முஸ்லிம்களின் உணர்வுகள் புண்படக்கூடாதாம் - நீச்சல் உடைப் போட்டி ரத்து
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் வரும் செப்டம்பர் மாதம் உலக அழகிப் போட்டி நடைபெற உள்ளது. அவற்றில் நீச்சல் உடைப் போட்டியும் ஒன்று.
இந்தோனேசியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களின் உணர்வுகள் இந்த நிகழ்ச்சியினால் புண்படக்கூடாது என்ற எண்ணத்துடன் நீச்சல் உடை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் ஜூலியா மோர்லே கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கு பெறும் 137 போட்டியாளர்களும் நீச்சல் உடைக்குப் பதிலாகப் பாரம்பரிய உடை அலங்காரங்களில் தோன்றுவர் என்றும் அவர் தெரிவித்தார். மரியாதைக்குறைவை ஏற்படுத்தக்கூடிய எந்த சூழ்நிலையையும் தாம் உருவாக்கக்கூடாது என்றும் அவர் லண்டன் பத்திரிகையாளர்களிடம் செய்தி வெளியிட்டுள்ளார்.
போட்டியில் பங்குபெறும் அனைத்து நாடுகளின் மதிப்பும் முக்கியமானது என்று கூறும் ஜூலியா, இறுதிப் போட்டிக்கான உடை வடிவம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றார்.
இந்தோனேசியாவிற்கு சமீபத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வந்தவர்கள் அனைவரும் அவர்களின் ஆடை அலங்காரங்களினால் மிகவும் விமர்சிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மிகவும் கவனமுடன் நிகழ்ச்சியை வடிவமைத்து வருகின்றனர்.
சென்ற வருடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரபல பாப் இசை பாடகி லேடி காகாவின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அவர் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொண்டு வருவதாக விமர்சித்த முஸ்லிம் பிரிவினர் மேடையை எரித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
பாலியிலும், ஜகர்த்தாவிற்கு வெளியே உள்ள போகோரிலும் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டிகள் ஏற்கனவே முஸ்லிம் மதகுருமார்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment