பிரான்ஸில் பர்தா அணிந்த பெண்ணை பொலிஸார் சோதனையிட முற்பட்டதால் மோதல்
(Tn) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முக்காடிட்டு பர்தா அணிந்து சென்ற பெண்ணை பொலிஸார் விசாரணைக்காக நிறுத்திய போது பொலிஸாருக்கும் அங்கிருந்து 60க்கும் அதிகமான பொது மக்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
பாரிசுக்கு வெளிப்புற நகரில் புதன்கிழமை இடம்பெற்ற இந்த மோதலில் ஆத்திரமடைந்த மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதோடு இறப்பர் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரான்ஸில் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பொலிஸார் முக்காடிட்ட பெண்ணை ஒழுங்கற்ற முறையில் சோதனையிட முற்பட்டபோதே சுமார் 60 பேரளவில் அங்கு கூடி பொலிஸாருக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் அவமரியாதையாக நடந்ததாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சோதனையிட முற்பட்ட பெண்ணின் சிற்றப்பா உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் மோதலை தடுக்க 40 பொலிஸார் அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான பிரான்ஸ் பர்தா தடை கடந்த 2011ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. இந்த தடையை மீறுவோருக்கு 150 யூரோவரை அபராதம் விதிக்க முடியும். எனினும் தடை விதிக்கப்பட்ட முதல் ஆண்டில் சுமார் 300 பெண்கள் தடையை மீறி செயற்பட்டு சிக்கியதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
Post a Comment