சுனாமியால் சேதமடைந்த இடிபாடுகளை எப்போது சுத்தப்படுத்துவார்கள?
(ஏ.எல்.ஜுனைதீன்)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கடலிலிருந்து கடற்கரை வீதியின் எல்லை வரை உள்ள சுனாமியால் சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள் என்பன கரையோரப் பாதுகாப்பின் நிமிர்த்தம் கல்முனை மாநகர சபையால் முற்றாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை உடைக்கப்பட்ட பொருட்கள் கற்கள் உடைவுகள் என்பனவை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி கடற் பிரதேசம் சுத்தப்படுத்தப்படவில்லை என இங்குள்ள மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம் மர்ஹும் மீராசாகிப் மீனவர் வாசிகசாலை ஆகிய இடங்களுக்கு முன்பாக உள்ள கடற்கரைப் பிரதேசத்திலேயே தரை மட்டமாக்கப்பட்ட கட்டடங்களின் உடைவுகள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே பெரும் அளவில் விடப்பட்டிருக்கின்றன. எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக் கட்டட உடைவுகளை அப்புறப்படுத்தாததன் காரணமாக இதற்குள் பாம்பு மற்றும் கொடிய பூச்சிக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் கடற் பிரதேசத்தில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் மீன் பிடி வலைகளை சரி செய்து மணலில் விரித்து போட முடியாத நிலை காணப்படுவதாகவும் இப்பிரதேச மீனவர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்குக் கவலையுடன் தெரிவித்தனர்.
இதேவேளை இக்கட்டட உடைவுகளுக்கு மத்தியில் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் “எமது உயிரைக் காக்கின்ற நமது எல்லோருக்கும் ஜீவியத்தைத் தருகின்ற கடல் பிரதேசத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அதற்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்” என்ற கருத்து தரும் வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றை தனிச் சிங்களத்தில் எழுதி நட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment