இலங்கைக்கு சீனா வழங்கும் வெற்றுக் காசோலை
(The Sundaytimes + நித்தியபாரதி)
மேற்குலக நாடுகளும், மேற்குலக நிதி வழங்குனர்களான உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்றன சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடன் வழங்குவதில் மிக இறுக்கமான நிபந்தனைகளை முன்வைத்து வரும் நிலையில், சிறிலங்காவுக்கு நிதிசார் கடன்களையோ அல்லது மானியங்களையோ வழங்குவதில் சீனா எவ்வித கேள்விகளையும் கேட்காது உதவிவருகிறது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நாட்டின் அதிபர் மற்றும் அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் கடந்த சில ஆண்டுகளாக சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது போன்று தற்போது அவர் தனது சீனாவுக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார். சிறிலங்கா அதிபரின் ஒவ்வொரு சீனப் பயணமும் வெவ்வேறு நோக்கத்தைக் கொண்டுள்ளது.
அதாவது மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராகப் பதவியேற்ற ஆரம்ப ஆண்டுகளில், வடக்கில் நிலைகொண்டிருந்த பிரிவினைவாதத்தை அழிப்பதற்காக சீன இராணுவ ஆயுத தளபாடங்களைப் பெற்றுக் கொள்வதை முதன்மைப்படுத்தி, சீனாவுக்கான தனது சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஊடாக சிறிலங்காவுக்கு சீனாவானது ஆயுத வெடிபொருட்களை கடனாக வழங்கியிருந்தது. இவ்வாறான ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் இவ்விரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் உண்டான உடன்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
சீனாவின் தாராளவாத பொருளாதாரமானது அண்மைக்காலத்தில், ஆயுத வெடிபொருள் விற்பனை, ஊழல் மற்றும் மோசடி போன்ற கறைகள் படியாமல் காணப்படவில்லை. ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எப்போதும் கொள்கலன் தாங்கி ஒன்றின் மூடி உறுதியாகக் காணப்படுவது போல், உறுதியாக காணப்படுகின்றன.
2009ன் பின்னர், அதாவது சிறிலங்கா புதியதோர் பரிணாமத்தை அடைந்த பின்னர் தற்போது சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் சீனாவுக்கான சுற்றுப் பயணமானது இயல்பாக பொருளாதார அபிவிருத்தியை வலியுறுத்தியதாகக் காணப்படுகிறது. மேற்குலக நாடுகளும், மேற்குலக நிதி வழங்குனர்களான உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்றன சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடன் வழங்குவதில் மிக இறுக்கமான நிபந்தனைகளை முன்வைத்து வரும் நிலையில், சிறிலங்காவுக்கு நிதிசார் கடன்களையோ அல்லது மானியங்களையோ வழங்குவதில் சீனா எவ்வித கேள்விகளையும் கேட்காது உதவிவருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், சிறிலங்கா அதிபரின் சீனாவுக்கான அண்மைய பயணமானது மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்கா அதிபர் சீனாவுக்கு புறப்படுவது தொடர்பாகவோ அல்லது அவர் மீண்டும் சிறிலங்காவுக்கு திரும்புவது தொடர்பாகவோ உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சீன சிறிலங்கா உறவை மேலும் பலப்படுத்துவதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து உரையாடியுள்ளதாகவும், சீனா, சிறிலங்காவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உடன்பட்டதாகவும் சிறிலங்கா அதிபர் சீனாவிலிருந்து திரும்பி வந்ததன் பின்னர் இவரது செயலகத்திலிருந்து ஊடகங்களுக்கு மிகச் சுருக்கமான அறிக்கை ஒன்று வழங்கப்பட்டது.
