பசுவின் சாணத்திலிருந்து விமானத்திற்கு எரிபொருள் - அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்
பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளால், விமானத்தை இயக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், "நவீன விமான தயாரிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம்' குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு, தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இதில், சிறந்த ஐந்து திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதைப் பற்றிய ஆராய்ச்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் முதலிடம் பிடித்த திட்டம், பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளைக் கொண்டு விமானத்தை இயக்க முடியும் என்பதாகும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள், இந்த திட்டத்தை சமர்ப்பித்து முதலிடம் பிடித்தனர்.
அவர்களின் கூற்றுப்படி, பசு மாட்டின் சாணத்தில்இருந்து, மீத்தேன் வாயுவை பிரித்தெடுத்து, ஒரு கொள்கலனில் சேகரித்து, அதை குளிர்விப்பதன் மூலம், விமான எரிபொருளாக பயன்படுத்தலாம். இதை வெறும் ஆய்வறிக்கையாக மட்டுமின்றி அதற்கான செயல்முறை விளக்கத்தையும் அவர்கள் செய்து காட்டினர். இதன்படி, ஒரு விமானத்தை இயக்குவதற்கு, 17,500 கேலன் மீத்தேன் வாயு தேவைப்படுகிறது. ஆனால், இதில் நடைமுறை சிக்கல் ஒன்றும் உள்ளது. ஒரு பசு மாடு, ஓராண்டில் வெளியேற்றும் சாணத்திலிருந்து, அதிகபட்சமாக, 70 கேலன் அளவே மீத்தேன் வாயுவை, பிரித்தெடுக்க முடியும்.
அந்த வகையில், ஒரு விமானத்தை இயக்க, 1,000 பசுக்கள், மூன்று மாதங்கள் வெளியேற்றும் சாணத்தில்இருந்து தயாரிக்கப்படும் மீத்தேன் வாயு தேவைப்படுகிறது. இது, நடைமுறையில் மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனினும், இந்த முறையில் தயாரிக்கப்படும் எரிபொருளின் விலை குறைவாக இருப்பதோடு, இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், விமான பயண கட்டணமும் குறைய வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகளும் விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்து உள்ளனர். எனவே, குறைந்த அளவிலான சாணத்திலிருந்து அதிக அளவு எரிபொருள் பிரித்தெடுப்பது குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment