'அமெரிக்க ரகசியங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்' - ஸ்னோடென்
ஸ்னோடென்னுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ரஷ்யா தெரிவித்துவிட்டது. முன்னதாக அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை பிடித்து ஒப்படைக்குமாறு அந்நாடு விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.அமெரிக்க உளவு அமைப்பில் முன்னாள் பணியாளரான ஸ்னோடென், ஹாங்காங்கில் இருந்து ரஷியாவுக்கு சென்றதாகவும் பின்னர். அங்கிருந்து வெனிசூலா வழியாக ஈக்வடார் சென்று தஞ்சமடைய அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.
நீதிமன்ற வழக்கு:அரசு உடமைகளைத் திருடியது, அரசை உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் எட்வர்ட் ஸ்னோடென் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், மாஸ்கோ வந்துள்ள ஸ்னோடெனை பிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ரஷியாவிடம் அமெரிக்கா கோரியது.
இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ மாஸ்கோவில் நேற்று தெரிவித்ததாவது:அமெரிக்க சட்டத்தை ரஷ்யா மீறி விட்டது என்பது போன்ற குற்றத்தை எங்கள் மீது சுமத்த முயற்சி நடக்கிறது என்றே கருதுகிறோம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்னோடென் விஷயத்தில் ரஷ்யா எதுவும் செய்ய முடியாது. அவருடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.
ஜூலியன் அசாஞ்சே உதவி:ரஷியாவில் இருந்து கியூபா செல்லும் விமானத்தில் ஸ்னோடென் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் அதில் பயணம் செய்யவில்லை. எனவே அவர் ரஷ்யாவில்தான் மறைந்திருக்க வேண்டுமென்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.ஈக்வடாரில் ஸ்னோடென் தஞ்சமடைய அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியுள்ளார்.
மேலும் தகவல்கள்:மேலும் தகவல்களை வெளியிடுவேன் - எட்வர்ட் ஸ்னோடென்: "ஹாங்காங் மற்றும் சீனாவில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருந்து இணையதளம் மூலம் தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. இது போன்று எனக்குத் தெரிந்த அமெரிக்க ரகசியங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்' என்று தலைமறைவாக உள்ள ஸ்னோடென் கூறியுள்ளார்.
Post a Comment