Header Ads



'தேசிய ஷூரா பேரவைக்கும், யூசுப் அல் கர்ளாவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'

(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)

இலங்கையில் பல்வேறு முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சன்மார்க்க அமைப்புக்கள்,தொண்டர் நிறுவனங்கள  இருக்கின்றன, அவையாவும் இந்த தேசத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய பாராளுமனறத்தில் கூட்டினைக்கப் பட்டோ அல்லது சமூக சேவை திணைக்களம் ,முஸ்லிம் விவகார திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களில் பதிவு செய்யப் பட்டோ முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் பெரும் பங்காற்றி வருகின்றன.

அதேபோன்று இலங்கையில் அரபு இஸ்லாமிய கலையகங்கள், சிறுவர் பள்ளிக் கூடங்களான குரான் மதரஸாக்கள் இலங்கையின் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப் பட்டு நடாத்தப் பட்டு வருகின்றன. 

இன்று வரை இலங்கையில் இயங்குகின்ற எந்தவொரு இஸ்லாமிய நிறுவனமோ அல்லது அரபு இஸ்லாமிய கற்கை நிறுவனங்களோ நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை  மற்றும்  சமாதான சக வாழ்விற்கோ, சட்டம் ஒழுங்கு என்பவற்றிற்கோ  அச்சுறுத்தலாக அமைகின்ற எந்தவொரு நடவடிக்கைகளிலும் தீவிரவாத செயற்பாடுகளிலும் ஈடு பட்டதில்லை, அதனை கடந்த  காலங்களில் பாதுகாப்புச் செயலாளர் கூட உறுதி செய்திருந்தார். 

மாறாக இலங்கையில் செயற்படுகின்ற சகல முஸ்லிம் சிவில் அரசியல் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் தமது தேசிய வாழ்வில் தேசத்தின் அமைதி சமாதானத்திற்கும், இறைமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும்,சமாதான சக வாழ்விற்கும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சவால்கள் விடுக்கப் பட்ட பொழுதெல்லாம் தமது தேசப் பற்றை உலகிற்கும் தேசத்திற்கும் பறை சாற்றியுள்ளார்கள்.   அடுத்த சமூகங்களுக்கு எந்த அளவிலும் குறைவில்லாது பாரிய விலையையும் கொடுத்துள்ளார்கள்.

 இந்த நாட்டில் இனமுருகல்கள் வன்முறையாக வெடித்துச் சிதறிய பொழுது கடந்த மூன்று தசாப்தகாலமாக குரூர யுத்தம் முழு தேசத்தையும் காவு கொண்ட பொழுது வடக்கிலிருந்து முஸ்லிம்கள் முழுமையாக இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டார்கள்,கிழக்கில் பள்ளிவாயல்களில் சுட்டுக் கொல்லப்  பட்டார்கள், கிராமங்களில் அழிவுகளுக்கு ஆளானார்கள், சொந்த மண்ணில் உடல் பொருள் இழப்புக்களோடு அகதிகளாக்கப் பட்டார்கள்.

 எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும் முஸ்லிம்களது பள்ளிவாயலகளோ,  மதரசாக்களோ, சிவில் ,அரசியல் மற்றும் சன்மார்கத் தலைமைகளோ முஸ்லிம்களை வன்முறைகளை நாடுமாறு தூண்டவுமில்லை, தீவிரவாத ,பயங்கரவாத நடவடிக்கைகளை போதிக்கவுமில்லை மாறாக ஜனநாயக அரசியல் வழிமுறைகளையும், அமைதிவழி பேச்சு வார்த்தைகளையுமே வலியுறுத்தி இன்றுவரை எமது உரிமைகளுக்காக தேசிய அரசியலில் ,சிவில் சமூக நடவடிக்கைகளில் நாம் மிகவும்  அவதானமாகவும் பொறுப்புணர்வுடனும் தேசப் பற்றுடனும் வழி நடாத்தப் படுகின்றோம்.

