லலித் அத்துலத்முதலியின் மறுஉருவமா கோத்தபய ராஜபக்ஸ..?
(பதினப்பலகை + நித்தியபாரதி)
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச, வடக்கு மாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்கின்ற தனது கருத்தை மிக ஆழமாக முன்வைத்திருந்தார். இவ்வாறு பத்தி எழுத்தாளர் உபுல் யோசப் பெர்ணாண்டோ அண்மையில் Ceylon Today எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களை நடாத்துதல் மற்றும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கான மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் சிறிலங்கா அதிபரின் தீர்மானம் முக்கியம் வாய்ந்தது என்பதை விட, கோத்தாபய ராஜபக்சவின் ஒப்புதலையும், ஆசியையும் பெற்றுக் கொள்வதென்பது முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது.
வடக்கு மாகாணசபைக்கான அரசியல் மூலோபாயம் கவனத்திற் கொள்ளப்படுவதில் அரசாங்கத்தின் மிக முக்கிய புள்ளியாக கருதப்படும் கோத்தாபய முதன்மை பெறுகிறார்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச, வடக்கு மாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்கின்ற தனது கருத்தை மிக ஆழமாக முன்வைத்திருந்தார். இவர் இது தொடர்பான தனது எதிர்ப்பை வெளிப்படையாக முன்வைத்தார்.
தற்போது கோத்தாபய நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும்போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில், தேசிய பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய லலித் அத்துலத்முதலி நடந்த விதத்தை ஒப்பீடு செய்து கொள்ள முடியும்.
சிறிலங்காவில் இந்தியா தனது தலையீட்டை மேற்கொள்வதற்குக் காரணமாக இருந்த வடமராட்சி இராணுவ நடவடிக்கைக்கு லலித் அத்துலத்முதலி தலைமை தாங்கியிருந்தார். அப்போது மூத்த இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய இந்த நடவடிக்கை தொடர்பாக நேரடி அனுபவத்தைப் பெற்ற ஒருவராக இருந்திருப்பார்.
இந்தியாவிடமிருந்து பல்வேறு அழுத்தங்களைப் பெற்றபின்னர், வடமராட்சி இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, லலித்திற்கு கட்டளை வழங்கியபோது, இது தொடர்பில் லலித் எரிச்சலும், அதிருப்தியும் அடைந்தார். இவ்வாறான ஒரு இறுக்கமான இராணுவ நடவடிக்கையில் நேரடி அனுபவத்தைப் பெற்றிருந்த கோத்தாபய, லலித் அத்துலத்முதலி போன்று எரிச்சலடைந்திருக்க முடியும்.
அப்போது லலித் செயற்பட்டது போன்று தற்போது செயற்படும் கோத்தாபய, சிறிலங்காவில் இந்தியா தலையீடு செய்வதை எவ்வகையிலும் விரும்பமாட்டார். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய லலித், சிறிலங்காவில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'றோ' ஊடுருவியபோது அதனை முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இது தொடர்பாக 'சிறிலங்காவில் இந்தியாவின் தலையீடு' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
இந்த நூலின் ஆசிரியர் ஜெயவர்த்தனாவிடம், யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைகள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தியா இதில் தலையீடு செய்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமா என வினவியபோது, "நாங்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு இந்தியா எம்மை அனுமதிக்காது என லலித் என்னிடம் தெரிவித்திருந்தார். நான் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பினால், தேசிய பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து தான் விலக்கப்படலாம் எனவும் இந்தியா சிறிலங்காவை ஆக்கிரமிக்கக் கூடாது. இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தனது உதவியை வழங்கும் எனவும் தான் இந்த விடயத்தில் ஒரு கைப்பொம்மையாகவே செயற்பட வேண்டியுள்ளதாகவும் லலித் என்னிடம் தெரிவித்திருந்தார்" எனக் கூறினார்.
"இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய லலித் அத்துலத் முதலி, ஜெயவர்த்தனா தெரிவித்த கருத்துக்களை உறுதிப்படுத்திய அதேவேளையில், 'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவின் றோ அமைப்பு இராணுவ வழங்களை வழங்கவுள்ளதாக நாம் வேறு வட்டாரங்களிடமிருந்து தகவலைப் பெற்றிருந்தோம்' எனவும் லலித் அத்துலத்முதலி தெரிவித்திருந்தார்."
"அப்போது லலித் கூறிய விடயங்கள் சரியாக இருந்தன. இவரது விசுவாசத்திற்குரிய, மறைந்த திசா ஜெயக்கொடி, ஜெயவர்த்தனாவின் காலத்தில் இந்தியாவிற்கான சிறிலங்காவின் பிரதி உயர் ஆணையாளராகக் கடமையாற்றியிருந்தார். இவர் மூத்த றோ அதிகாரிகளுடனும், இந்திய உள்ளக புலனாய்வு அதிகாரிகளுடனும் நெருக்கமான தொடர்பைப் பேணியிருந்தார். இதன் மூலம், இந்தியாவின் சிறிலங்கா இராணுவச் செயற்பாடுகள் மற்றும் சிறிலங்காவில் இந்திய இராணுவத் தொடர்புகள் தொடர்பான தகவல்களை லலித்திற்கு வழங்கியிருப்பார் என நம்பப்படுகிறது"
"நாங்கள் இந்திய புலனாய்வு கட்டமைப்புக்குள் உடுருவியிருந்தோம். இவ்வாறு உடுருவியிருந்த புலனாய்வாளர்கள் இந்தியா மற்றும் சிறிலங்கா தொடர்பான முழுமையான, மிகச் சரியான வரைபை எமக்கு வழங்கியிருந்தார்கள்" என அத்துலத்முதலி குறிப்பிட்டிருந்தார்.
இந்திய-சிறிலங்கா உடன்படிக்கையை நாசம் செய்வதற்காக லலித் மிகக் கடுமையாக பணியாற்றினார் என இன்றும் கூட இந்தியா கருதுகிறது. இது தொடர்பாக அப்போது இந்திய உயர் ஆணையாளராகக் கடமையாற்றிய J.N.டிக்சிற் தனது Assignment Colombo என்கின்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"மாக்கியவல்லி மற்றும் பிஸ்மார்க் போன்றவர்களின் கலவையாக தான் விளங்குவதாக லலித் அத்துலத்முதலி கருதியிருந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், வெற்றிகரமான சட்டவாளரும், சட்டப் பேராசிரியருமாக கடமையாற்றிய லலித் அத்துலத்முதலி, தான் சிறிலங்காவின் அதிபராக வரவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். லலித் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் தெளிவுள்ள ஒருவராகவும் காணப்பட்டார். இவர் கெட்டிக்காரன். ஆனால் இவர் விவேகமுள்ளவர் என நான் கூறமாட்டேன். தனது அரசியல் தகைமைகளைக் கொண்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வெற்றிகொள்ள முடியும் என இவர் நம்பினார். தமிழ் மக்களின் அரசியல் அவாக்களுக்கு பதிலளிக்காது தனது அரசியல் சாதுரியம் மற்றும் இராணுவப் படைகள் மூலம் தமிழர்களின் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என லலித் நம்பினார். ஜெயவர்த்தனாவின் அனுமதியில்லாது, இந்திய உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணவும் இவர் தயக்கம் காண்பிக்கவில்லை. இதேபோன்று இந்தியத் தலைவர்கள் மற்றும் ஜெயவர்த்தனா ஆகியோரைத் தவிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பேணிக் கொள்ளவும் முயற்சித்தார். திருமதி.இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி போன்றோர் லலித் அத்துலத்முதலியின் கருத்துக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பதிலளிக்காததால், இவரால் இந்திய தலைமையுடன் வெற்றிகரமான உறவைப் பேணமுடியவில்லை" என டிக்சிற் குறிப்பிட்டுள்ளார்.
