Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்குமாயின் அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுக்கலாம்

(Adt) 13வது திருத்த சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தென்படுகிறது. இது சம்பந்தமாக எனது எதிர்ப்பை ஏற்கனவே பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.  இன்று சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட 6 அமைச்சர்கள் பகிரங்கமாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 

அவர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்களேயாயின் அரசாங்கத்திற்கு ஒரு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவித்ததாவது, 

13வது திருத்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரச பங்காளி கட்சிகளான வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஹெல உறுமய போன்றவை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியுமாயின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு 13ல் கை வைக்கக் வேண்டாம் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். 13ல் திருத்தம் கொண்டு வராமல் வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். 

அதே போல் 13ல் கை வைத்தால் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மாகாணசபை முறைமையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என இடது சாரி அமைச்சர் திஸ்ஸ விதாரன ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 13ஐ ஒழிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். 

இதையே மேலும் 2 அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். இவர்கள் 13வது திருத்த சட்டத்தில் எதனையும் அப்புறப்படுத்துவதற்கு இடங்கொடுக்கக்கூடாது. ஏதாவது ஒரு சரத்தினை குறிப்பாக மாகாணங்கள் இணையும் அதிகாரத்தை இல்லாதொழிக்க ஆதரவு வழங்கினால் கூட அது இனவாதிகளுக்கு சாதகமாகிவிடும். 

அதன்பிறகு 13வது திருத்த சட்டத்தில் ஏனையவற்றையும் இல்லாதொழிப்பது சுலபமாகிவிடும். ஆகவே 13வது திருத்த சட்டத்தில் எந்த ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தாலும் கூட அதனை முற்போக்குக் கொண்ட அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. 

என்னுடன் இணைந்து இன்னும் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் திருத்தம் மேற்கொண்டால் எதிர்த்து வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள். 

முஸ்லிம் காங்கிரஸும் இது சம்பந்தமான எமது நிலைப்பாட்டை எடுக்குமாயின் அரசாங்கத்திற்கு ஒரு போதும் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்கப் போவதில்லை. 

2 comments:

  1. As long as Rauf is there that will not happened.

    ReplyDelete
  2. கடைசி வரைக்கும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் உட்பட முஸ்லிம் பெயர் தாங்கிக் கட்சிகள் எதுவும் தமது அதிருப்தியை கடுகளவும் தெரிவிக்காது. அவர்களின் பிடி அரசாங்கத்திடம் உள்ளது. அவர்களில் எவரும் உங்களைப் போல் சுயவலுவில் உள்ளவர்களல்ல!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.