Header Ads



"முஸ்லீம் சமுதாயம் தம் மேல் நிகழ்த்தப்பட்ட கலவரங்களை மறக்க கூடாதா..?

"முஸ்லீம் சமுதாயம் தம் மேல் நிகழ்த்தப்பட்ட குஜராத் கலவரங்களை மறக்க கூடாதா?" என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெய்பூரில் “சிறுபான்மையினர் பிரச்னைகள்” எனும் தலைப்பில் ஒரு செய்தி சானல் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், முஸ்லீம்களுக்கு எதிராக சில சம்பவங்கள் நடந்திருப்பதை ஒத்து கொள்வதாகவும் ஏன் நாம் அதை மறக்க முயற்சிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் 2002 க்கு முன்பு 12,000 மத கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

"ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான எக்கலவரமும் நடைபெறவில்லை" என்று கூறிய ராஜ்நாத்சிங், "பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால் தமக்கு மடல் எழுதினால் உடனே அப்பிரச்னையை தீர்ப்பேன்" என்றும் கூறினார். மேலும் "அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அல்லாமல் அன்பின் மூலம் மக்களின் உள்ளங்களை தொடவே பாஜக விரும்புவதாவும்" ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜ்நாத் சிங் பேசி முடித்தவுடன் அவரை இடைமறித்த ராஜஸ்தான் சிறுபான்மை ஆணைய தலைவர் மஹிர் ஆசாத், குஜராத்தில் சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி பல்லாண்டுகளாக மாநில அரசால் உபயோகப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சம் தொடர்வதாகவும் கூறி ராஜ்நாத் சிங் விளக்கமளிக்க கோரினார்.

மஹிர் ஆசாத் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்காமல் ராஜ்நாத் சிங் கருத்தரங்கை விட்டு வெளியேறினார். ராஜ்நாத்துக்கு ஆதரவாக விளக்கமளிக்க முன் வந்த பிஜேபி சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அமின் பதானை பேச விடாமல் பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர், "மஹிர் ஆசாத் பாஜக மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" என்று பிஜேபி செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறினார். inneram

No comments

Powered by Blogger.