பங்களாதேஷிலும் கிரிக்கெட் சூதாட்டம் - முன்னாள் கெப்டன் சிக்கினார்
இந்தியாவில் லாபகரமான தொழிலாக ஐ.பி.எல். உருவெடுத்ததையடுத்து, அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிலையில் ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 3 வீரர்கள், ஏராளமான தரகர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வங்கதேச பிரீமியர் லீக் போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இரண்டாவது சீசன் போட்டியின்போது, பிப்ரவரி 2-ம்தேதி டாக்கா கிளாடியேட்டர்ஸ்- சிட்டகாங் கிங்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் கிளாடியேட்டர்ஸ் நட்சத்திர வீரரும், தேசிய அணியின் முன்னாள் கேப்டனுமான அஷ்ரபுல், எதிரணி தோல்வியடைவதற்காக 12800 டாலர்கள் பணம் கொடுத்ததாகவும், அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.), ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தியது. விசாரணையில், சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டதை அஷ்ரபுல் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவரை அனைத்து பிரிவு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவா நஸ்முல் ஹசன் நிருபர்களிடம் கூறுகையில், “நான் அஷ்ரபுல்லிடம் பேசினேன். அப்போது, சூதாட்டத்தில் தான் சம்பந்தப்பட்டதை ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக கூறினார். இதனால் விசாரணை அறிக்கை வரும் வரையில், அஷ்ரபுல் எந்த போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்” என்றார்.
அஸ்ரபுல் இளம்வயதில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment