இந்த முஸ்லிம்களின் அவலங்களை தீர்ப்பது யார்..?
யுத்தத்தினாலும், பயங்கரவாத்தினாலும் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீளக் குடியமர்த்திக் கொண்டு வருகின்றது. இந்த மீள்குடியேற்றம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஏத்தாளக் குளம் முஸ்லிம் கிராமத்தில் இடம்பெறாது இருப்பதாக அக்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சம்மாந்துறையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாயிலாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.
ஏத்தாளக் குளம் கல்லோயக் குடியேற்றத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றக் கிராமமாகும். இக்கிராமத்தில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் மதங்களைப் பின்பற்றிய சுமார் 55 குடும்பங்கள் 1965ஆம் ஆண்டுகளில் வாழ்ந்துள்ளார்கள். இவர்கள் வேளாண்மை பயிர்ச் செய்கை, மரவள்ளி, சோளம், மரக்கறி வகைகள் போன்றவைகளை உற்பத்தி செய்து வாழ்ந்ததோடு ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்கள். சுமார் 50 குடும்பங்கள் முஸ்லிம்களாக இருந்ததனால் இதனை ஒரு முஸ்லிம் கிராமம் என்றே அழைத்தார்கள். ஆயினும், மிகவும் ஒற்றுமைப்பட்ட மக்களாகவே இவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் இந்த கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. 1987ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இக்கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட தாக்குதல்களினால் இக்கிராமத்து மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பல திசைகளிலும் சிதறி ஓடித் தப்பிக் கொண்டார்கள்.
தங்களது கிராமத்தை விட்டு தப்பியோடிய இம்மக்கள் சம்மாந்துறையில் தங்களது உறவினர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் அகதிகளாக தங்கிருந்தார்கள். இந்த அவல வாழ்க்கையை சுமார் 25 வருடங்கள் கழித்த ஏத்தாளக்குளத்து மக்களின் துயர் துடைப்பதற்கு அரசாங்கமோ, அதிகாரிகளோ, அரசியல் பிரதிநிதிகளோ முன்வரவில்லை.
அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளை முற்றாக தோல்வியடையச் செய்ததன் பின்னர், இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற அமைச்சின் மூலமாக குடியேற்றிக் கொண்டு வருகின்றது. ஆனால், ஆயுதாரிகளின் தாக்குதல்களுக்கு முதலில் உள்ளான முஸ்லிம் கிராமங்களில் ஒன்றாகவுள்ள ஏத்தாளக்குளத்து மக்களின் மீள்குடியேற்றத்திற்கு நடவடிக்கைகளை எடுக்காது இருப்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக் குடியேற வேண்டிய மக்களை அரசாங்கத்திற்கு அடையாளப்படுத்தி மீள்குடியேற்ற வேண்டிய சிபார்சுகளைச் செய்ய வேண்டியது பிரதேச செயலகங்களின் பொறுப்பாகும். ஆனால், ஏத்தாளக்குளம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளது. ஆயினும், இப்பிரதேச செயலகம் ஏத்தாளக்குளத்துக் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்று அறிவிக்கவில்லை. ஏத்தாளக்குளத்து கிராம மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னமென்று மீள்குடியேற்ற அமைச்சில் விசாரித்த போது, இந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாவிதன்வெளி பிரதேச செயலகம் தங்களுக்கு அறிவிக்கவில்லை என்று விடை கிடைத்தது.
இதனையடுத்து, இக்கிராத்து மக்களின் மீது அக்கரை கொண்ட ஒரு குழுவினர் சவூதி அரேபிய நாட்டின் இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையிலான ஒரு குழுவினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தோடு கதைத்த போது ஏத்தாளக்குளம் என்ற கிராமம் இருப்பது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென்று தெரிவிக்கப்பட்டதாக இக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரும் அரசாங்கம் தங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாது இருக்கின்றதே என்ற கவலையுடன் தங்களின் மண்ணைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் நான்கு குடும்பங்கள் இங்கு தாங்களாகவே குடியேறியுள்ளார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையைத் அடுத்து ஏனையவர்களும் மீளக் குடியேறுவதற்கு எண்ணமுடையவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால், அவர்கள் மீளக்குடியேறுவதற்கு எந்த வசதிகளும் ஏத்தாளக் கிராமத்தில் கிடையாது. அங்கு தண்ணீர் வசதியில்லை, பாதைகள் புனரமைக்கப்பட வேண்டும், மின்சார இணைப்புக்கள் செய்யப்பட வேண்டும். வீடுகள் அமைக்கப்பட வேண்டும். எல்லா அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதனை சாதாரணமாக செய்துவிட முடியாது. அரசாங்கத்தின் பெரும் நிதியின் மூலமாகவே மேற்கொள்ளல் முடியும்.
புறக்கணிக்கபட்டுள்ள இக்கிராமத்தின் மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். இக்கிராமத்தின் மீள்குடியேற்றத்திற்கு அரசியல் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இக்கிராமத்தைப் பற்றி சிந்திக்காது வேறு திசைகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தேர்தல் காலத்தில் மக்களின் வாசலுக்குச் சென்றவர்கள் தற்போது இக்கிராமத்து மக்களைக் கண்டு ஓடி ஒழிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் பேசப்படும் சமூகப்பற்று தேர்தல் முடிந்ததும் இல்லாமல் போவது கண்டனத்திற்குரியதாகும்.
இங்கு குடியேறியுள்ள குடும்பத்தினர் மரவள்ளி மற்றும் சோளம் போன்றவற்றை செய்கை பண்ணியுள்ளார்கள். இவற்றை இரவு வேளைகளில் காட்டு யானைகள் வந்து தாக்கி அழிப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இரவு வேளைகளில் இக்கிராமம் இருளில் மூழ்கிக் காணப்படுவதனாலும், யானைகள் வருவதனாலும் இக்குடும்பத்தினர் பெரும் பயத்தின் மத்தியில் தமது நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சுப் பதவிக்கு சண்டை, தலைவர் பதவிக்குச் சண்டை, கை ஊட்டல் வாங்குவதில் சண்டை, பொய் சொல்லுவதில் சண்டை இவைகள்தான் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் தகுதிகளாகும். இந்தத் தகுதிகளை வைத்துக் கொண்டு ஏத்தாளக்குளத்து மக்களை மீள்குடியேற்றம் செய்யவும் முடியாது. மக்களின் வாழ்வுக்கு சேவை செய்யவும் முடியாது.
ஸ்ரீ.ல.மு.கா. தலைவரே.. கண்ணில் பட்டதா?
ReplyDeleteதே.கா. தலைவரே... கண்ணில் பட்டதா?
அ.இ.மு.கா. தலைவரே.. கண்ணில் பட்டதா..?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-