கொழும்பு – யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலை உட்பட சில அதிவேக நெடுஞ்சாலைகள் புனரமைப்பு, வீதி வலையமைப்புக்கள் மற்றும் தொடரூந்துப் பாதைகள் புனரமைப்பு போன்றன உள்ளடங்கலான போக்குவரத்து துறை சார் அபிவிருத்திகள், நீர் வழங்கல் திட்டங்கள் கொழும்பில் தேசிய வைத்தியசாலையைத் தரமுயர்த்துதல், றாகம போதனா வைத்தியசாலையை தரமுயர்த்துதல் போன்றன உள்ளடங்கலாக பல்வேறு திட்டங்களுக்கு சீனா உதவி வழங்கவுள்ளதாக இந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனாவுக்கான சுற்றுப் பயணத்தின் போது சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுக்களை நடாத்தினார். கொலனித்துவ காலத்திலிருந்ததை விட தற்போது சிறிலங்காவின் பொருளாதார முறைகள் மாறியுள்ளதாக சிறிலங்கா அதிபர் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் தெரிவித்திருந்தார். சீனாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சீனாவுடனான சிறிலங்காவின் மிக நெருக்கமான பாதுகாப்பு உறவுகள் தொடர்பாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சீனாவுக்கான சிறிலங்கா அதிபரின் சுற்றுப் பயணமானது பூகோள அரசியல் சார் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இராஜதந்திரக் கற்கைநெறியைக் கற்பதற்காக சிறிலங்க வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் சிலர் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதானது சிறிலங்கா – சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் பாதுகாப்பு சார் உறவின் நெருக்கத்தை அறியமுடியும்.
சீனாவிடமிருந்து கடனாகப் பெறும் நிதி மீண்டும் சீனப் பொருளாதாரத்திற்கே நன்மை பயக்கிறது. சிறிலங்காவில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனத் தொழிலாளிகள் வரவழைக்கப்படுகின்றனர். பாரிய திட்டங்களுக்காக சிறிலங்கா கடந்த நான்கு ஆண்டுகளில் 391.7 பில்லியன் ரூபாக்களை முதலீடு செய்துள்ளது. இந்த நிதியானது வெவ்வேறு ஐந்து அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று மட்டுமே முற்றாக பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து திட்டங்களும் சீன நிறுவனங்களால் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக சீனாவால் வழங்கப்பட்ட நிதியானது சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. நீண்ட காலத் திட்டங்களுக்கு 3 சதவீதம் தொடக்கம் 6 சதவீதமும், குறுகிய கால கடனுக்கு 2 சதவீதமும் வட்டியாகப் பெறப்படுகிறது.
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகமானது 'சீன துறைமுக பொறியியலாளர் நிறுவனத்தால்' 149.2 பில்லியன் ரூபாக்கள் செலவில் மேற்கொள்ளப்படுகின்றது. இதேபோன்று கொழும்பு தெற்கு துறைமுகத்துடன் இணைந்துள்ள துறைமுக நகரத்தைக் கட்டியெழுப்புவதற்கான உடன்படிக்கையும் இந்த நிறுவனத்துடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 85.4 பில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாத்தல விமான நிலையக் கட்டுமானத்தையும் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 22.7 பில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்குகிறது. இதற்கான வட்டி வீதம் மூன்று தொடக்கம் ஆறு சதவீதமாகும். இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு சீனத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத் திட்டமானது 'சீன இயந்திர பொறியியல் கூட்டுறவுச் சங்கத்தால்' 51.2 பில்லியன் ரூபாக்கள் செலவில் மேற்கொள்ளப்படுகின்றது. கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தையும் சீன துறைமுக பொறியியலாளர் நிறுவனத்தால் 68.3 பில்லியன் ரூபாக்கள் செலவில் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பிலுள்ள நெலும் பொகுன கலைக்கூடம் 3.08 பில்லியன் ரூபாக்கள் செலவில் சீன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 சதவீதமான நிதியானது சீன அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்டது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய கோபுரம் ஒன்றை கொழும்பில் 11.9 பில்லியன் ரூபாக்கள் செலவில் நிர்மாணிப்பது தொடர்பாக சிறிலங்கா ஆலோசித்து வருகிறது. இதற்கான கட்டுமாணத்தை சீன தேசிய இலத்திரனியல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் மற்றும் Aerospace Long-March International Trade Col. Ltd போன்றன இணைந்து மேற்கொள்ளவுள்ளன.
2007 தொடக்கம் 2011 வரை சீனாவானது சிறிலங்காவுக்கு 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இதில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகவும், 24 மில்லியன் டொலர்கள் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டையை மாத்தறையுடன் இணைக்கும் 27 கிலோமீற்றர் தூரமான ஒற்றைவழி தொடரூந்துப் பாதையை அமைப்பதற்காக சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது சிறிலங்காவுக்கு சில மாதங்களில் 278.2 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. சிறிலங்காவின் தெற்கில் கட்டுமாணத் திட்டத்திற்காக சீன அரசாங்கம் 240 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. அம்பாந்தோட்டையில் போக்குவரத்து கேந்திர நிலையத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு மேம்பாலங்கள் மற்றும் வீதிகளை அமைப்பதற்காக சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது நிதி வழங்கிவருகிறது. சிறிலங்காவில் கட்டப்படும் இரண்டாவது மிகப்பெரிய குளமான, Moragahakanda திட்டத்திற்காக Sinohydro நிறுவனம் 382 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
உலகிலுள்ள 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தகவல் அளித்தல் சட்ட உரிமை நடைமுறையிலுள்ளது. ஆனால் சீனா மற்றும் சிறிலங்கா இந்தச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதாவது இவ்வாறான கடன்கள் எவ்வாறு செலவழிக்கப்படுகின்றன, தனிப்பட்டவர்களுக்கு எவ்வளவு தொகை தரகுக் கூலியாக வழங்கப்படுகின்றன, அரசியற் கட்சிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகின்றன, இந்த நிதி எவ்வாறு விரயமாக்கப்படுகின்றன என்பது தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எதிர்கால சந்ததிகள் செலுத்த வேண்டிய கடன்களாக இவை காணப்படுகின்றன.
சிறிலங்காவைச் சூழவுள்ள நீர்ப்பரப்பை தனது தனிப்பட்ட நலனுக்காக சீனா பயன்படுத்த விரும்புகிறது. இந்நிலையில் சீனாவிடமிருந்து கடனாகப் பெற்று மேற்கொள்ளப்படும் இந்தக் கடன்கள் அனைத்தும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பயன்படுத்தினால் நல்லம். ஆனால் சீனக் கடனுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்றன சிறிலங்காவுக்கு வழங்கும் கடன்களில் குறிப்பிட்ட தொகையானது வரியாகச் செலுத்தப்படுகிறது. இதனைப் பெறும் சிறிலங்கா கணக்கறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இது கடுமையாக உழைக்க வேண்டும். கடனை மீள அடைப்பதற்கு சிறிலங்கா செயற்பட வேண்டும். ஆனால் சீனக் கடனைப் பொறுத்தளவில், இது கிட்டத்தட்ட வெற்றுக் காசோலை போன்று காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையை சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வங்கிகள் விட்டுக் கொடுப்பதால் சீன வங்கிகள் மீண்டும் மீண்டும் இதனைக் கடைப்பிடித்து சிறிலங்காவுக்கு வழங்கும் கடன் தொடர்பில் சரியான கணக்காய்வுகளைப் பேணுவதில்லை.
ஒரு வங்கி அல்லது நாட்டிடமிருந்து கடனைப் பெறுவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. கடன் வழங்குவோர், கடனைப் பெறுவோர் எவ்வாறு நிதியைச் செலவழிக்கிறார்கள் என்பதை ஆராயவேண்டும். அமெரிக்காவிடமிருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ அல்லது எந்த நாட்டிடமிருந்தும் பெறப்படும் கடன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.
Post a Comment