"தனிப்பட்ட உரையாடல்களின் போது இவர் நவீன, தர்க்க ரீதியான கருத்துக்களை முன்வைத்தார். சிறிலங்காவின் கலாசாரம் மற்றும் வரலாற்று சுமைகள் காரணமாக, சிறிலங்காவானது இனப் பிரச்சினைக்கு அவ்வளவு இலகுவாகத் தீர்வு காணமுடியாது என என்னுடன் உரையாடும் போது அவர் பல தடவைகள் தெரிவித்திருந்தார். பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்பாடானது நிறைவேற்றப்பட்டிருந்தால் இவ்வளவு மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டிருக்காது என என்னிடம் கூறுவார். எதெவ்வாறிருப்பினும், தனது அரசியல் எதிர்காலமானது சிறிலங்கா தமிழர்கள் தொடர்பான சிங்களவர்களின் கடும்போக்கான நிலைப்பாட்டை ஆதரிப்பதிலேயே தங்கியுள்ளதாக லலித் அத்துலத்முதலி என்னிடம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நெருக்கடியான நிலையைச் சமாளிப்பதற்காக, 1983-1989 காலப்பகுதியில் இவர் இந்தியாவுடன் சமரசரமாக நடந்துகொண்டார். பிறேமதாச படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு ஆண்டின் முன்னர், இரத்மலானையில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த வேளையில் லலித் அத்துலத்முதலி படுகொலை செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் சிறிலங்கா தனது உறவை விரிவுபடுத்துவதற்கும் உதவினார். இதனால் திருமதி.காந்தி, ஜெயவர்த்தனா அரசாங்கம் மீது அழுத்தமிட்டார். இதனால் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் புவிசார் மூலோபாய விரிசல் ஏற்பட்டது. லலித் அத்துலத்முதலி படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிறிலங்காவானது தனது ஆற்றல்மிக்க, உயர் புலனாய்வு அரசியற் தலைவர் ஒருவரை இழந்துவிட்டதாக நிச்சயம் கருதியிருக்கும்" என டிக்சிற் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா இந்தியா உடன்பாட்டை நாசம் செய்வதற்காக லலித் எவ்வாறான பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதை நாராயன் சுவாமியால் எழுதப்பட்ட Tigers of Lanka என்கின்ற நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
"சிறிலங்கா கடற்படையினர், குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பயணித்த படகு ஒன்றை வழிமறித்தனர். இவ்வாறு வழிமறிக்கப்பட்ட இவர்களை கடற்படையினர் நிராயுதபாணிகளாக்கி, அவர்கள் வைத்திருந்த சயனைட் குப்பிகளைப் பறித்தனர். அதன்பின்னர், 17 விடுதலைப்புலி உறுப்பினர்களும் பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே இந்திய அமைதி காக்கும் படை மற்றும் சிறிலங்கா படையினரின் முகாங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமையானது, இந்திய-சிறிலங்கா உடன்பாட்டை மீறுவதாக புலிகள் தெரிவித்தனர். இதனால் கைதுசெய்யப்பட்ட அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் புலிகள் கோரினர். உடன்பாட்டை மீறி புலி உறுப்பினர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாக சிறிலங்கா தரப்பு அறிவித்தது. செப்ரெம்பர் 28 மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி, புலிகள் தமது பாதுகாப்புக்காக தனிப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்க முடியும் என புலிகள் வாதிட்டனர். இதற்கு இந்தியா அனுமதித்துள்ளதாகவும் புலிகள் நியாயப்படுத்தினர். புலிகள் தமிழ்நாட்டிலிருந்து ஆயுதங்களுடன் சிறிலங்காவுக்கு திரும்பி வந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் தோன்றிய ஜெயவர்த்தனா அறிவித்திருந்தார்." என நாராயன் சுவாமி தனது நூலில் தெரிவித்துள்ளார்.
