Header Ads



அமெரிக்காவை காட்டிக்கொடுத்தவர் ரஷ்யாவில்..?

அமெரிக்காவின் உளவு பிரிவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஊழியரான எட்வர்டு ஸ்நோடென் போன் ஒட்டு கேட்பு விவகாரங்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதை உலகிற்கு தெரியப்படுத்தினார்.

மேலும், தான் அமெரிக்காவில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி ஹாங்காங் நகரில் உள்ள மறைவிடத்தில் கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து தங்கியிருந்து பல ரகசியங்களை தொடர்ந்து அவர் வெளியிட்டு வந்தார்.

சீனாவின் மொபைல் போன் கம்பெனிகள் மற்றும் பீஜிங் பல்கலை கழகம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களை அமெரிக்கா ஊடுருவி அவற்றில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலையும் அவர் நேற்று வெளியிட்டார்.

எட்வர்டு ஸ்நோடென்-னை ஹாங்காங்கில் இருந்து நாடுகடத்தி அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தனது உயிருக்கு அமெரிக்க உளவுத்துறையினரால் ஆபத்து உள்ளதாக எட்வர்டு ஸ்நோடென் தெரிவித்திருந்தார்.

எட்வர்டு ஸ்நோடென்-னை ஹாங்காங்கிலிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்து செல்ல தயார் நிலையில் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் காத்திருப்பதாக நாடுகடத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்ஜேக்கு சொந்தமான ‘விக்கி லீக்ஸ்’ அறிவித்திருந்தது.

அமெரிக்காவின் வேண்டுகோளின்படி எட்வர்டு ஸ்நோடென்-னை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்களை அமெரிக்கா வழங்காததால் அவர் எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை எங்களால் தடுக்கமுடியாது என ஹாங்காங் அரசு கைவிரித்து விட்டது.

இதற்கிடையில், இன்று காலை ஹாங்காங்கை விட்டு அவர் வெளியேறி விட்டதாகவும் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு செல்லும் ‘ஏரோ ஃபிளைட் எஸ்.யூ. 213’ விமானத்தில் அவர் ஏறிச் சென்றதை சிலர் பார்த்ததாகவும் ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அந்த விமானத்தில் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி மாலை 5.05 மணிக்கு எட்வர்டு ஸ்நோடென் வந்து சேர்ந்தார். ‘எட்வர்டு ஸ்நோடென்-னை கைது செய்வதற்கு தேவையான எந்த புகார்களோ, உத்தரவோ எங்களிடம் இல்லை’ என  ரஷ்ய அதிகாரிகளும் கைவிரித்து விட்டனர்.

ஏற்கனவே சிரியாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கும் ரஷ்ய அதிபர் புதினிற்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் வேளையில் ஸ்நோடென் விவகாரம் எரியும் தீயில் எண்ணெய் வார்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷ்யா வழியாக வெனிசுலா நாட்டிற்கு செல்லும் அவர் வெனிசுலா அல்லது கென்யா நாட்டில் தஞ்சம் அடையக்கூடும் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.