இலங்கைமுஸ்லிம்களின் அரசியல் தலைமைகள், அதி உயர் சன்மார்கத் தலைமையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,  முஸ்லிம் கவுன்சில், இஸ்லாமியஅமைப்புக்கள், தரீக்காக்கள்  போன்ற சிவில் அமைப்புக்களும் பள்ளிவாயல்களும் பள்ளிவாயல் சம்மேலனங்களும் இலங்கை முஸ்லிம்களை அமைதியை சமாதானத்தை, மத சகிப்புத் தன்மையை, சமாதான சகவாழ்வை  தேசப் பற்றுடன் கூடிய மிதவாத சமூகமாக வழிநடாத்துவதில் வெற்றி கண்டுள்ளன.  ஆளும் எதிர்க் கட்சிகளுடன் தேசிய அரசியலில் பங்கு கொள்கின்ற ஜனநாயக விழுமியங்களை கடைப் பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தினை பல்வேறு கூறுகளாக வழி நடாத்துகின்ற அரசியல் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள், இஸ்லாமிய அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள் தங்களுக்குள் வேற்றுமைகள் களைந்து ஒருமைப்பாட்டுடன் முஸ்லிம்களது தேசிய வாழ்வில் சமூகத்தை வழி  நடாத்திச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அவ்வாறான சகல ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட உயர் ஆலோசனை சபை யொன்றை நிறுவும் முயற்சியை சிலர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றமை கவலைக்குரிய  விடயமாகும்.

 "ஷூரா" என்றால் கலந்தாலோசனை செய்தல் என்று பொருள் படும், ஒவ்வொரு அமைப்பும் தமது சமூகத்திற்கென  தனித்தனி நிகழ்ச்சி நிரல்களை வேலைத்திட்டங்களை கொண்டிருந்தாலும் முஸ்லிம்களது தேசிய வாழ்வில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் ,கருத்துப் பரிமாற்றங்கள், குறிப்பாக பிற சமூகங்களுடன் சகிப்புத் தனமையுடனும்  புரிந்துணர்வுடனும் வாழ்தல், தேசிய வாழ்வில் தங்களை தனிமைப்  கொள்ளாது இணைந்து வாழ்தல், எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நிதானமாக முகம் கொள்தல், அடுத்த சமூக ஆன்மீக சிவில்  தலைமைகளுடன் கலந்துரையாடல்களை புரிந்துணர்வுகளை வளர்த்துக் கொள்ளல் போன்ற இன்னோரன்ன உயரிய நோக்குடனேயே முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர்.

பொதுபல சேனா அமைப்பினர், கட்டாரில்  வாழ்கின்ற முஸ்லிம் உலகம் போற்றும் ஒரு இஸ்லாமிய அறிஞரான கலாநிதி யூஸுப் அல் -கர்ளாவி  இந்த முஸ்லிம் ஆலோசனை சபைக்கு உதவி ஒத்தாசை வழங்குவதாகவும் அவர் ஒரு இஸ்லாமிய அடிப்படை வாதியெனவும், அவரது இலங்கை   பிரதிநிதி இனாமுல்லாஹ் (நான்) எனவும்   எந்தவித அடிப்படையுமற்ற சந்தேகத்தை ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இங்கு ஒருசில விடயங்களை  தனிப்பட்டமுறையில் தெளிவு படுத்துவது எனது கடமையாகும்:

முதலாவதாக நான் இஸ்லாமிய அறிஞர் யூசுப் கர்ளாவி அவர்களது இலங்கைப் பிரதி நிதி அல்ல, மாறாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இலங்கைப் பிரதி நிதியாவேன். கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அதன் ஸ்தாபகர்களில் ஒருவர் மாத்திரமன்றி  தற்போதைய தலைவருமாவார்.

இரண்டாவதாக இந்த அமைப்பிலிருந்து எனக்கோ அல்லது இலங்கையில் வேறு எந்த அமைப்பிற்கோ எந்தவிதமான உதவிகளும் கிடைப்பதில்லை. குறிப்பாக தற்பொழுது இலங்கையில் பேசப்படும் முஸ்லிம் ஆலோசனை  சபையிற்கும் உலகில் வேறு எந்த அறிஞருக்கோ ஸ்தாபனத்திற்கோ எந்தவித தொடர்பும் இல்லை. 