"கைதுசெய்யப்பட்ட 17 பேரும் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படக் கூடாது என இந்திய அமைதி காக்கும் படையைத் தொடர்பு கொண்டு புலிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கைதுசெய்யப்பட்ட புலிகள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என அத்துலத்முதலி மிக அழுத்தமாக தெரிவித்தார். இவர்களை தொலைக்காட்சியில் காண்பிப்பதற்கு கூட லலித் அத்துலத்முதலி அனுமதிக்கவில்லை. இந்த விடயத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. ஜெனரல் டெப்பிண்டர் சிங் உடனடியாக கொழும்பு சென்று, கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கூட்டிச்செல்ல வேண்டாம் என ஜெயவர்த்தனாவிடம் வலியுறுத்தினார். ஆனால் ஜெயவர்த்தனா இதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது புதுடில்லி வந்திருந்த டிக்சிற் உடனடியாக கொழும்பு சென்று புலி உறுப்பினர்களைக் கொழும்புக்கு கொண்டுவர வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் அதிபர் ஜெயவர்த்தனா இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், இந்த விடயத்தில் அத்துலத்முதலி பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஒக்ரோபர் 04, இந்திய அமைதி காக்கும் படையினரின் அனுமதியுடன் கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களைச் சந்தித்த மாத்தையா அவர்களுக்கு மிகஇரகசியமாக சயனைட்டுக்களை வழங்கினார்" எனவும் நாராயன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.
"கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய அமைதி காக்கும் படையினர் இறுதிவரை நம்பியிருந்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களைக் காண்பிக்குமாறு கோரி பலாலி முகாமுக்கு வெளியே புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களைக் கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டாம் என சிறிலங்கா பிரிகேடியர் ஒருவரிடம் இந்திய ஜெனரல் ஒருவர் கேட்டிருந்தார். 'அவர்கள் இறந்தால், இங்கே இரத்தஆறு ஒன்று ஓடும்' எனவும் இந்திய ஜெனரல் எச்சரித்திருந்தார். இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட புலிகள் அனைவரும் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே தமது சயனைட்டுக்களை விழுங்கியிருந்தனர். இதனை சிறிலங்கா இராணுவத்தினர் அறிந்தபோதும், அங்கு வைத்தியர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்ட போதும், கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் கொழும்பு கொண்டு செல்லப்படுவதற்கு விமானத்திற்கு கூட்டிச்செல்லப்பட்டனர். இவர்கள் அருகிலிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் மருத்துவமனைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு கொண்டு செல்வதற்கு முன்னர் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 புலிகள் இறந்துவிட்டனர். இதிலிருந்து ஏனைய ஐந்து புலிகளும் உயிர்தப்பினர். இந்த விடயத்தில் இந்திய அமைதி காக்கும் படையினர் உசார் நிலையிலிருந்த போதும், புலி உறுப்பினர்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதன் பின்னர், புலிகள் காயம்பட்ட புலியைப் போன்று மிக ஆக்கிரோசமாக, மிக ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்" என நாராயன் சுவாமியின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது சமாதான உடன்பாட்டை நாசம் செய்த லலித் போன்று, கோத்தாபய பிறிதொரு லலித் எனக் கருதுவது தொடர்பற்றது எனக் கருதமுடியாது. அமைதி உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை உருவாக்குமாறு இந்தியா ஜெயவர்த்தனாவிடம் வலியுறுத்தியிருந்தது.
தற்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்த வேண்டும் என இந்தியா, மகிந்தவிடம் வலியுறுத்தியுள்ளது. லலித் அப்போது மிகப் பலமான பாதுகாப்புப் படைகள் மற்றும் காவற்துறையை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டிருந்ததால் சிறிலங்காவில் சமாதானத்தை உருவாக்குவதில் லலித் மிகப் பலமான தடை என இந்தியா உணர்ந்திருந்தது. இன்று, பாதுகாப்பு படைகள் மற்றும் காவற்துறையை கோத்தாபய தனது கட்டளையின் கீழ் கொண்டுள்ளார். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கோத்தாபயாவை இந்தியா லலித்தின் மறுஉருவம் எனக் கருதுவது எவருக்கும் அதிர்ச்சியைத் தராது.
அப்படியே நடக்கணுமென்று அடம்பிடிக்கக்கூடாது, இப்ப பசங்க கொஞ்சம் டயடா இருங்காங்க இல்ல? (முடிவபத்திசொன்னன்)
ReplyDelete