங்களோ, நீங்கள் புகழக் கடமைப்பட்டுள்ளதாகக் கூறும் உங்கள் நகர பிதாவோ எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதன் இரகசியம் என்ன?

கோழிப் பண்ணைகளுக்கும், கோழிகள் அறுக்கப்படுவதற்கும் நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம்  பௌத்த மக்கள் விரும்பி உண்பதாலும்,  வியாபாரம் செய்வதாலுமா?

மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கம், புலி, கரடி போன்ற மிருகங்களுக்கு தினமும் வழங்கப்படும் இறைச்சி செயற்கை இறைச்சியா? அல்லது அரசாங்கம் புல்லையும், வைக்கோலையும் சாப்பிடக் கொடுக்கப் போகிறதா?

சென்ற வெசாக் தினத்தின் தொல்லைகளை அகற்ற என புத்தளத்தில் பல நாய்களை உங்கள் மக்களே கொன்றார்களே!!! அந்த நாய்கள் நாளு கால் உயிரினங்கள் தானே.

வேடர்களுக்கு அரசாங்கம் பல உதவிகளைச் செய்கின்றதே. அவர்களோடு பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளனவே. வேடர்கள் என்ற பெயரே அவர்கள் மிருகங்களை வேட்டையாடுவதால் தானே வந்தது. அவர்களுக் கெதிராக யாரும் குரல் எழுப்புவதில்லையே.

மதுக் கடைகள் இலங்கையில் அடியோடு ஒழிக்கப்பட நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி? 2500 வருடத்துக்கு முன்பு புத்த பகவான் மது பற்றி ஒன்றும் கூறவில்லையா?

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் லீலைகள் இன்று எல்லா இடங்களிலும் எல்லை தாண்டிச் சென்றுள்ளதே. அதற்கெதிரான உங்கள் நடவடிக்கைகள் பற்றி?

இறுக்கமான, மெல்லிய ஆடைகளோடு அல்லது பிரா, பேண்டிஸ்ஸோடு மட்டும் அதிக வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணிகள் கண்டி பேராதனை பூங்காக்களில் உட்பட சுற்றித் திரிவதும் புத்த பகவானின் அருள் கிடைக்கும் ஊருக்கு அசிங்கமில்லையா?
அண்மையில் போவத்தே இந்திர ரத்ன தேரர் தீக்குளித்ததை தியாகம் என்று பலர் கூறுகின்றனரே. 30 இலட்சம் ரூபாவை சூரையாடி, பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டபோது சாவுவதைத் தவிர வழியில்லை என்ற நலையில் அடுத்தவர்களின் பணத்துக்கு மோசடி செய்தது தான் தியாகமா?

மற்ற மதத்தினர்களை, அவர்களின் கலாச்சாரங்களை இம்சிக்கும் படி புத்த பகவான் 2500 வருடங்களுக்கு முன்பு கூறவில்லையே. அப்படியிருந்தும், பொது பல சேனா பச்சை பச்சையாக உங்கள் தளதா மாளிகைளின் காலடியிலும், இன்னும் பல ஊர்களிலும் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் கத்தித் தொலைத்த அப்பட்டமான பொய்களுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது இன்று வரை கூறினீர்களா? ஒரு அறிக்கையாவது விட்டீர்களா?

எனவே, சுருக்கமாகக் கூறுவதென்றால், இங்கு யாரும் மிருக வதைக்காக மாடறுப்பதைத் தடைசெய்யக் கோரவில்லை. அது முஸ்லிம்களின் உணவு என்பதாலும், அவர்களின் வியாபாரம் என்பதாலுமே அதனைத் தடுத்து நிறுத்தத் துடிக்கின்றனர்.

நீங்கள் பௌத்த பிக்குமார். மக்களுக்கு நற்போதனை செய்பவர்கள். நேர்மையாக நடக்க வேண்டியவர்கள். உங்களை முஸ்லிம்களும் மதிக்கின்றனர். எனவே மேற் குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயல்பட வேண்டுகின்றேன். முஸ்லிம்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல வெளி நாடுகளிலும் பௌத்த சிங்கள மக்களோடு நெருங்கி ஒற்றுமையாக வாழ விரும்புபவர்கள். ஆனால், முஸ்லிம்களையே இன்று குறி வைக்கப்பட்டிருப்பது பெரும் கவலையாக உள்ளது.

பதிலை எதிர்பார்த்து விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
திம்தாம்
ரியாத்.

6 comments:

  1. yes, those are good questions.

    ReplyDelete
  2. you should send it in Sinhala to the concerned. Tamil will not reach

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை.. முடியுமானவர்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து எல்லா வெப்தளங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் விரைவாக பதிக்க முயற்சிப்போமாக....

    ReplyDelete
  4. ya good. best wish for u........

    ReplyDelete
  5. Please translate to Singala and English to manual letter to asgiriya

    ReplyDelete

Powered by Blogger.