யாழ்ப்பாணம் 'மதரஸா' (மன்பஉல் உலூம்) பாடசாலையை காப்பாற்ற உதவுங்கள்..!
யாழ்ப்பாணம் சின்ன மொஹிதீன் ஜும் ஆப்பள்ளிக்கு அருகில் இருக்கின்ற “மதரஸா” என வழங்கப்படும் “மன்பஉல் உலூம்” அரசினர் முதல்நிலைப் பாடசாலை, யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலரின் ஆரம்ப பாடசாலையாக அமையப்பெற்றிருந்தது. 1990 வரை குறித்த பாடசாலை யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் இயங்கிய முக்கிய ஒரு ஆரம்ப நிலைப்பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது “வண்/மேற்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை” என்பது இதற்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ பெயராகும்.
1990 களின் பின்னர் கைவிடப்பட்டிருந்த குறித்த பாடசாலையானது புலிகளின் களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்பட்டது. 1997களில் இராணுவ காவல் அரண் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டபோதிலும் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் பின்னர் கள்வர்களின் கோரப்பிடிக்குள் சிக்கி அதன் கதவு ஜன்னல்கள், கூறை முதலானவை சூறையாடப்பட்டன. 2003 களின் பின்னர் குறித்த பாடசாலையில் பாலர் பாடசாலையொன்றினை அமைக்க மாவடி வீதி, கற்குளம், சிவன்பண்ணை போன்ற பிரதேச தமிழ் மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு சில முஸ்லிம்களின் முயற்சியின் காரணமாக குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
2009 களின் பின்னர் குறித்த பாடாசாலையில் ஒரு சில முஸ்லிம் குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டன, மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர்களே அவ்வாறு தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சர்வோதய நிறுவனம் குறித்த பாடசாலை வளாகத்தை “இன ஐக்கியத்திற்கான பாலர் பாடசாலை” என்னும் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பெற்றுத்தருமாறு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரிடமும், கல்விக் காரியாலயத்திடமும் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில் பிரதேச செயலாளர் குறித்த பாடசாலையை சர்வோதயம் நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானித்து இது குறித்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பலகட்ட கலந்துறையாடல்களை மேற்கொண்டார். முஸ்லிம் பிரதிநிதிகள் எக்காரணம் கொண்டும் குறித்த பாடசாலையினை வேறு எவருக்கும் பெற்றுத்தரமாட்டோம் என உறுதிபடத் தெரிவித்தனர். குறிப்பாக யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் முன்னை நாள் தலைவர்களான சகோ. தாஹிர், சகோ.ஜாமால். சகோ,நிலாம் ஆகியோர் குறித்த தீர்மானத்தில் மிகவும் உறுதியாக இருந்தனர்.
அதேபோன்று வைத்தீஸ்வரா கல்லூரியும் தமது ஆரம்ப பாடசாலைக்கான இடப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு குறித்த பாடசாலையைப் பெற்றுத்தரும் படி கல்விக்கந்தோரில் விண்ணப்பித்திருந்தனர்.
முஸ்லிம் சமூகப்பிரதிநிதிகளின் அயாராத முயற்சியின் விளைவாக மாற்று மக்கள் குறித்த பாடசாலையை தட்டிப்பறிக்கும் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரும் குறித்த பாடசாலை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நிபந்தனையுடன் கால அவகாசத்தினையும் விதித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பாடசாலையினை முஸ்லிம் பாலர் பாடசாலையாக வடிவமைக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகளுக்கு பொறுப்பாக யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவரும், மொஹிதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் நிர்வாகிகளுள் ஒருவருமான சகோதரர் ஜமால் மொஹிதீன் செயற்படுகின்றார். ஆரம்பக்கட்ட திருத்தப்பணிகள் யாழ் முஸ்லிம் நலன்விரும்பிகளினால் மேற்கொள்ளப்படுகின்றன, மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க விரும்புவோர் சகோதர ஜமால் மொஹிதீன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் தொடர்பிலக்கம் 0774-458582.
Post a Comment