முஸ்லிம் தேசிய ஆலோசனை (ஷூரா ) சபை உருவாக வேண்டும் என உழைக்கும் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவில் நான்  ஒரு உறுப்பினர் மாத்திரமே, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் இலங்கை ஜம்மியத்துல் உலமா உற்பட இலங்கையில் உள்ள பல்வேறு சட்டபூர்வமான இஸ்லாமிய அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் அமையப் பெறும் ஆலோசனை சபையில் நான் அங்கம் வகிக்கப் போவதில்லை என தெளிவாக தெரிவித்துமுள்ளேன்.

முஸ்லிம் உலகில் போற்றப்படும்  யூசுப் கர்ளாவி  அவர்கள்  இஸ்ரேல் போன்ற ஓரிரு நாடுகளால் அடிப்படை வாதியாக கருதப் படலாம், ஆனால்  உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை பெரும்பானமியான முஸ்லிம் நாடுகளாலும் முஸ்லிம்களாலும் போற்றப் படும் அறிஞர்களுள் அவரும் ஒருவராகும். இலங்கை வெளிவிவகார அமைச்சு அல்லது உளவுத்துறை இதனை அரபு முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்கலூடாக ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியும்.

 கலாநிதி யூசுப் கர்ளாவி அவர்களை கடந்த வருடமும் இந்த வருடமும் நான் இரு முறைகள் சந்தித்தேன், கடந்த வருடம் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர் என்ற வகையில் இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவருடன் கட்டார் சென்றிருந்த பொழுதும், இந்த வருடம் இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகளுடன் கட்டார் சென்றிருந்த பொழுதும் சந்தித்தேன். 

இன மத  மொழி கலாசார வேறுபாடுகள் நிறைந்த சமூகங்களில் கலந்துரையாடல்கள், புரிந்துணர்வுகள் சமாதான சக வாழ்விற்கான பெறுமானங்கள் குறித்து அதிகமதிகம் வலியுறுத்தும் முஸ்லிம் உலகம் போற்றும் ஒரு அறிஞர் என்ற வகையிலும், இஸ்லாமியர்கள் வேற்றுமைகளுக்கு மத்தியில் இணக்கம்  வலியுறுத்தும் சன்மார்க்க அறிஞர் என்ற வகையிலும் அவருடனான  சந்திப்பு எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் சிங்கள பௌத்தர்களுடன் பேணி வந்துள்ள நல்லுறவை மென் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும், தத்தமது தனித்துவங்களை பேணி  மாற்று மத சகோதரர்களுடன் தேசிய வாழ்வில்  இணங்கி வாழ்தல் வேண்டும்,  நிதானமும் மத சகிப்புத் தன்மையும் சமாதான சக வாழ்வின் அடிப்படை அம்சங்கள் என்றும், இலங்கை முஸ்லிம் அரபு உலகின் நட்பு நாடு என்றும் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வன்முறைகளை நாட வேண்டாம் என்றும் மிக அழகிய அறிவுரைகளை கலாநிதி கர்ளாவி அவர்கள்  சந்திப்புக்களின் பொழுது வலியுறுத்தினார்கள்.

முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக உள்நாட்டுச் சந்தையையும், வெளிநாட்டு சந்தைகளையும் குறிப்பாக அறபு முஸ்லிம் உலக நாடுகளின் சந்தைகளையும் குறுகிய இனவாத நோக்கில் கையாளாது இந்த நாட்டு பெரும்பான்மை சமூகத்தினரின் சுமார் 3500 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஹலால் தரச் சான்றிதழை வழங்கி வெளிநாட்டுச் செலாவணியை  ஈட்டுவதில்  தேசப் பற்றுடன் செய்து வந்த மகத்தான பணியினைக் கூட  தேசத் துரோகமாக சித்தரித்த பொழுது சமாதான  சகவாழ்வின் அவசியம் கருதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செய்த விட்டுக் கொடுப்புக்களைக் கூட கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் பாராட்டியிருந்தார்கள்.

 முஸ்லிம்  உலகின் எதிரிகளின் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு இஸ்லாமிய அறிஞர்களையும் இஸ்தாபனங்களையும்  முஸ்லிம் நாடுகளையும் பார்க்க விரும்புகின்ற சக்திகள் நிச்சயமாக எல்லா நெருக்கடி நிலைமைகளிலும் இலங்கைக்கு உதவுகின்ற அரபு முஸ்லிம் நட்பு நாடுகளுடனான எதிர்கால உறவை கேள்விக்குறியாக்கவே முனைகின்றனர் என இப்போதைக்கு கூறலாம்,அது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சும் உளவுத்துறையும் விழிப்பாக இருக்க வேண்டும் என முன்னால்  இராஜ தந்திரி என்ற வகையில் அறிவுறித்த விரும்புகின்றேன். 

இந்த நாட்டில் முஸ்லிம் தேசிய அரசியலில் எனக்கு கால் நூற்றாண்டு கால் அனுபவம் ஈடுபாடு இருக்கிறது, வடகிழக்கில் இனமுருகல்கள் உச்சகட்டத்தில் இருந்தபொழுது முஸ்லிம் இளைஞர்கள் தவறான வழிகளில் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடன் ஜனநாயக அரசியல் வழிமுறைகளில் இந்த சமூகத்தை வழி  நடாத்திய  இஸ்லாமிய அறிஞர்களுள் நானும் ஒருவன் என்பதனையும் இன்று வரை உடன்பாடுகளுடனும் முரண்பாடுகளுடனும் முஸ்லிம்களது தேசிய அரசியல் வாழ்வில் முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து செயற்படுகின்றவன் என்பதனையும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் நிரந்தர  சமாதன சக வாழ்விற்காக, அரசியல் தீர்வு முயற்சிகளுக்காக, ஜனநாயக அரசியலில் தேசிய கட்சிகளோடு இணைந்து கால்  நூற்றாண்டு கால வாழ்வை அர்ப்பணித்த என்னை ஒரு தீவிரவாதியாக தேசத்திற்கு காட்ட விரும்புகின்ற சக்திகள் எனது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் கடந்தகால அரசியலையும் ஒருமுறை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்களைப் போன்ற தேசப் பற்றுள்ள ஜனநாயக அரசியலில் ஈடுபாடுள்ள இஸ்லாமிய கல்விமான்களை தீவிரவாதிகளாக அடிப்படை வாதிகளாக காட்டுவதில் நிச்சயமாக இந்த தேசத்தின் நலன்கள் இருக்க மாட்டது என்பதனை உறுதிபடக் கூற முடியும். மாறாக இந்த தேசத்தில் பெரும்பான்மை சக்திகளையும் முஸ்லிம்களையும் முரண்பாடுகுளுக்குள் தள்ளி தததமது நலன்களை அடைந்து கொள்ள விரும்புகின்ற உள்நாட்டு பிற நாட்டு  சக்திகளுக்கு இலாபங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ஜெனிவாவில் மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவும் இஸ்ரவேலும் நோர்வேயும் இலங்கைக்கு எதிராக முன்வைத்த யுத்தக் குற்றச் சாட்டு பிரேரணை;  இந்த நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றிற்கு சர்வதேச தலையீடுகள் ஆபத்தானவை எனக் கருதி முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் ஜெனீவா வரை சென்று முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த மிதவாத சன்மார்க்கத் தலைமத்துவத்தையே அடிப்படைவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்ற ஒரு கூட்டத்தினர் நிச்சயமாக எந்தெந்த சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களில் செயற்படுகின்றார்கள் என்பதனை முழுதேசமும் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

  1. தேசிய சூறா சபையில் அரசியலுக்கோ அரசியல்வாதிகளுக்கோ இடமில்லை என கூறப்படுகிறது. ஆனால் இனாமுள்ளா தான் ஒரு தேசிய பற்றுள்ள அரசியல்வாதி என இங்கு தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த நிiலியில் சூறா சபையில் அரசியல்வாதிகள் இல்லை என கூறுவது மக்களை ஏமாற்றவதாகவே தெரிகிறது.
    சூறா சபைக்கும் ய+சுப் கர்ழாவிக்கும் தொடர்பு உண்டு என பல சேனா கூறினால் ஆம் அவர் ஒரு முஸ்லிம் கல்விமான் என்பதால் தொடர்புண்டு என கூறிவிட்டு போக வேண்டியதுதான். கர்ழாவி அல்கைதா உறுப்பினர் இல்லையே. இதற்கேன் பயப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.