Header Ads



முஸ்லிம் வர்த்தகர் சியாம் படுகொலை - நீதிமன்ற விசாரணையில் புதிய தகவல்கள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி முறைப்பாட்டாளர் சார்பாக சாட்சியமளிப்பவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இரகசிய பொலிஸார் 25-06-2013 கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவித்தனர்.

கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் வாஸ்குணவர்த்தனவின் கைத்தொலை பேசியின் மூலம் தற்போது சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள ஒருவரின் மனைவிக்கு 25 தடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுத்தல்களை விடுத்துள்ளதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக்கர, வாஸ் குணவர்த்தனவின் மனைவியை நீதிமன்றத்துக்கு அழைத்து, முதல் தடவை என்பதால் எச்சரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், நேற்று ஆஜரான வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக மாஜிஸ்திரேட் ஏ.எம். சாஹப்தீன், அன்றைய தினம் வாஸ்குணவர்தனவின் மனைவிக்கும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார். இதன்போது வாஸ் குணவர்தனவின் மனைவிக்கும் அழைப்பாணை விடுக்குமாறும் உத்தரவிட்டார்.

சந்தேக நபரான வாஸ் குணவர்தன நேற்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இரகசியப் பொலிஸ் அதிகாரி ரஞ்ஜித் முனசிங்கவுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக்கர, விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுவதால் காட்சியப் பொருட்களை இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஷியாம் என்பவரின் கையடக்க தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அது சுத்தியலால் அடித்து நொருக்கப்பட்டும், உழியொன்றினால் குத்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபராக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள காமினி சரத் சந்திர என்பவர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் மாஜிஸ்திரேட்டிடம் வழங்கியுள்ள வாக்குமூலத்தை மேலதிக விசாரணைக்காக இரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறும் ஷானி அபேசேக்கர கேட்டுக் கொண்டார்.

ஷியாமின் நண்பரான பெளசுதீன் என்ற சந்தேக நபரே அடித்து நெருக்கியதாக சாஹ¥ல் ஹமீத் என்பவரின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் தடுத்து வைக்கும் உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஷானி அபேசேக்கர, சாட்சியமளிப்பவர்களுக்கு இடையூறு அச்சுறுத்தல் இருப்பவர்கள் தொடர்பாக விசாரணைகள் செய்து வருவதாகவும் சந்தேக நபர்களாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

சட்டத்தரணி அனுஜ பிரேம ரட்ணவுடன் சந்தேக நபர் சார்பாக ஆஜராகியுள்ள சட்டத்தரணி அஜித் பத்திரன சந்தேக நபர் கைதான வழிமுறைகள் பிழையானது என்றும் சந்தேக நபருக்கு எதிராக சுயாதீனமான சாட்சியங்கள் இதுவரை பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்கு மூலத்தை இரகசிய பொலிஸாரிடம் வழங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சந்தேக நபர் சார்பாக ஆஜராயிருந்த மற்றைய சட்டத்தரணி அனுஜ பிரேமரட்ண வாக்கு மூலத்தை இரகசிய பொலிஸாருக்கு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் குறிப்பிட்டார். இது விடயமாக ஆராய்ந்த மேலதிக மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தற்போது உத்தரவிடப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

வாஸ் குணவர்தனவின் மனைவி தொடர்பாக தெரிவித்த ஏ.எஸ்.பி. ஷானி அபேசேக்கர, சந்தேக நபராக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் காமினி சரத் சந்திரவின் மனைவிக்கு தொலைபேசி மூலமாக பல சந்தர்ப்பங்களில் இடையூறு செய்ததாகவும், அச்சுறுத்தல் செய்ததாகவும் தெரிவித்தார்.

கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவின் மனைவி தொலைபேசி மூலம் “உங்களுடைய கணவன் அரச தரப்பு சாட்சியாளராக மாறப் போவதாக அறிந்தேன். அப்படி செய்ய வேண்டாம் என்று கூறுங்கள். எங்களுக்கு எதிராக பேசப் போகிaர்களா? உங்களது குடும்பத்தில் யாருடையதாவது தொலைபேசி இலக்கம் ஒன்றை தாருங்கள்” என்று கூறியதாக ஷானி அபேசேகர தெரிவித்தார்.

இதேபோன்று வாஸ் குணவர்தனவின் மனைவி மேலும் இரு சாட்சியாளர்களுக்கும் இவ்வாறு இடையூறு அச்சுறுத்தல் செய்துள்ளதாகவும் சந்தேக நபரான சரத் சந்திரவின் மனைவி கொட்டவெஹெர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் ஷானி அபேசேக்கர தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின் இறுதியில் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர், வர்த்தகர் பாவித்த செலியூலர் தொலைபேசி உட்பட 7 தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வாளர்களு க்கு அனுப்புமாறும் மேலதிக மாஜிஸ்திரேட் ஏ.எம். சஹாப்தீன் உத்தரவிட்டார்.

இதன்படி, ஷியாமை கடத்த பயன்படுத்தியதாக கூறப்படும் கெப்ரக வாகனம் மற்றும் வான் அவரது செலியூலர் தொலைபேசி, அதனை அடித்து நொருக்க பயன்படுத்திய சுத்தியல், உழி, சந்தேக நபரான வாஸ் குணவர்தனவிற்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு கைத் துப்பாக்கிகள் என்பன அரச பகுப்பாய்வாளர் திணைக் களத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டன.

அத்துடன் ஷியாமை கடத்த பயன்படுத்திய வேன் பின் ஆசனத்தில் சிந்தியுள்ள இரத்தம் ஷியாம் இரத்மா? என்பதை கண் டறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்யுமாறு அதற்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அனுப்புமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சிறைச்சாலைக்குள்ளேயே மேலும் வாக்கு மூலம் பெறுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்த வழக்கு விசாரணையின் போது அறியத்தருமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.